ஜன தன திட்டம் – சுதந்திர இந்தியாவின் சாமானிய மக்களுக்கான வரலாற்றுச் சாதனை


நமது தேசத்தின் மிகப் பெரிய பொருளாதார பலமே மக்களின் சேமிக்கும் குணம் தான்.  சேமிப்பு என்பது நமது மக்களின் வாழ்வில் ஊறிப் போன ஒரு பழக்கம்; வாழ்க்கை முறை. இது தொன்று தொட்டு பாரம்பரியமாகவே இங்கு இருந்து வந்திருக்கின்றது.

அந்நியர்களின் ஆட்சிக் காலத்தில் நமது பொருளாதாரம் மிகப் பெரிய சரிவைச் சந்தித்தது. அதனால் பல நூற்றாண்டுகளாக உலகின் பொருளாதார சக்தியாக  விளங்கி வந்த நமது தேசம், ஒரு ஏழை நாடாக மாறிப் போனது. விவசாயம், உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்கள் எனப் பலவும் நசிந்து போயின.  

அந்தச் சமயத்தில் பெரும்பான்மை மக்களுக்கு வாழவே வழியில்லை. எனவே சேமிப்பு என்பதை அவர்களால் நினைத்துப் பார்க்க இயலாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.  மேலும் முந்தைய காலங்களில் இருந்து வந்த பாரம்பரிய நிதி சார்ந்த அமைப்பு முறைகள் எல்லாம் அப்படியே மழுங்கிப் போயின.

எனவே சுதந்திரம் பெற்ற சமயத்தில், மிகப் பெரும்பான்மையான மக்களுக்கு நிதி அமைப்புகளின் தொடர்பு எதுவும் இருக்கவில்லை. அந்தக் கால கட்டத்தில்  பொருளாதாரத்துக்கு அடிப்படை ஆதாரமாக விளங்கி, எண்பது விழுக்காட்டுக்கு மேற்பட்ட மக்கள் சார்ந்திருந்த துறையாக விவசாயம் இருந்து வந்தது. ஆனால் தொண்ணூறு விழுக்காட்டுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு அடிப்படை வங்கி உதவிகள் கூட எதுவும் கிடைக்கவில்லை; மாறாக அவர்கள் தங்களின் தேவைகளுக்கு மிக அதிக வட்டிக்குக் கடன் கொடுக்கும் தனியார்களையே நம்பி இருந்தனர். 

தொடர்ந்து வந்த காலங்களில் நிதி மற்றும் வங்கித் துறைகள் வளர்ச்சி பெற்ற போதும், பெரும்பான்மை மக்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்குவது என்பது எட்டாக் கனியாகவே இருந்து வந்தது. கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் வங்கிகளின் எண்ணிக்கை அதிகரித்து, சேவைகள் விரிவடைந்த போதும், அவை பெரும்பாலும்  பணக்காரர்களையும்,  படித்தவர்களையும்  மையப்படுத்தியே அமைந்திருந்தன. 

எனவே நிதித் துறையும், வங்கிகளும் பெரும்பான்மை சாமானிய மக்களை ஒதுக்கியே வைத்திருந்தன; அவர்களை உள்ளடக்கியதாக இல்லை. அதனால் மக்களின் சேமிப்புகள் அதிகரித்த போதும், சாமானிய மக்கள் தங்களின் சேமிப்புகளை வங்கி மற்றும் அமைப்பு சாராத வழிகளிலேயே அதிகமாக  மேற்கொண்டனர்.

நமது பொருளாதாரமே சிறு மற்றும் குறு தொழில்களை அடிப்படையாகக் கொண்டது. அவற்றையெல்லாம் நடத்துபவர்கள்  சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.  நாட்டின் பொருளாதாரத்தில் குடும்பங்கள் நடத்தும் அமைப்பு சாராத் தொழில்கள் தான் பெரும் பங்கினை வகித்து  வருகின்றன.  

இந்தியாவில் சிறிய தொழில்கள் மட்டுமே சுமார் ஆறு கோடி அளவு இருப்பதாக மத்திய அரசின் புள்ளி விபரம் தெரிவிக்கிறது. அவை தான் நாட்டிலேயே அதிகமாக பன்னிரண்டு கோடி பேருக்கு மேல் வேலை வாய்ப்பினை வழங்குகின்றன. ஆனால் அவற்றை நடத்துபவர்களில் பெரும்பான்மையோருக்கு வங்கி வசதிகள் எதுவும் கிடைப்பதில்லை.
உலக வங்கியின் ஒரு கணக்கெடுப்பு 2013 ஆம் ஆண்டில் இந்திய மக்களில் பாதிப்பேருக்கு கீழே தான் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் எனத் தெரிவிக்கிறது. அதனுடைய இன்னொரு புள்ளி விபரப்படி 2014 ஆம் ஆண்டில் உலக அளவில் வங்கிக் கணக்கில்லாத இளைஞர்களில் அதிகம் பேர், அதாவது 21 விழுக்காடு, நமது நாட்டில் தான் உள்ளதாகச் சொல்லியுள்ளது.

சாதாரண மக்கள் தான் அதிகம் உழைப்பவர்கள்; அவர்களுக்கு நிதி உதவிகள் அவசியம்; அவர்கள் நடத்தும் தொழில்கள்   நிதி அவசியமாகத் தேவைப்படுபவை. அவர்கள் நாட்டின் நிதி அமைப்புடன் இணையும் போது, தேவைப்படும் உதவிகளை அவர் தம் தொழில்களுக்குப் பெற்றுக் கொள்ள முடியும். மேலும் அவர்களின் சேமிப்புகளையும் ஒருமுகமாக வங்கிகளை நோக்கி வர வைக்க முடியும். அவற்றின் மூலம் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, நமது பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்.

ஆனால் இது குறித்து முந்தைய கால கட்டங்களில் அவ்வப்போது சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அவை முழுமையானதாக இல்லை; மேலும் அவற்றில் போதிய தீவிரம் காட்டப்படவில்லை. ஆனால் மோடி அரசு பதவியேற்ற பின்னர், முதன் முறையாக சாமானிய மக்களை நாட்டின் நிதி அமைப்பில் அங்கமாக இணைக்கும் வண்ணம், ஒரு ஒருங்கிணைந்த திட்டம் நடை முறைப்படுத்தப் பட்டுள்ளது.

அது தான் ஜன தன திட்டம் என்பதாகும். அதில் குறைந்த பட்ச இருப்புத் தொகை என எதுவும் இல்லாமலேயே வங்கிக் கணக்கினைத் தொடங்கலாம். அதற்கு டெபிட் கார்டு  கொடுக்கப்படும். குறைந்த பட்சத் தொகை இருக்க வேண்டும் என்பதே சாமானிய மக்களை கணக்குத் தொடங்க பயப்பட வைத்தது. அதை நீக்கியதன் மூலம் மக்களுக்கு இருந்த பயம் மறைந்து போனது. மேலும் டெபிட் கார்டு என்பது சாமானிய மனிதனுக்கும் கிடைக்கும் என்கின்ற முறையும் நடை முறையானது.

கணக்கினை முறையாக பராமரிக்கும் போது  அதற்கு ஓவர்டிராப்ட் வசதி கொடுக்கப்படுகிறது. அதன் மூலம் தேவைகளுக்கு மக்கள் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். திட்டத்தின் இன்னொரு அம்சமாக கூடவே வங்கி கணக்கு தொடங்குபவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய்க்கான காப்பீடும் செய்யப்படுகிறது.  

ஆகவே முதன் முறையாக புதிய நோக்கில் சாமானிய மக்களையும் சக்தி வாய்ந்தவர்களாக்கும் வகையில் இத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கமே சேமிப்புக் கணக்கு, தேவைக்கேற்றவாறு கடன் உதவிகள், இது வரை ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு காப்பீடு மற்றும் பென்சன் போன்ற நிதி உதவிகள் கிடைக்கச் செய்வது ஆகியனவாகும்.

இதன் மூலம் நாட்டிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் குறைந்த பட்சம் ஒருவருக்காகவாவது வங்கி வசதிகளை ஏற்படுத்தித் தருவது தேசிய நோக்கமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.  மேலும்  மத்திய, மாநில  அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் எல்லா பரிவர்த்தனைகளும் மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகச் செல்ல ஏற்பாடு செய்வது இதன் இன்னொரு முக்கிய அம்சமாகும். அதன் மூலம் ஊழல் ஒழிக்கப்பட்டு, மக்களுக்கான பயன்கள் முழுவதும் அவர்களுக்கு அப்படியே கிடைக்கும்.  

இதை ஒட்டியே சிறிய தொழில்களுக்குக் கடனளிக்கும் முத்ரா திட்டம், மாதம் ஒரு ரூபாய் பிரீமியத்துக்கு விபத்துக் காப்பீடு, வருடம் 330 ரூபாய் பிரீமியத்துக்கு ஆயுள் காப்பீடு மற்றும் அடல் பென்சன் ஆகிய திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன.

ஜன தன திட்டம் இது வரை அத்தனை இலக்குகளையும் முறியடித்து ஒரு பெரும் சாதனை படைத்துள்ளது. சென்ற ஆகஸ்ட் மாதம் வரை 24.10 கோடி கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. ஒரே வாரத்தில் சுமார் 1.8 கோடி கணக்குகள் துவங்கியதற்காக மத்திய நிதித் துறைக்கு கின்னஸ் சாதனைச் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. 

இத் திட்டத்தின் மூலம் வைப்புத் தொகையாக ரூபாய் 42,094 கோடி சேர்ந்துள்ளது. மேலும் இதில் சேர்ந்தவர்களில் அறுபது விழுக்காடு பேர் கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.


எனவே சுதந்திர இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் மிகப் பெரிய நிதித் துறைத் திட்டம் ஜன தன திட்டமாகும். இதன் மூலம் சாமானிய மக்கள் முதல் முறையாக நிதி அமைப்பில் இணைக்கப் பட்டுள்ளனர். இதன் பலன்கள் இப்போதே தெரிய ஆரம்பித்து விட்டன. எதிர்கால இந்தியாவின் வளர்ச்சியில் இத்திட்டம் ஒரு மிக முக்கியமான பங்கினை வகிக்கும். அதற்காக மோடி அரசுக்கு நமது பாராட்டுக்கள். 

No comments: