தீன தயாள் என்னும் தீர்க்கதரிசி

உலக வரலாற்றில் காலனி ஆதிக்கமும் அதையொட்டிய ஐரோப்பியர்களின்  முன்னேற்றமும் ஒட்டு மொத்த மனித குலத்தின்  சிந்தனா முறைகளில் ஒரு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக உலகளாவிய சிந்தனை முறைகள் எல்லாம் புறந்தள்ளப்பட்டு, ஐரோப்பிய முறைகள் மட்டுமே முதன்மைப் படுத்தப்பட்டன. பெரும்பாலான நாடுகளில் ஆட்சி அதிகாரம் அவர்களின் கைகளில் இருந்ததால், அது எளிதாகிப் போனது.

நீண்ட நெடிய பாரம்பரியமுள்ள இந்தியா போன்ற ஒரு நாட்டிலும் அது நடந்தேறியது. தொடர்ந்து வந்த காலங்களில் கல்வித் துறை அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததால், அவர்களின் சித்தாந்தங்களை பாடத் திட்டங்களில்  புகுத்தினார்கள். எனவே தொடர்ந்து வந்த தலைமுறைகளுக்கு மேற்கத்திய சித்தாந்தங்கள் மட்டுமே தெரிய வந்தன.

மனித வாழ்க்கைக்கு ஆதரமானது பொருளாதாரம். எனவே அதிலும் பதினெட்டு மற்றும் பத்தொன்பதாவது நூற்றாண்டுகளில் ஐரோப்பிய அனுபவங்களை வைத்து அங்கு எழுதப்பட்ட  முதலாளித்துவ மற்றும் கம்யூனிச சித்தாந்தங்களை மட்டுமே இரு பெரும் அடிப்படைப் பொருளாதார சிந்தனைக் கருத்துக்களாக முன் வைத்தனர்.

ஆகையால் கடந்த சுமார் இரு நூறு ஆண்டுகளாகவே பொருளாதாரம் என்று வரும் போது அது மேற்கத்திய நாடுகளை ஒட்டியதாகவே இருந்து வருகிறது. அதனால் பிற நாடுகளுக்கு எனச் சுயமான பொருளாதாரச் சிந்தனை ஒன்று இருக்க முடியும்  என்பதைக் கூட மேற்கத்திய நிபுணர்கள் அண்மைக் காலம் வரை ஒத்துக் கொள்ளவில்லை. எனவே பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கும் போது அவர்களின் கோட்பாடுகளையும், வழி முறைகளையும் முன் மாதிரியாக வைத்தே முடிவெடுக்கும் சூழ்நிலை உலக அளவில் நிலவி வந்தது.

அது போலவே மக்களுக்குப் பொருத்தமான அரசியல் அமைப்பு ஒரு நாட்டுக்கு அத்தியாவசியமானது. இந்திய நாடு மன்னராட்சியிலும் கூட உயர்ந்த ஜனநாயக நெறி முறைகளைக் கடைப்பிடித்து வந்துள்ளதை வரலாறு எடுத்துக் கூறுகின்றது. ஆனால் நம் முன் வைக்கப்படுவது மேற்கத்திய அரசியல் சித்தாந்தங்கள் மட்டுமே.   உத்திரமேரூர் கல்வெட்டு கூறும் நடை முறைகள் எங்காவது வழி காட்டு முறைகளாக உள்ளனவா?

இந்திய நாடு மிகவும் தொன்மையானது. நமக்கென்று ஒரு மிகப் பெரிய பொருளாதார பாரம்பரியம் உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகப் பொருளாதார உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கினைக் கைவசம் வைத்து, ஒரு வல்லரசாக இந்தியா இருந்து வந்துள்ளதை அண்மைக் கால ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

அது மட்டுமன்றி கடந்த இரண்டாயிரம் ஆண்டுக் காலத்தில் மட்டும் மிகப் பெரும்பாலான காலம் உலகின் அதிக செல்வந்த நாடாக விளங்கி நாம் வந்துள்ளோம். ஆங்கிலேயர் ஆட்சியின் சுய நலக் கொள்கைகளால் நமது பொருளாதாரம் சுரண்டப்பட்டு, இந்தியா ஏழை நாடாகிப் போனது.

எனவே மிகச் சிறப்பான பொருளாதாரப் பின்னணியைக்  கொண்டிருந்த நமது நாட்டுக்கெனத் தனிப்பட்ட சிந்தனைகள் மற்றும் அணுகு முறைகள்  இருந்திருக்க வேண்டும். ஆனால் அவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளச் சுதந்திர இந்தியா தவறி விட்டது. அதன் விளைவுகளைத் தான் இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

 ஒவ்வொரு நாட்டுக்கும் எனத் தனித்தன்மை  ஒன்று உண்டு. அந்த நாட்டுக்குத் தகுந்த கொள்கைகள் மூலமே முழுமையான பலன்களைப் பெற முடியும். அந்த வகையில் நமது தேசத்தின் அரசியல் அமைப்பு மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் நமது மண் வாசனையை ஒட்டியே அமைய வேண்டும் என ஐம்பது வருடங்களுக்கு முன்னரே உரக்கச் சொன்னவர் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா அவர்கள்.

பன்முகத் திறமைகள் கொண்ட அவர் தமது வாழ்க்கை முழுவதையும் திருமணம் கூடச் செய்து கொள்ளாமல் தேசத்துக்கே அர்ப்பணித்துக் கொண்ட மகான். ஒரு தத்துவ ஞானி, சமூகவியலாளர், சிந்தனாவாதி, எழுத்தாளர், அரசியல் தலைவர் மற்றும்  பத்திரிக்கையாளர் உள்ளிட்ட பல பரிமாணங்களில் ஜொலித்தவர் அவர். ஆனால் உலகில் பிரபலமாக நிலவி வந்த மேற்கத்திய சித்தாந்தங்களுக்கு மாற்றாக இந்திய வாழ்க்கை முறை சார்ந்த கோட்பாட்டை அவர் முன் வைத்ததால், இதுவரை அவர் பரவலாக அறியப் படாதவராகவே இருந்து வருகிறார்.

இந்திய வரலாற்றில் தற்போதைய காலம் மிகவும்  முக்கியமானது. ஏனெனில் அண்மைக் காலங்களில் மேற்கத்திய சித்தாந்தங்களின் தோல்வி உலக அளவில் உணரப்பட்டு வருகிறது. அவர்களின் நாடுகளிலேயே அவர்களது கருத்துக்கள் பலன்களைத் தரவில்லை; மாறாகச் சிரமங்களை அதிகமாக உண்டாக்கி வருகின்றன.

எனவே நாம் நமக்குப் பொருத்தமான கொள்கைகளைப் பற்றிச் சிந்திக்க இது சரியான தருணமாக உள்ளது. அந்த வகையில் தீனதயாள் உபாத்யாயா அவர்களின் சிந்தனைகள் நமக்குச் சரியான வழிகாட்டியாக அமைய முடியும்.

அவரது அரசியல் பொருளாதார தத்துவத்தை அவர்  ”ஒருங்கிணைந்த மனித நேயம்” எனக் குறிப்பிட்டார். அதில் மனிதனின் உடல், அறிவு மற்றும் ஆன்மா ஆகிய அனைத்தையும் ஒன்றாக இணைத்தார். அதன் மூலம் பொருள் சார்ந்த புற வாழ்க்கை மற்றும் ஆன்மிகம் சார்ந்த அக வாழ்க்கை ஆகிய இரண்டையும்  ஒன்று சேர்த்தார்.  

அதிகாரப் பரவலற்ற அரசியல் அமைப்பு மற்றும் கிராமத்தை மையமாகக் கொண்ட சுய சார்புத் தன்மை உள்ள பொருளாதாரம் என்பதாக அவரது தத்துவம் அமைந்துள்ளது.   அதை இந்திய நாட்டின் கலாசாரம்,  வாழ்க்கை முறை, உயர்ந்த நெறிகள் ஆகியவற்றை ஒட்டி அவர் அமைத்துள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள அணுகு முறைகளால் முழுமையான பலன்கள் நமக்குக் கிடைப்பதில்லை. அதற்குக் காரணம் அவை நமக்குப் பொருத்தமில்லாமல் இருப்பதுதான். அதை நாம் இப்போது தான் உணர்கிறோம். ஆனால் தீனதயாள் அவர்கள் இது குறித்துப் பல காலம் முன்னரே உணர்ந்து, அவற்றுக்கு மாற்றாக 1965 ஆம் வருடத்திலேயே தமது கருத்துக்களை  வெளியிட்டார்.

எனவே அவர் ஒரு தீர்க்க தரிசி. மேற்கத்திய சித்தாந்தங்களுக்கு மாற்றாக நமது தேசத்தின்  சிந்தனைகளை ஒட்டிய தத்துவத்தை முன் வைத்தவர்.  அதில் மக்களின் ஒட்டு மொத்தமான முன்னேற்றத்துக்கான அணுகு முறைகள் குறித்த கருத்துக்கள் மையமாக உள்ளன.  இந்த சமயத்தில் மேற்கத்திய சித்தாந்தங்கள் பொருளை மட்டுமே மையமாக வைத்து தோற்றுப் போய் வருவதை நாம் உணர வேண்டும்.

தீனதயாள் உபாத்யாய அவர்கள் பிறந்து இந்த வருடம் நூறாண்டுகள் நிறைவு பெறுகிறது. எனவே இப்போதாவது நாம் அவரது சிந்தனைகளைப் படித்து, நமது நாட்டுக்கான அணுகுமுறைகள் குறித்த ஒரு தெளிவான எண்ணத்தைப் பெறுவது அவசியமாகிறது.

( காண்டீபம், திருப்பூர், அக்.2016)
 




No comments: