Deendayal Upadhyaya Advocated Bharatiya  Approach for Development    




Pandit Deendayal Upadhyaya (1916-1968) was truly a multi-dimensional personality with exceptional contributions in different fields. He was an extraordinary political leader, a highly committed organisational man, a dedicated journalist, a philosopher, sociologist, an original economic thinker and much more. He is one of the pioneering contributors of modern India, whose works and thoughts are not widely known and discussed.

He remains an example for simple living and high thinking. Regarded as an organiser par excellence, he practised the highest values in public life. Besides, he conceived the philosophy of “Integral Humanism”, based on the higher traditions of the Indian civilisation. It advocates an integrated system of the body, mind, intellect and the soul.

He was one of those who clearly understood that the Indian economic and political systems after independence were raised upon the superficial notions of the Western world.  So he realised that there was no use in relying upon the western concepts such as individualism, socialism and capitalism.

By now all the thinkers agree that both the western ideologies namely capitalism and communism are not complete, as they look at the human beings from their narrow points of view. But more than five decades earlier, Deendayal Upadhyaya condemned both capitalism and communism for failing to take into account “ the Integral Man, his true and complete personality and his aspirations.”  During those times, the entire intellectual class across the world believed that communism and capitalism were the only two economic approaches available before the countries.

Deendayal Upadhyaya noted that both these ideologies did not view mankind completely and in fact they de-humanised man. To quote: ” One ( Capitalism) considers him a mere selfish being lingering after money, having only one law, the law of fierce competition, in essence the law of the jungle; whereas the other ( Communism) has viewed him as a life-less cog in the whole scheme of things, regulated by rigid rules, and incapable of any good unless directed. The centralisation of power, economic and political, is implied in both. Both, therefore, result in the dehumanisation of the man. Man, the highest creation of God, is losing his own identity.”

The western ideologies and concepts are based on the limited Western views of life, while for us in India the unity of all life is paramount. Deendayal Upadhyaya pointed out:  "Hegel put forward the principles of thesis, anti-thesis and synthesis; Karl Marx used this principle as a basis and presented his analysis of history and economics; Darwin considered the principle of survival of the fittest as the sole basis of life; but we in this country saw the basic unity of all life."

But unfortunately we are tied to the Western ideologies, due to our wrong beliefs: Upadhyaya writes: “Not only because of different ideals of life but also because of different conditions in terms of time and place the way of our economic development will have to be different from that of the West. But we are tied to Marshall and Marx. We believe that the economic principles they have discussed are eternal. Even those who realise that they are dependent upon certain systems are not able to step out of their orbits. The economic prosperity of the West has created a blind belief in us about the Western system of production.”

India is an ancient nation with thousands of years of experience and backgrounds. We believe in the wholesome progress of the mankind.  Upadhyaya observed: "Here in Bharat, we have placed before ourselves the ideal of the four fold responsibilities of catering to the needs of Body, Mind, Intellect and Soul with a view to achieve the integrated progress of Man."

But unfortunately the post-independent leadership failed to recognise this basic fact and began adopting the alien approaches. As a result the nation suffered. The noted nationalistic thinker and a close associate of Deendayal Upadhyaya, Parameswaran notes: “When we look at the present Indian scenario from this background it will not be difficult to realise that India’s failure to measure up to the various challenges and to fulfil her destiny in post-independent period has been largely due to the erroneous path she was compelled to take under the influence of an intellectually and culturally alienated leadership. The net result was that totally wrong decisions were taken at the policy level and dangerous distortions had crept in at the implementation level. It was only natural that the spontaneous enthusiasm and energy of the people could not be mobilised for the task of nation building, because the Anglicised and/or Russianised leadership could not appeal to the masses.” ( In K.R. Rao, Integral Humanism)

As a native intellectual having roots firmly on the ground,  Deendayal Upadhyaya strongly believed that India would progress only on the basis of its own identity.  To quote: “ It is essential that we think about our national identity. Without this identity there is no meaning of independence, nor can independence become the instrument of progress and happiness. As long as we are unaware of our national identity, we cannot recognise or develop all our potentialities.” 

Parameswaran laments that the failure of the leadership to recognise the uniqueness of India and the imposition of the foreign models have led to serious difficulties. To quote: “ It is indeed strange that our leaders missed the elementary truth, that an ancient nation like India, with a cultural heritage inherited through countless centuries of history, could not be raised to its rightful place among the countries of the world, by imposing borrowed foreign models on it. They forgot that a nation, like an individual, is not only its physical configuration, but has also a mind and soul of its own, and unless the course of development it takes is in tune with the bent of its mind and the genius of its soul, it is bound to run into insurmountable troubles and finally comes to grief.” 

Deendayal Upadhyaya advocated that only the integral approach would lead to the progress as well as the happiness of human beings. His views are based on the essence of life in Bharat over thousands of years. Hence he emphasised that it is not socialism or capitalism, but a decentralised approach with the overall interests of human beings at the centre that would be the suitable for our nation.

He said it is our duty to put the “man”  at the centre:  “ We must re-establish him in his rightful position, bring him the realisation of his greatness, reawaken his abilities and encourage him to exert for attaining divine heights of his latent personality. This is possible only through a decentralised economy. We want neither capitalism nor socialism. We aim at the progress and happiness of “Man”, the Integral Man.”

It is important to note that Deendayal Upadhyaya presented his thoughts during 1965, when it was believed that there was no alternative to the two popular western ideologies. The developments during the last few decades clearly prove the failure of both the western ideologies. Besides, it is now accepted that the family, society and culture play a major role in the development of economy.

India’s development journey over the last fifty years has been due to the inherent strengths of our nation. It is in spite of the western approaches. Upadhyaya’s thoughts are highly relevant for us now; what we need is a Bharathiya approach, as we transform into a developed nation with a new vigour.  

 References

1.   Deendayal Upadhyaya, Integral Humanism

2.   Kandarpa Ramachandra Rao, Integral Humanism

3.   Sudhakar Raje, Pandit Deendayal Upadhyaya – A Profile

 ( Yuva Bharati , Vivekananda Kendra, Chennai, May 2017)

இந்தியாவை வல்லரசாக்கும்  பொருளாதாரச் செயல்பாடுகள்




பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் நடைபெற்று வரும் பாரதிய ஜனதா அரசு கடந்த மூன்றாண்டுகளாக பொருளாதாரத் துறையில் நடைமுறைப்படுத்தி வரும் செயல்பாடுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. நமது நாடு சுதந்திரம் பெற்ற பின் அறுபத்தைந்து வருடங்களுக்கு மேலாக நிகழாத  பல பெரும் மாற்றங்கள்  இந்த மூன்றாண்டுகளில் மட்டுமே நடந்துள்ளன.

தொன்மை வாய்ந்த நமது நாட்டுக்கு நீண்ட நெடிய பொருளாதார வரலாறு உள்ளது. அந்நியர்களால் காலனி ஆதிக்க காலத்தில் நமது பொருளாதாரம் பெரும் சீரழிவைச் சந்தித்தது. அதனால்  உலகிலேயே அதிக செல்வச் செழிப்புடன் விளங்கி வந்த நமது நாடு, ஏழை நாடாக ஆகிப் போனது.  சுதந்திரத்துக்குப் பின் வந்த காங்கிரஸ் அரசு, நமது தேசத்தின் அடிப்படைத் தன்மைகளைப் புரிந்து கொள்ளாமல், மேற்கத்திய சித்தாந்தங்களையும், வழி முறைகளையும் மையமாக வைத்துக் கொள்கைகளை வகுத்து வந்தது.

அதனால் திட்டக் குழு அமைத்து ஐம்பது வருடங்களுக்கு மேலான பின்னரும், நாட்டுக்குப் பொருத்தமான முறையில் திட்டங்கள் அமையவில்லை. எனவே போதுமான குறைந்த பட்ச முன்னேற்றத்தைக் கூட  பெரும்பான்மையான சாதாரண மக்களால் காண முடியவில்லை. அதனால் தான் பிரதமர் மோடி அவர்கள் பொறுப்பேற்றதும் அனைவருக்குமான வளர்ச்சி என்கின்ற அடிப்படையில் கொள்கை மாற்றங்களையும், திட்டங்களையும் கொண்டு வந்தார்.

நாடு விடுதலை அடைந்த பின் யாருடைய தலையீடும் இல்லாமல் நமது நாட்டுக்கெனத் திட்டமிடுவற்கு உருவாக்கப்பட்ட அமைப்பு தான் திட்டக்குழு என்பதாகும்.  1950 ஆம் வருடம் திட்டக் குழுவை ஜவகர்லால் நேரு அமைத்தார்.  ஆனால் சோசலிச சித்தாந்தின் மேல் தமக்குள்ள பிடிப்பால், ஸ்டாலின் ஆட்சி செய்து வந்த அப்போதைய சோவியத் ரஷ்யாவில் இருந்து வந்த அமைப்பை ஒட்டியே நேரு இந்தியாவுக்கான திட்டக்குழுவை வடிவமைத்தார்.

அந்தக் குழு டெல்லியில் உட்கார்ந்து கொண்டு, பன்முகத் தன்மை கொண்ட பாரம்பரியம் மிக்க நமது நாட்டுக்கு ஐரோப்பிய அமெரிக்க நடைமுறைகளை ஒட்டி திட்டங்களை வகுத்துக் கொண்டு வந்தது. உலக வங்கி, பன்னாட்டு நிதியம் போன்ற அமைப்புகளில் வேலை பார்த்து ஓய்வூதியம் வாங்குபவர்களே அதன் தலைமைப் பொறுப்புகளில் அமர்த்தப்பட்டார்கள்.  அதனால் நமது கொள்கைகள் பலவற்றையும்   அந்நியத் தாக்கமே ஆக்கிரமித்து வந்தது.  

எனவே நமது நாட்டுக்குண்டான  தனித்தன்மை வாய்ந்த அடிப்படைகள், வலிமைகள் மற்றும் சூழ்நிலைகளை மையப் படுத்தாத வகையில் திட்டங்கள் அமைக்கப்பட்டன.  அதனால் முன்னேற்றம் தடைப்பட்டு வந்தது. பிரதமராகப் பொறுப்பேற்ற பின் மோடி அவர்கள் 2014 ஆம் ஆகஸ்ட் மாதம் தனது முதல் சுதந்திர தின விழா உரையில் திட்டக்குழு மாற்றி அமைக்கப் படும் என அறிவித்தார். அதை ஒட்டி 2015 ஆம் வருடம் ஜனவரி ஒன்றாம் நாள் ‘நிதி ஆயோக்’ என்னும் புதிய திட்டக் குழு அமைக்கப்பட்டது.

அதன் சிறப்பம்சமே ”நாட்டுக்கான திட்டங்கள் இனி மேல் அந்நியச் சித்தாந்தங்களை ஒட்டி அமையாது; மாறாக அவை பாரதீய அடிப்படையில் அமையும்”  என்பது தான்.  மேலும் மாநிலங்கள் அனைத்தும் இணைந்து செயல்பட்டு கூட்டுறவு முறையில் வளர்ச்சி, கிராமத்தை மையமாக்கித்  திட்டமிடல், சிறு – குறு தொழில்களுக்கு முக்கியத்துவம், தொழில் முனையும் தன்மையை ஊக்குவிப்பது, சமூக மூலதனம் போன்ற நாட்டின் பாரம்பரிய சொத்துக்களை முன்னேற்றத்துக்குப் பயன் படுத்துவது ஆகியவை திட்டமிடலில் அடிப்படையாக இருக்கும் எனச் சொல்லப்பட்டுள்ளது.

மேற்கத்திய தாக்கங்கள் இல்லாமல் சொந்த சிந்தனைகளின் மூலமாக நமது நாட்டுக்கு நம்மாலேயே திட்டமிட முடியும் என்பதை முதன் முறையாக அறிவித்து, அதன் படி நமது பிரதமர் செயல்பட்டு வருகிறார்.  இது எழுபது ஆண்டு கால சுதந்தர இந்தியாவின் பொருளாதார வரலாற்றில் ஒரு முக்கியமான மாற்றமாகும்.

நமது நாட்டில் 2014 ஆம் ஆண்டு வரை வளர்ச்சி, முன்னேற்றம், ஏழ்மை ஒழிப்பு  என்பதெல்லாம் வெற்றுக் கோஷமாகவே  இருந்து வந்தது. அதைக் காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து கூசாமல் செய்து வந்தன.  ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டன. மேலும் திட்டமிடுதலில் எந்தவிதமான இலக்கும் இல்லாத ஒரு சூழ்நிலை நிலவி வந்தது.  மக்கள் கேள்வி கேட்கும் போது மதச்சார்பின்மை என்ற போர்வையில் தவறான வாதங்கள் முன் வைக்கப்பட்டன. 

அத்தகைய போக்கை இந்திய அரசியலில் மாற்றிக் காட்டியது மோடி அரசு. கடந்த மூன்று வருடங்களாக ஒவ்வொறு துறைக்கும் இலக்குகளை வைத்து அவற்றை அசுர வேகத்தில் நிறைவேற்றி வருகிறது. பல துறைகளில் இலக்குகளை மீறிய முன்னேற்றம் நிகழ்ந்து வருகிறது. உதாரணமாக நாடு முழுவதும் மின்சாரம் கிடைக்காத கிராமங்களாக சுமார் 18,500 கண்டறியப்பட்டு அவை அனைத்துக்கும்  மின் இணைப்புகள் கொடுக்க வருட அளவில் இலக்குகள் நிர்ணயம் செய்யப் பட்டன. ஆனால் அந்த இலக்குகளை மீறி துரித கதியில் மின் துறை செயல்பட்டு வருகிறது. அதனால் இன்னமும் ஒரு வருட காலத்தில் மின் இணைப்பு இல்லாத கிராமங்களே இல்லை என்னும் சூழ்நிலை உருவாகி விடும்.

வளர்ச்சி என்பது அனைவருக்குமாக இருக்க வேண்டும்;  அதிலும் மிக முக்கியமாக ஏழைகள் மற்றும் நலிவடைந்த பிரிவினர்களை உள்ளடக்கியதாக அமைய வேண்டும் என்கின்ற நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.  அதற்காகப் பல புதிய திட்டங்கள் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்டு  வருகின்றன. உதாரணமாக வங்கிப் பக்கமே செல்ல முடியாமல் இருந்த  ஏழை மக்களுக்கு பணம் எதுவும் இல்லாமல் வங்கிக் கணக்கு துவக்குவது, வருடம் வெறும் பன்னிரண்டு ரூபாய்க்கு விபத்துக் காப்பீடு, வருடம் 330 ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு மற்றும் ஏழ்மை நிலையில் வசிக்கும் குடும்பப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு உள்ளிட்ட திட்டங்களைக் குறிப்பிடலாம்.



ஏழை மக்களின் வங்கிக் கணக்குகளைத் துவக்கும் ஜன தன் திட்டத்தைப் பொறுத்த வரை, இந்த வருடம் மே மாதம் 17 ஆம் தேதி நிலவரப்படி 28.64 கோடி பேர் புதிய கணக்குகளைத் துவங்கியுள்ளனர்.  அதில் 17.10 கோடி பேர் கிராமப்புறம் மற்றும் சிறு நகரங்களைச் சேர்ந்தவர்கள். மேலும் அவர்கள் தங்கள் கணக்குகளில் ரூபாய் 64,365 கோடி அளவு தொகையை இருப்பாக வைத்துள்ளனர். இது ஒரு பெரிய அமைதிப் புரட்சியாகும்.

ஏழ்மையான நிலையில் உள்ள குடும்பங்கள் அடுப்பெறிக்க விறகுகளைத் தேடிச் சென்று பாதுகாத்து வைக்க வேண்டும். மழை காலங்களில் அது மிகவும் சிரமம். மேலும் பெண்கள் அடுப்பு ஊதி அதன் விளைவாக அவர்களின் உடல் நிலை பாதிக்கபடுகிறது. அவர்களின் சிரமங்களைப் போக்கும் வகையில்  சென்ற வருடம் மே மாதத்தில் பிரதமர் ஒரு புதிய திட்டத்தைத் துவக்கினார். அதன்படி ஏழைக் குடும்பங்களுக்கு பெண்களின் பெயரில் இலவச எரிவாயு இணைப்பும், இணைப்புக்கான செலவுக்காக ரூபாய் 1600  உதவித் தொகையும் கொடுக்கப்படும். அதன்படி மூன்று ஆண்டுகளில் ஐந்து கோடி குடும்பங்களுக்கு உதவ மோடி அரசு திட்டமிட்டது. இது வரை ஒரு வருட காலத்திலேயே 2.24 கோடி பேருக்கு மேல் இணைப்பு கொடுத்தாகி விட்டது.

இந்த இலவச எரிவாயுத்  திட்டத்தில் இன்னொரு முக்கிய அம்சம் உள்ளது. அதன்படி வருடம் பத்து இலட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் தமக்குக் கிடைக்கும் அரசு மானியத்தை தாங்களே முன் வந்து விட்டுக் கொடுக்க வேண்டும் எனப் பிரதமர் அவர்களால் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். அதன்படி இது வரை சுமார் ஒரு கோடியே ஐந்து இலட்சம் பேர் தங்களுக்கான மானியத்தை வேண்டாம் என அரசுக்கு அறிவித்து விட்டனர்.

பொருளாதார  வளர்ச்சிக்கு அடிப்படையான ஒரு விசயம் கட்டமைப்பு வசதிகள். கட்டமைப்புகள் சரியாக இருக்கும் போது தான், முன்னேற்றம் ஏதுவாக அமையும். அதற்காக மத்திய அரசு சாலை மேம்பாடு, புதிய சாலைகள் உருவாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது மட்டுமன்றி, நீர்வழிச் சாலைகள், மலைப் பகுதி சாலைகள் போன்றவற்றையும் முன்னெடுத்துச் சென்று வருகின்றது.

நமது நாட்டின் பொருளாதாரத்துக்கு மையமாக விளங்குவது விவசாயம் மற்றும் குறு,சிறு தொழில்கள் தான். எனவே அவற்றுக்கான சிறப்புக் கவனம் கொடுக்கப்பட்டு புதிய திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. முழுமையான பயிர் காப்பீடு, நீர் மேலாண்மை, வேம்பு தடவிய யூரியா மற்றும் மண் சுகாதார அட்டை  எனப் பல புதிய திட்டங்கள் நன்கு செயல்பட்டு வருகின்றன.

சிறு மற்றும் குறுந் தொழில்களில் ஈடுபட்டு வருபவர்கள் சாதாரணப் பின்னணிகளில் இருந்து வரும் மக்கள். பல சிரமங்களுக்கிடையில் தொழில் செய்பவர்கள்.  அவர்கள் தான் இன்று சுமார் ஆறு கோடி சிறிய தொழில்களை நடத்திக் கொண்டு, பொருளாதாரத்துக்குப் பெரிய பங்களிப்பினைச் செய்து வருகிறார்கள். அந்தத் தொழில்களில் வேலை செய்பவர்கள் மட்டும் சுமார் 12 கோடி பேர்கள். 

ஆனால் அவர்களின் நிதிப்  பிரச்னைகளுக்கு உதவுவதற்கு எந்த வித பெரிய திட்டங்களும் இதுவரை இல்லை.  எனவே அதைப் போக்குவதற்கு மத்திய அரசு முத்ரா வங்கித் திட்டத்தைக் கொண்டு வந்தது. அதன் மூலம் 2015-16 மற்றும் 2016-17 ஆகிய இரண்டு வருடங்களில் மட்டும் சுமார் 7.45 கோடி பயானிகளுக்கு, சுமார் மூன்று இலட்சத்து எட்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தொகை  வழங்கப்பட்டுள்ளது.

கடந்த காங்கிரஸ் கூட்டணி அரசின் பத்தாண்டு காலத்தில் நாட்டின் மிகப் பெரிய ஊழல்கள் நடந்தேறின. அதனால் நாட்டுச் சொத்துக்கள் ஆட்சியாளர்கள் மற்றும் தரகர்களின் கைகளுக்குச் சென்று கொண்டிருந்தன.  மோடி அரசு பொறுப்பேற்ற பின்னர், ஊழலை ஒழிக்கவும், நாட்டின் சொத்துக்களைப் பாதுகாக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இயற்கை வளங்கள் ஏலம் விடுவதில் வெளிப்படைத் தன்மை உருவாக்கப்பட்டுள்ளது.

அரசு மட்டத்தில் டிஜிட்டல் முறையைப் புகுத்துவதன் மூலம் லஞ்சம்  தடுக்கப்பட்டு வருகிறது. உயர் மதிப்பு நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம்  கருப்புப் பணத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.  அரசின் மூலம் மக்களுக்குச் செலுத்தப்படும் ஊதியம், சலுகைகள் உள்ளிட்டவை தற்போது நேரடியாகப் பயனாளிகளுக்கு அவர்களின் கணக்குகளில் செலுத்தப்படுகிறது. அதன் மூலம் மக்களுக்கு முழுத் தொகையும் சென்று சேருகிறது.  மேலும் இடைத் தரகர்களுக்குச் சென்று கொண்டிருந்த பல்லாயிரம் கோடி ரூபாய்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

வணிகர்களின் சிரமங்களைக் குறைத்து, பொருளாதாரத்தை வலுப்படுத்த நாடு முழுவதும் ஒரே மாதிரியான சரக்கு மற்றும் சேவை வரி முறை வருகின்ற ஜீலை மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வரி ஏய்ப்பவர்களக் கண்டு பிடித்து, அதிகம் பேரை வருமான வரி செலுத்த வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனால் சென்ற வருடம் மட்டும் புதியதாக 91 இலட்சம் பேர் வருமான வரி வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

எனவே பல்வேறு நிலைகளிலும் பொருளாதாரத்தை முன்னேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  அதற்காகப் பிரதமர் அவர்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதனால் நமது நாட்டில் இது வரை இல்லாத ஒரு பெரிய நம்பிக்கை மக்களிடையே தோன்றியுள்ளது.  மேலும் உலக முழுவதுமே நமது நாட்டை ஒரு ‘ ஒளி வீசும்’ இடமாகப் பார்க்கத் துவங்கியுள்ளது.   மோடி அவர்களின் தலைமையில் நடைபோட்டு வரும் பாரதிய ஜனதா தலைமையிலான அரசு இந்தியாவை  வல்லரசாக்கும் முயற்சியில் முழு மனதுடன்  செயல்பட்டு வருகின்றது.

( மோடி அரசின் மூன்றாண்டு நிறைவு சிறப்பிதழ் கட்டுரை, ஒரே நாடு,  மே 2017 )








கொங்கு நாடு பெற்றெடுத்த உயர்ந்த கல்வியாளர்


பெருமதிப்புக்குரிய டாக்டர்.கே.குழந்தைவேலு அண்ணா அவர்கள் நமது சம காலத்தில் கொங்கு நாடு பெற்றெடுத்த மிக உயர்ந்த கல்வியாளர் ஆவார். அண்ணா என்கின்ற அடைமொழியை இராமகிருஷ்ணா வித்யாலத்தில்  பெற்ற அவர்கள், பின்னர் அவரைப் பற்றி அறிந்த  அனைவராலும் அவர் மீது கொண்ட அன்பாலும் மரியாதையாலும்  அவ்வோறே அழைக்கப்பட்டவர்.   

சமுதாயத்தில் திறமையாளர்கள் பலர் இருப்பார்கள். ஆனால் உயர்ந்த குணத்தையும் எளிமையையும் கொண்டவர்கள் மிகச் சிலரே ஆவர். அந்த மிகச் சிலரில் முதன்மையான ஒருவராக அண்ணா விளங்கி வருகிறார் என்றால் அது மிகையாகாது. அந்த வகையில் நமது எல்லோருக்கும் அண்ணா அவர்கள் ஒரு எடுத்துக்காட்டு.

ஒரு சாதாரணக் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து, வெளி நாட்டில் கல்வி கற்று, சிறந்த கல்லூரி முதல்வராக விளங்கியவர். இராமகிருஷ்ண- விவேகானந்த வழிகாட்டுதல்களில் தனது முழு வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்ட பெரியவர் அவனாசிலிங்கம் செட்டியார் அய்யா அவர்களால்   அடையாளம் காணப் பட்ட பெருந்தகை. பின்னர் அவனாசிலிங்கம் மகளிர் பல்கலைக் கழகத்திற்கு வேந்தராகி  அந்தப் பொறுப்புக்குப் பெருமை சேர்த்தவர்.

கடந்த பல வருடங்களாகவே தமிழகத்தின் கல்வித் துறையானது மிக வேகமாகக் கறை படிந்து போய்க் கொண்டிருக்கிறது. இள வயது  ஆசிரியர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் ஒரு முன் மாதிரியை எடுத்துச் சொல்வதற்கே  ஆட்களைத் தேட வேண்டியிருக்கிறது. அந்த வகையில் குழந்தைவேலு அண்ணா அவர்கள் கல்வித் துறையில் உள்ள அனைவருக்கும் ஒரு பீஷ்ம பிதா மகன்.

முதன் முதலாக என்னுடைய படிப்பு சம்பந்தமான ஆலோசனைகளைப் பெற  1980  களில் அண்ணா அவர்களைச் சந்திக்க இராமகிருஷ்ணா கல்லூரி வளாகத்திலுள்ள அவரது இல்லத்துக்கு என்னுடைய சித்தப்பா என்னை அழைத்துச் சென்றார். மாணவனாகிய எனக்கு அவரது ஆலோசனைகளை விட, அவரின் எளிமையும்,  பக்குவமும், அணுகுமுறையும் மிகவும் பிடித்துப் போனது. பின்னர் பாரதியார் பல்கலைக் கழகத்தில் நான் ஆய்வு மாணவனாக இருந்த போது, அவரது பேச்சுகளைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது.  அந்தச் சமயத்திலேயே நான் அவரை கொங்கு நாட்டின் ஒரு முன்னுதாரணமான கல்வியாளராக மனதளவில் ஏற்றுக் கொண்டேன்.

பின்னர் நான் கல்விப் பணிக்கு வந்த போது பல சமயங்களில் அவருடன் பழகவும் பேசவும் வாய்ப்புக்கள் கிடைத்தன. அவரது தேசிய- காந்தியக் கொள்கைகளும் எனது சுதேசி ஆய்வுகளும் எங்களை ஒருவருக்கொருவர் இயற்கையாகவே ஈர்த்தது. அவர் அவனாசிலிங்கம் பல்கலைக் கழக வேந்தராக இருந்த போது, பல நிகழ்ச்சிகளில் என்னை அழைத்துப்  பேச வைத்தார்.

சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் ஒரு முறை என்னை அழைத்து அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று சுதேசிப் பொருளாதாரம் குறித்து நான் பேச வேண்டும் என்று சொன்னார். அப்போது அனைத்து மாணவிகள் மற்றும் பேராசிரியைகள்  முன்பு இந்தியப்  பொருளாதாரம் மற்றும் கலாசாரம் குறித்து  நான் பேசியது எனது வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு. பின்னர் ஒரு முறை குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு என்னை அழைத்து நமது தேசத்தின் பெருமைகளைப் பற்றிப் பேசச் சொன்னார்.  நமது தேசத்தை உளமாற நேசித்த மிகப் பெரிய கல்விமான் அண்ணா அவர்கள்.

 பெருமைக்குரிய வரலாற்றினைக் கொண்ட நமது தேசம் மற்றும் கலாசாரம் குறித்துப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் எதுவுமில்லை என்பது வருத்தமளிக்கக்கூடிய விசயமாகும்.  அந்தக் குறையைச் சரி செய்ய நம்மால் முடிந்த அளவு முயற்சி செய்ய வேண்டும் என்னும் நோக்கில் கோவை பாரதிய வித்யா பவனின் தலைவர் திரு. பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் அவர்கள் சுமார் பத்து வருடங்களுக்கு முன்னால் ஒரு கல்வியாளர்கள் குழுவை அமைத்தார்கள். அதன் மூலம் பாடத் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டு  பல்கலைக்கழகங்கள் முன் வைக்கச் செயல் முறைகள் வகுக்கப்பட்டது. அந்தக் குழுவில் மூத்த கல்வியாளரான அண்ணா அவர்கள் தன்னுடைய நீண்ட அனுபவத்தின் அடிப்படையில்  பல முக்கியமான கருத்துகளை எடுத்து வைத்து எங்களை எல்லாம் வழி நடத்தினார்கள். துரதிர்ஷ்டவசமாக பாரதிய வித்யா பவனின் அந்தப்  திட்டமானது தமிழகப் பல்கலைக் கழகங்களின்  நிர்வாகங்கள் போதிய அளவு ஒத்துழைக்காததால்,  முன்னெடுத்துச் செல்லப்படவில்லை.

அண்ணா அவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னாலும், தொடர்ந்து பல விதமான கல்வி சம்பந்தமான முயற்சிகளில்  தன்னுடைய பங்களிப்பைத் தரத் தவறியதில்லை.  அண்ணா அவர்களின்  வாழ்வும், செயல்பாடுகளும் எங்களைப் போன்ற ஆசிரியர்களுக்கு ஒரு பெரிய பாடம்.  அவர் எங்களின் தலை முறைக்குக் கிடைத்த ஒரு நல்ல முன்னுதாரணம். அவரது வாழ்வு நிறைவான ஒன்று. அவர் எல்லா நலமும் பெற்று நூறாண்டு கடந்து பல்லாண்டுகள் வாழ வேண்டும் என இறைவனைப் பிரார்த்திப்போம். 

( டாக்டர் கே.குழந்தைவேலு, மேனாள் வேந்தர், அவனாசிலிங்கம் பல்கலைக்கழகம், கோவை அவர்களின் 90 ஆம் ஆண்டு விழா சிறப்பு மலர் கட்டுரை, பேரூர் சாந்தலிங்கர் தமிழ்க் கல்லூரி, கோவை, மே 14, 2017)




பொருளாதாரத்தின் மையம் நமது குடும்பங்கள்




பொருளாதாரம் என்றாலே இரண்டே வகையான சித்தாந்தங்கள் தான்; ஒன்று முதலாளித்துவம், இன்னொன்று கம்யூனிசம் என்கின்ற கருத்து   மேற்கத்திய நாடுகளால் முன்வைக்கப்பட்டு இருபதாம் நூற்றாண்டு முழுவதுவமே உலக முழுமையும் அதிகமான கேள்விகளின்றி பரவிக் கிடந்தது.  அவற்றுக்கு எதிரான சில கருத்துக்கள் சிந்தனையாளர்கள் சிலரால்  எடுத்து வைக்கப்பட்டாலும்  அவை  முழுமையானதாக அமையவில்லை.

 நமது நாடு  சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே, சுதந்திரத்துக்குப் பின்னர் அரசு கடைப்பிடிக்க வேண்டிய பொருளாதார அணுகு முறைகள் குறித்து பரவலாகக் கலந்து ஆலோசிக்க வேண்டுமென மகாத்மா காந்தி கூறினார். ஆனால் நேரு அதை ஏற்றுக் கொள்ளவில்லை.  எனவே  சுதந்திரம் பெற்ற பின்னர், நேருவின் காங்கிரஸ் அரசு பொருளாதார அணுகுமுறைகள் குறித்து எந்த விதமான பெரிய விவாதங்களுமின்றி மேற்கத்திய சோசலிச சித்தாந்தத்தை மையமாக வைத்தது. அதன் அடிப்படையில் கொள்கைகள் வகுக்கப்பட்டன.

மேற்கத்திய சித்தாந்தங்கள் இரண்டுமே ஐரோப்பியாவில் தோன்றியவை. ஐரோப்பாவுக்கெனப் பெரிய வரலாறோ, அனுபவமோ கிடையாது.  பதினெட்டு மற்றும் பத்தொன்பதாவது நூற்றாண்டுகளில் அங்கு நிலவிய குறுகிய அனுபவங்களை வைத்து அவர்களின் கண்ணோட்டத்தில்   அந்தச் சித்தாந்தங்கள் எழுதப்பட்டன.  அவை உலக முழுமையையும் கருத்தில் கொண்டு எழுதப்பட்டவை அல்ல.

 நீண்ட நெடிய வரலாற்றையும், பல்வேறு வகையான சிறப்புகளையும் பெற்றது நமது நாடு. உயர்ந்த சிந்தனைகளை அடிப்படையாக வைத்து தனித் தன்மை வாய்ந்த வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொண்ட தேசம் நம்முடையது.  பல நூற்றாண்டுகளாக உலகின் எந்த நாட்டையும் விட பொருளாதாரச் செழிப்பும் வரலாறும் இங்கு நிலவி வந்ததைக் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக உலக அளவில் நடந்து வரும் ஆய்வுகள் தெளிவாக்குகின்றன.

மேற்கத்திய சிந்தனைகளே உலக முழுவதும் மட்டுமன்றி, நமது நாட்டிலும் கோலோச்சி வந்த சமயத்தில், நமது பண்பாடு மற்றும் உயர் சிந்தனைகளின் அடிப்படையில் நாட்டுக்குப் பொருத்தமான ஒரு தத்துவத்தை முன் வைத்தவர் பண்டித தீன தயாள் உபாத்யாயா அவர்கள். 1965 ஆம் வருடம் முதலாளித்துவமும் கம்யூனிசமும் மிக முக்கியமான இரு பெரும் சித்தாந்தங்களாக நடைமுறைப் பட்டு வந்த காலத்தில்,  அவற்றுக்கு மாற்றாக நமது நாட்டின் மண் வாசனை சார்ந்த சிந்தனைகளை அவர் எடுத்து வைத்தார்.

மேற்கத்திய கோட்பாடுகளில் பொருள் சார்ந்த வாழ்க்கை முறைகளே மையமாக உள்ளன. அவை இரண்டுமே ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தான். அவை மனிதனின் முழுமைத் தன்மையைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.  எனவே ஒட்டு மொத்த மனிதனை மையமாக வைத்த சிந்தனா முறையை நாம் உருவாக்கிக் கடைப்பிடிக்க வேண்டுமென அவர் விரும்பினார்.

அதற்காகத் தான் தனது சிந்தனைகளை ‘ஒருங்கிணைந்த மனித நேயம்’ என்கின்ற அடிப்படையில் அவர் முன் வைத்தார். அவை மிகவும் ஆழமானவை. தொன்மையான நமது தேசத்தின் உயர் சிந்தனைகளையும், பண்பாட்டையும், வாழ்க்கை முறையினையும் அடிப்படையாகக் கொண்டவை. மனிதன் என்பவன் உடல் மட்டுமல்ல; மனம், ஆன்மா, புத்தி ஆகிய அனைத்தையும் ஒரு சேரக் கொண்டவன் என்கின்ற அடிப்படையில் அவர் தமது கருத்துக்களை எடுத்து வைத்தார்.

மேற்கத்திய பொருளாதாரச் சித்தாந்தங்கள் குவியல் தன்மையை ஆதராமாகக் கொண்டவை.  அதனால் மனித இனம் தனது நல்ல  குணங்களை இழந்ந்துள்ளது. எனவே மனிதனை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வரப் பரவலான பொருளாதார முறை வேண்டும் என அவர் கூறினார். ’ கடவுளின் உயர்ந்த படைப்பான மனிதன் தன்னுடைய அடையாளத்தை இழந்து கொண்டுள்ளான். அவனைச் சரியான இடத்தில் வைக்க வேண்டும். அவனுடைய பெருமையை உணர வைத்து, அவனுடைய திறமைகளை விழித்தெழுமாறு செய்து, அவனது தெய்வீக உயரங்களை அடைய முயற்சிக்குமாறு ஊக்குவிக்க வேண்டும். அது பரவலான பொருளாதாரம் மூலமே முடியும்.’

அவரது கருத்துக்கள் எவ்வளவு உண்மை என்பதை மேற்கத்திய சித்தாந்தங்கள் இரண்டும் தோற்றுப் போய் விட்ட இந்தக் காலத்தில் நம்மால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். மேலும் அவர் எவ்வாறு காலத்தை மீறிய ஒரு தத்துவ ஞானியாக விளங்கியிருக்கிறார் என்பதுவும் தெரிய வருகிறது.  மனித இனத்துக்கு விரோதமான சித்தாந்தமான கம்யூனிசம் முழுதும் தோற்றுப் போய் விட்டது.  மக்களின் ஒட்டு மொத்த  வளர்ச்சிக்குப் பொருத்தம் இல்லாததாக மேற்கத்திய முதலாளித்துவம் உணரப்பட்டு விட்டது. 

நமது நாட்டில் சுதந்திரம் பெற்ற பின்னர் மிகப் பெரும்பான்மையான காலம் அதிகார வர்க்கம் மேற்கத்திய சித்தாந்தங்களை ஒட்டிய அணுகு முறைகள் மற்றும் திட்டங்களையே நடைமுறைப்படுத்த  முயற்சித்து வந்தது.  அவற்றின் பொருத்தமற்ற தன்மைகளை அது உணரவில்லை. அதனால் நாட்டின் ஒட்டு மொத்த முன்னேற்றம் பெரும் பாதிப்புக்குள்ளானது.

ஆனால் நடைமுறையில் இன்று வரை நமது பாரம்பரியம் சார்ந்த குடும்ப அமைப்பு முறையே சமூக, கலாசார, பொருளாதார விசயங்களில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதனால் தான் நமது பொருளாதாரம் இன்றைக்கும் பெருமளவு வலுவாக இருந்து வருகிறது. அதனால் நமது தேசத்தில் ‘ ஏட்டுச் சித்தாந்தங்களை மீறிய முன்னேற்றம்’ தொடர்ந்து இருந்து கொண்டு வருகிறது.

பாரம்பரியம் மிக்க நமது குடும்ப அமைப்பு முறை இந்தியப் பொருளாதாரத்துக்கு எவ்வாறு அடிப்படையாக இருந்து வருகிறது என்பது குறித்து அறிவு ஜீவிகளோ, பல்கலைக் கழகங்களோ எடுத்துச் சொல்வதில்லை என்பது நமது பெரிய குறைபாடு. ஆனால் அது தான் நிதர்சனமான உண்மை என்பதை நமது கள ஆய்வுகளும் இந்தியப் பொருளாதாரத்தின் போக்கும் உணர்த்தி வருகின்றன.

ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு அத்தியாவசியமாக இருக்க வேண்டியவை  அதிகமான சேமிப்பு, அதிக மூலதனம், கடின உழைப்பு, தொழில் முனையும் தன்மை உள்ளிட்ட காரணிகள் தான். இவை அனைத்தும் குடும்பங்களின் மூலமாக நமது நாட்டில் இயற்கையாகவே கிடைக்கின்றன.

சேமிப்பது என்பது நமது மக்களின் வாழ்க்கை முறை. அது  சமுதாயத்தின் எல்லா மட்டத்திலும் பரவிக் கிடக்கின்றது. அதனால் இன்று நமது நாடு உலக அளவில் அதிகமான சேமிப்புகளைக் கொண்ட சில நாடுகளில் ஒன்றாக உள்ளது.  சுதந்திரம் வாங்கிய போது நமது நாட்டில் ஏறத்தாழ பாதிக் குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வசித்து வந்தனர். ஆனால் அப்போது கூட சேமிப்பு ஒன்பது விழுக்காடு இருந்தது. இன்றைக்கு  பணக்கார நாடுகள் பலவற்றில்  ஒன்பது விழுக்காடு சேமிப்பு என்பது இயலாத காரியம்.

பின்னர் தொடர்ந்து சேமிப்புகள் அதிகரித்து வந்து கடந்த பல வருடங்களாகவே முப்பது விழுக்காட்டுக்கு மேற்பட்ட அளவில் சேமிப்புகள் நிகழ்ந்து வருகின்றன.  அதனால் முதலீடுகளுக்கான தொகை உள் நாட்டிலேயே அதிக அளவில் கிடைக்கின்றது. எனவே வெளி நாடுகளை அதிகமாக நம்பக் கூடிய பொருளாதாரமாக நமது நாடு இருக்கவில்லை. அதிகமான சேமிப்புகளுக்கும், முதலீடுகளுக்கும் காரணம் தங்களை  விடத் தமது குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டுமென எண்ணும் பெற்றோர்களைக் கொண்ட குடும்ப அமைப்பு முறைதான்.

குடும்பத்தின் நலனுக்காகக் கடினமாக உழைக்க வேண்டும் என்பது நமது கலாசாரம் சொல்லும் தர்மம். அதற்காகத் தாய்மார்களும், தந்தையர்களும், மூத்தவர்களும் அதிக அளவில் உழைப்பை மேற்கொள்கின்றனர். தங்களின் சொந்த விருப்பங்களைத் துறந்து குடும்ப நலனையே முக்கியமாக எடுத்துக் கொள்கின்றனர்.  அதற்காகப் புதிய தொழில்களில் நுழைகின்றனர். பல விதமான சிரமங்களையும் துணிச்சலாக மேற்கொள்கின்றனர்.  அதன் மூலம் குடும்பத்தை முன்னேற்றுகின்றனர். அதனால் நாடும் வளர்கின்றது.

சுதந்திரம் பெறுகின்ற போது நமது நாட்டின் விவசாயம், தொழில்,வியாபாரம் உள்ளிட்ட பல துறைகளும் ஐரோப்பியர்களால் அழிக்கப்பட்டிருந்தன. தொன்று தொட்டு உலகின் செழிப்பான தேசமாக விளங்கி வந்த இந்தியா அந்நியர்களால் பெருமளவு சிதைக்கப் பட்டிருந்தது.  ஆனால் சுதந்திரத்துக்கு அப்புறம்  உலகின் முக்கியமான பொருளாதார சக்தியாக உருவாகி வந்து கொண்டுள்ளது. அதற்குக் காரணம் குடும்பம் சார்ந்த நமது பல்துறை வளர்ச்சியாகும்.

கடந்த எழுபது வருடங்களில் தொழில், வணிகத்துறைகள் பெரிய  வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டுள்ளன.  இந்தியப் பொருட்கள் இன்று உலகின்பல பகுதிகளிலும் விற்பனையாகி வருகின்றன. நமது தொழில் மையங்களான சூரத், லூதியானா, திருப்பூர், கரூர், ஆக்ரா உள்ளிட்டவை உலக முழுவதும் பிரபலமான பெயர்களாக உள்ளன. அதற்குக் காரணம் நமது மக்களின் தொழில் முனையும் தன்மை.

பல வருடங்களுக்கு முன்னால் சாதாரணமாக இருந்து வந்த இடங்கள் இன்று நாட்டுப் பொருளாதாரத்துக்குப் பெரும் பங்காற்றி வருகின்றன. சிவகாசி, நாமக்கல், திருச்செங்கோடு, விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின்  பகுதிகள்  அனைத்தும் நமது சாதாரண மக்களின் கடும் உழைப்பால் நமது நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கினை ஆற்றிக் கொண்டிருக்கின்றன. நமது குடும்பங்கள் மற்றும்  சமூகங்களின் குணங்களே அதற்கு அடிப்படையாகும்.

சீரழிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருந்த ஒரு பொருளாதாரம், உலகமே எதிர்பார்க்கும் பெரிய பொருளாதார சக்தியாக ஓரு எழுபது வருடத்துக்குள் மாறியிருக்கின்ற அதிசயம் உலகப் பொருளாதார வரலாற்றில் வேறெங்கும் நிகழ்ந்ததில்லை. அது நமது நாட்டில் நடந்து வருகின்றதென்றால் அதற்குக் காரணம் தொன்மை வாய்ந்த நமது கலாசாரமும், குடும்ப மற்றும் சமூக நெறி முறைகளும் தான். எனவே நமது பொருளாதார அணுகுமுறை என்பது மேற்கத்திய சித்தாந்தங்களுக்கு மாற்றானது. அதைத் தான் தீனதயாள் உபாத்யாயா அவர்கள் எடுத்து வைத்தார்கள். அதனை அங்கீகரித்து முழுவதும் நடைமுறைப் படுத்துவது நமது கடமை.

( ஒரே நாடு – பண்டிட் தீனதயாள் உபாத்யாய நூற்றாண்டு விழா சிறப்பிதழ், சென்னை, ஏப்ரல் 2017)

ஐதரேய, கேன உபநிடதங்கள் புத்தகம் - வாழ்த்துரை


ஆசிரியர்: பேரா.ஜெ. ஞானபூபதி, வெளியீடு: திருக்கோவில் பக்தர் பேரவை, திருப்பூர்

வாழ்த்துரை

வேதங்களும் உபநிடதங்களும் தொன்மை வாய்ந்த இந்தியப் பண்பாட்டின் பெரும் பொக்கிஷங்கள்.   தவ வலிமை மிக்க ஞானிகளும், ரிஷிகளும் தங்களுடைய அயராத தேடுதல்களால் பல்லாண்டு கால முயற்சிகள் மூலமாக உருவாக்கிய சிந்தனைக் களஞ்சியங்கள். நமது தேசத்தின் உயர்ந்த தத்துவப் பாரம்பரியத்தை  இன்றளவும் உலகுக்குப் பறை சாற்றிக் கொண்டிருக்கும் கலாசார அடையாளங்கள்.  

உலக நாடுகள் பலவற்றுக்கும் தனித் தன்மை என ஒன்று உண்டு. நமது நாட்டைப் பொருத்த வரையில் தனித்தன்மை என்பது ஆன்மிகமே ஆகும்.  அதனால் தான் இன்று வரைக்கும் எல்லாவற்றிலும் நாம் இறைவனைப் பார்க்கிறோம்; எல்லாவற்றையும் இறை வடிவாகக் காண்கிறோம். ‘ காக்கை , குருவி எங்கள் ஜாதி,  நீள் கடலும் மலையும்   எங்கள் கூட்டம்,  நோக்க நோக்கக் களியாட்டம்’ என்று பாரதி சொல்வது அந்த நோக்கின் அடிப்படையில் தான்.

மேற்கத்திய சிந்தாந்தங்கள் குறுகிய நோக்குடையவை; ஒட்டு மொத்த வாழ்க்கையையும் முழுமையாக நோக்கும்  சிந்தனை அவற்றில் இல்லை. தனி மனிதத் தேவைகள் மற்றும் பொருளை மட்டுமே மையமாகக் கொண்ட பார்வை ஆகியவையே  அவற்றில் அடிப்படையாக உள்ளன. எனவே அந்த சித்தாந்தங்களை ஒட்டி அமைந்த வாழ்க்கை முறைகள்  தோல்வியடைந்து வருகின்றன.

பிரபஞ்சம், கடவுள், மனிதன், குடும்பம், ஆன்மிகம், பொருளாதாரம் என எல்லாவற்றையும் இணத்து ஒரு சேரப் பார்க்கின்ற தன்மை நமது கலாசாரத்துக்கே உரிய சிறப்பாகும்.  மேலும், உடல், ஆன்மா மற்றும்  வாழ்க்கையின் நோக்கம் உள்ளிட்ட நுட்பமான விசயங்களைப் பற்றி எல்லாம் ஆழமாக ஆராய்ந்து எடுத்துச் சொன்னவர்கள் நமது முன்னோர்கள்.

 அந்த வகையில் தான் வேதங்கள், உபநிடதங்கள் உள்ளிட்ட உயர் நூல்கள் நமது தேசத்தில் தோன்றி வந்துள்ளன. அவற்றின் முக்கிய அம்சமே  வாழ்வின் நிலையான உண்மைகளை எடுத்துச் சொல்லுவதுதான்.  அதனால் தான் உலகின் பல பகுதிகளிலும்  எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்து வந்துள்ள போதும், கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக என்றைக்கும் மாறாத விசயங்களைச் சொல்லுபவையாக அவை நிலைத்து நின்று வருகின்றன. 

பழமைமையான நமது இந்து ஞானப் பாரம்பரியத்தில் உபநிடதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. மகரிஷி அரவிந்தர் அவர்கள் உபநிடதங்களைப் பற்றிக் குறிப்பிடும் போது தேர்ந்தெடுத்த   வார்த்தைகளை உபயோகப்படுத்தி அவை ’இந்திய அறிவின் உயர்ந்த பங்களிப்பு’ எனச் சொல்லுவார்.   ஜெர்மானிய அறிஞர் மேக்ஸ் முல்லர் ‘ உபநிடதங்களை விட உணர்ச்சியும், எழுச்சியும், ஊக்கமும் ஊட்டக் கூடிய நூல் உலகில் வேறெதுவுமில்லை’ எனக் குறிப்பிடுகிறார்.

துரதிர்ஷ்டவசமாக நிலவி வரும் நமது இந்தியக் கல்வி முறையின் குறைபாடுகளால், வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் ஆன்மிக நூல்கள் பாடத்திட்டங்களில் இல்லை. அதனால் தொடர்ந்து பல தலைமுறைகளாக  அவை மக்களுக்குத் தெரியமாலேயே உள்ளன.

அதுவும் வேதங்களும், உபநிடதங்களும் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளதன் காரணமாகவே அவற்றை ஏற்றுக் கொள்ளாத ஒரு வித்தியாசமான அரசியல் சூழ்நிலையை நாம் தமிழகத்தில் கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம். அதனால் நாம் நமது  சந்ததிகளுக்கு எவ்வளவு பெரிய தவறு செய்து வருகிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் பேராசிரியர் ஜெ.ஞானபூபதி ஐயா அவர்கள் செய்துள்ள இந்த முயற்சி மிகவும் போற்றுதலுக்குரியதாகும். ஐயா அவர்கள் ஆன்மிகத்தில் மிகுந்த அனுபவம் பெற்றவர். தமிழ் மற்றும் பிற மொழி ஆன்மிக இலக்கிய நூல்களைப் பெரிதும் கற்றறிந்தவர். முன்னமே கடோபநிடதம் குறித்து மிகச் சிறப்பாக எழுதியுள்ளவர்.

உபநிடதங்கள் இந்து மதத்தின் மையத் தத்துவக் கோட்பாடுகளைச் சொல்லுபவை. அவை பிரம்மனின் உண்மைத் தன்மையை எடுத்து வைத்து, மனித மோட்சத்துக்கான வழி மற்றும் குணங்களை விளக்குகின்றன. இந்திய மதங்கள் மற்றும் கலாசாரத்தில் அவை மிக முக்கியமான இலக்கியங்களாக உள்ளன. மேலும் பண்டைய காலந் தொட்டு இந்தியாவின் ஆன்மிகச் சிந்தனைகளின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வந்துள்ளன.

பேராசிரியர் ஐயா அவர்கள் இந்த நூலுக்கு ஐதரேய மற்றும் கேன உபநிடதங்களை எடுத்துள்ளார். 108 உபநிடதங்களில் அவை இரண்டுமே முக்கிய உபநிடதங்களாகக்கருதப்படும்  பதின்மூன்றில் வருபவை. பகவான் ஆதி சங்கரரால் விளக்கம் எழுதப்பட்ட பெருமைக்குரியவை.

தொன்மையான ஐதரேயா உபநிடதம் மூன்று முக்கிய தத்துவக் கருத்துகளை முன் வைக்கிறது. கேன உபநிடதம் பிரம்மனை விவரிக்கிறது.  இது இந்து மதத்தின் வேதாந்த சிந்தனை வழிமுறைக்கு அடிப்படை நூலாகக் கருதப்படுகிறது.

இந்த நூலின் மிகச் சிறப்பான அம்சம் ஆசிரியர் உபநிடதங்களை விளக்கிச் சொல்லும் முறையாகும். உபநிடத வாக்கியங்கள் முதலில் சமஸ்கிருதத்தில் அப்படியே கொடுக்கப்பட்டுள்ளன. பிறகு அவற்றின்  தமிழ் உச்சரிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் சமஸ்கிருதம் தெரியாதவர்கள் தமிழில் படித்து அதனைத் தெரிந்து கொள்ள முடியும்.

 பின்னர் அவற்றுக்கான விளக்கம் அழகிய தமிழில் கவிதையாக வடிக்கப்பட்டுள்ளது.  அதற்கடுத்து சுலபமாகப் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் எல்லோரும் சிரமம் இல்லாமல் புரிந்து கொள்ள முடியும். தேவைப்படும் இடங்களில் சொல்லியுள்ள விசயங்களுக்கான அர்த்தங்கள்   விளக்கப்பட்டுள்ளன.

மேலும் உபநிடதங்களை முழுமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் தேவையான இடங்களில் பகவான் சங்கரரின் விளக்கம், திருமந்திரம், திருவாசகம் போன்ற உயர்ந்த ஆன்மிகத் தமிழ் இலக்கியங்கள், பாரதியார் கவிதை, ஆங்கில மொழி பெயர்ப்புகள், அண்மைக் காலங்களில் செய்தியாக வந்த பொருத்தமான கருத்துக்கள் ஆகியவற்றை நூலாசிரியர் எடுத்துத் தந்துள்ளார்கள்.  உபநிடதங்களை எளிமையாகவும், அதே சமயத்தில் முழுமையாகவும் எடுத்துச் சொல்லப் பேராசிரியர் எடுத்திருக்கும் முயற்சிகள் மிகவும் பாராட்டுதலுக்குரியவை.

சுவாமி விவேகானந்தர் அவர்கள் ‘ உபநிடதங்கள் வலிமை அளிக்கக் கூடிய பெரும் சுரங்கம். அங்கு மொத்த உலகையே தட்டி எழுப்பக் கூடிய போதுமான வலிமை உள்ளது’ என எடுத்துக் கூறினார்.   அதனால் ‘ ஒளிரக் கூடியதும் ,வலிமை தரக் கூடியதும், பிரகாசமான தத்துவமான துமான உபநிடதங்களுக்குச் செல்லுங்கள்’ என்கின்ற அறைகூவலை விடுத்தார்.

தமிழ் கூறும் நல்லுலகுக்கு அந்தப் பணியைச் செவ்வனே செய்யும் முயற்சியைப் பேராசிரியர் ஞான பூபதி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். அளப்பரிய மதிப்பு மிக்க உபநிடதங்கள் தற்காலத்துக்கும் பொருத்தமானவை.  கேன உபநிடதம் அன்றே            ’அறிவும் ஆன்மாவும் அடைய வேண்டிய இலக்குகள்; எல்லா உயிரனங்களும் அவற்றை அடைய ஏங்குகின்றன’ எனச் சொல்லி  ’ஆன்மிக மனிதன்’ பற்றிப் பேசியது. அதையே இன்று நவீன மேலாண்மை நிபுணர்கள் மனிதனின்  ‘ ஆன்மிகத் தன்மை’  மூலமே வளர்ச்சி சாத்தியமாகும் எனக் கோட்பாடுகளை உருவாக்கி வருகின்றனர்.

பேராசிரியர் ஐயா அவர்களின் இந்த முயற்சி தமிழ் நாட்டுக்கு மிகவும் அவசியமானது. இதன் மூலம் உபநிடதங்கள் மக்களைச் சென்றடைய வேண்டும். இந்து ஞான மரபின் சிந்தனைகள் தமிழகம் முழுவதும் பரவ வேண்டும். அதன் மூலம் தமிழ் மக்கள் ஆன்மிக வெளிச்சம் பெற வேண்டும்.

இந்நூல் உருவாகக் காரணமாக இருந்து ஊக்கமளித்த மதிப்புக்குரிய திரு. எக்ஸ்லான் கே. இராமசாமி அவர்களுக்கும், திருக்கோவில் பக்தர் பேரவை பொறுப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

ஒட்டு மொத்த வளர்ச்சிக்கான நிதி நிலை அறிக்கை


2017 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை பல வகைககளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. வழக்கமாக பிப்ரவரி 28 ஆம் தேதி தான் நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டு அது ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடை முறைக்கு வரும் போது போதிய கால அவகாசம் கிடைப்பதில்லை. அதனால் திட்டப்பணிகளைச் செயல்படுத்துவதில் அரசுக்குப் பல சிரமங்கள் ஏற்படுகின்றன. எனவே இந்த வருடம் முதல் நிதி நிலை அறிக்கை சமர்ப்பித்தல் பிப்ரவரி முதல் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஆங்கிலேயர் காலந் தொடங்கி இது வரை இரயில்வேத் துறைக்கெனத் தனியான நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு வந்தது. இந்த வருடம் முதல் அது பொது நிதி நிலை அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே இனி மேல் இரயில்வேத் துறைக்கெனத் தனியான நிதி நிலை அறிக்கை இல்லை.

2017-18 நிதி நிலை அறிக்கையானது  ஏழைகள்  மற்றும் சாதாரண மக்கள், விவசாயம், கிராமப் பொருளாதாரம், குறு, சிறு தொழில்கள் மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மையப்படுத்தி அமைந்துள்ளது. நமது நாட்டுக்கு அடிப்படையாக விளங்கி வருவது விவசாயத் துறை. கடந்த பல வருடங்களாகவே விவசாயத் துறை பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகிறது. எனவே விவசாயம் மற்றும் கிராமங்களின் முன்னேற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.  விவசாயிகளுக்கான கடன் தொகை முன்னெப்போதும் இல்லாத வகையில்  பத்து இலட்சம் கோடி ரூபாய்க்கு உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயத்துக்குள்ள முக்கிய பிரச்னை நீர் மேலாண்மை இல்லாத தன்மை. எனவே அதிக அளவில் தடுப்பணைகள் கட்டுவதற்கான திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

நமது பொருளாதாரத்துக்கு அதிக அளவில் பங்களிப்பது சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் ஆகும்.  அவை சாதாரண மக்களால் ஆரம்பிக்கப்பட்டு, அவர்களின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் நாட்டின் தொழில் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகின்றன. மேலும் நமது தேசத்திலுள்ள மொத்த வேலை வாய்ப்பில் அவை தான் 92 விழுக்காட்டுக்கு மேல் கொடுக்கின்றன. ஆனால் அவற்றின் வளர்ச்சிக்கு வெவ்வேறு வகையான சிரமங்கள் இருந்து வருகின்றன.  போதிய நிதி வசதிகள் இல்லை. அதற்காகத் தான் மத்திய அரசு 2015 ஆம் வருடம் முத்ரா வங்கியை அறிமுகப்படுத்தியது.  இந்த நிதி நிலை அறிக்கை ரூபாய் ஐம்பது கோடி வரை வருமானம் உள்ள நிறுவனங்கள்  செலுத்த வேண்டிய வரி விகிதம் 30 விழுக்காட்டிலிருந்து, 25 விழுக்காடாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் அவற்றின் வளர்ச்சி அதிகரித்து வேலை வாய்ப்புகள் பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனி நபர் வரி விகிதத்தைப் பொறுத்த வரையில் ரூபாய் 2,50,000 முதல் ரூபாய் 5,00, 000 வரை வருமானம் பெருபவர்கள் இது வரை பத்து விழுக்காடு வரி செலுத்தி வந்தனர். இப்போது அவர்களுக்கான வரி ஐந்து விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் சாதாரண மக்களுக்கான வரிச் செலவு குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ரூபாய் ஐம்பது இலட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு சுமார் 12,5000 ரூபாய் அளவு பலன் கொடுக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் ரூபாய் ஐம்பது இலட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு பத்து விழுக்காடு சர்சார்ஜ் வரி போடப்பட்டுள்ளது. ரூபாய் ஒரு கோடிக்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கு பதினைந்து விழுக்காடு சர்சார்ஜ் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வருமானம் குறைவாக உள்ளவர்களுக்குச் சலுகைகள் அளிக்கப்பட்டும், அதிகமாக உள்ளவர்களுக்கு  அதிக வரி போடப்பட்டும் உள்ளது.  

கட்டமைப்பு வசதிகளைப் பொருத்த வரையில் சிறப்புக் கவனம் கொடுக்கப்பட்டுள்ளது.  2018 மே மாதத்துக்குள் நாட்டில் உள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் மின்சார இணைப்புகள் கொடுக்கப்படும் என உத்திரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வரும் ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புக் கொடுக்கும் திட்டம் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுத்தப்பட உள்ளது.  
ஏழை மற்றும் சாதாரண மக்களுக்காக வீடு கட்டும் திட்டம் முனைப்புடன் செயல்படுத்தப்பட உள்ளது. அடுத்த ஒரு வருடத்தில் ஏழைகளுக்கு ஒரு கோடி வீடுகள் கட்டப்படும் எனச் சொல்லப்பட்டுள்ளது. மேலும் சாதாரண மக்கள் வீடு கட்ட வாங்கும் கடனுக்கான வட்டிகளுக்குச் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது. சிறிய அளவிலான வீடுகள் கட்டுவதற்குக் கட்டுமான நிறுவனங்களுக்கு ஊக்குவிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

கல்வித்துறையில் மேற்படிப்புகளுக்கான தேர்ச்சிகளை மேற்கொள்ள தேசிய அளவில் ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. அதன் மூலம் வெவ்வேறு அமைப்புகள் தேர்வு நடத்துவது தவிர்க்கப்பட்டு, சீரான முறை உண்டாகும். உயர் கல்வித் துறையில் பல்கலைக் கழக மானியக் குழு சீரமைக்கப்பட்டு, திறமையாக இயங்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் கொடுக்கப்படும்.

அரசியல் முறையில் இருக்கும் முக்கியமான பிரச்னை கட்சிகள் பிறரிடமிருந்து நன்கொடை பெறும் முறை. அதில் நேர்மையும் நம்பகத் தன்மையும் இல்லை. இனி மேல் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் யாரும் கணக்கில்லாமல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான முடிவு. இதன் மூலம்  தூய்மையான அரசியலுக்கு ஒரு தொடக்கம் ஏற்பட்டுள்ளது என நம்பலாம்.

எனவே இந்த நிதிநிலை அறிக்கையானது நாட்டின் ஒட்டு மொத்த நலனைக் கருத்தில் கொண்டு, சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கவும் உருவாக்கப்பட்டுள்ள ஒன்றாக உள்ளது. இதன் மூலம் நமது தேசம் சரியான வளர்ச்சிப் பாதையில் முன்னேறி, உலக அரங்கில் சீக்கிரமே முதல் நிலைக்குச்  செல்லும் நிலைமை வர  வேண்டும்.   

( விஜய பாரதம், சென்னை, பிப்.2017)


புதிய கல்விக் கொள்கையின் அவசியம்


மத்திய அரசு தேசிய அளவிலான புதிய கல்விக் கொள்கையை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்காக ”வரைவு தேசியக் கொள்கை 2016- சில உள்ளீடுகள்” என்ற தலைப்பில் முக்கிய விபரங்களை மக்கள் மன்றத்தின் முன் வைத்துள்ளது. அவை குறித்து மக்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

எனவே கடந்த சில மாதங்களாக புதிய கல்விக் கொள்கை குறித்து  நாட்டின் பல பகுதிகளிலும் கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள், பொது நல ஈடுபாட்டாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும்  தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாகத் தமிழகத்தில் அரசியல் மற்றும் பொது வெளியில் சூடான விவாதங்கள் நடந்தேறியுள்ளன.  

ஆனால் அவை பெரும்பாலும்  அரசியல் சார்பினை மையப்படுத்தியே அமைந்துள்ளன. மாணவர்களின் நலன்களை  முன் வைப்பதாக இல்லை.  கல்வி என்பது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் அடிப்படையான விசயமாகும். கல்விக் கொள்கையை சொந்த  லாபங்களுக்காக அரசியலாக்குவது என்பது  நமது மாநிலத்தின் துரதிர்ஷ்டமான சூழ்நிலையாக உள்ளது.  

இதற்கு முந்தைய தேசிய கல்விக் கொள்கையானது 1986 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. பின்னர் அது 1992 ஆம் வருடம் திருத்தியமைக்கப்பட்டது. இடைப்பட்ட கால் நூற்றாண்டு காலத்தில் உலக அளவில் பெரிய மாறுதல்கள் நடந்துள்ளன. உதாரணமாக தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி பல வகைகளில் நமது வாழ்க்கை முறையையே புரட்டிப் போட்டுள்ளது. இப்போது அது கல்வித் துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியா இன்று உலக அளவில் ஒரு பெரிய சக்தியாக உருவாகி வருகிறது. வெவ்வேறு விதமான சவால்கள் இருந்த போதும் இந்தியப் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டு வருகிறது. அதனால் முந்தைய தலைமுறையினரை விட  இன்றைய இளைஞர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. மேலும் ஒரு சுதந்திர நாடாக எழுபது ஆண்டுகளையும்,   தேசிய கல்விக் கொள்கைகளை நடைமுறைப் படுத்தத்   தொடங்கி சுமார் ஐம்பது ஆண்டுகளையும் கடந்து வந்துள்ளதால் நிறைய அனுவங்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

கல்வி என்பது காலத்துக்கேற்ப மாற்றங்களையும் புதிய சிந்தனைகளையும்  உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். உலக நிகழ்வுகளின் பிரதிபலிப்புகள் அதில் இடம் பெற வேண்டும். அந்த வகையில் தற்போதைய கல்விக் கொள்கையே கூட சில ஆண்டுகளுக்கு முன்னரே வந்திருக்க வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கை என்பது நாடு முழுவதிலுமுள்ள   மாணவர்களின் அறிவு, ஆளுமை, திறன்கள் மற்றும் வாய்ப்புகளைப் பெருக்குவதற்கு வழி வகுப்பதாக அமைய வேண்டும். அதன் மூலம் ஒவ்வொருவரும் முழுமையான மனிதராக உருவாகி,  அதனால் அவர்கள் தனிப்பட்ட முறையில் பலன் பெற்று, அதன் மூலம்   நாடும்   முன்னேற்றம் அடைய வேண்டும்.

கடந்த காலங்களில் நமது கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், நாம் இன்னமும் போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது. உதாரணமாக அனைவருக்கும் கல்வி என்பது என்பது இன்னமும் அடைய முடியாத இலக்காகவே உள்ளன.

மேலும் கல்வி முறைகளில் பல விதமான அடிப்படைக் குறைபாடுகள் நிலவுகின்றன. உதாரணமாக, பொறியியல் பட்டதாரிகளில் பெரும்பாலானவர்களுக்கு வேலை செய்வதற்குப் போதுமான  திறமைகள் இல்லை என்பது பல ஆய்வுகள் வெளிப்படுத்தும்  முடிவாகும்.

எனவே புதிய கல்விக் கொள்கை மேற்குறிப்பிட்ட வகையில் உள்ள குறைபாடுகள் பலவற்றையும் களைந்து, அனைவருக்கும் தரமான கல்வியைக் கொடுப்பதாக அமைய வேண்டும். அந்த வகையில் மனித வள மேம்பாட்டுத் துறையால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையின் வரைவு, முதன் முறையாகப் பல விசயங்களை உள்ளடக்கியதாக உள்ளது.

புதிய கல்விக் கொள்கையின் நோக்கங்களாக மூன்று விசயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் முதலாவது கல்வி முறையில் நம்பகத்தன்மையை ஏற்படுத்துவது;  இரண்டாவது மாணவர்களின் வேலை வாய்ப்புத் தன்மையை அதிகரிப்பது; மூன்றாவது அனைவருக்கும் கல்வி கிடைப்பதற்குச் சம வாய்ப்பினை அளிப்பது. இவை மூன்றும் நாட்டின் கல்வி முறைக்கு அடிப்படை என்பதில் எந்த வித  சந்தேகமும் இருக்க முடியாது. 

நமது கல்வித் துறை பல வகைகளில் நம்பிக்கையற்ற தன்மையைக் கொண்டதாக உள்ளது.  தற்போதைய கல்வி முழுமையானதாக இல்லை. ஒரு மாணவனை எல்லா வகைகளிலும் மேம்படுத்தக் கூடிய அம்சங்கள் அதில் இல்லை. கல்வித் துறை நிர்வாகம் பல இடங்களில் சீரழிந்து கிடக்கிறது.

உதாரணமாக தமிழகத்தில் துணை வேந்தர் நியமனம் திறமையின் அடிப்படையில் இல்லாமல் முற்றிலும் வேறு விதமான காரணிகளால் அமைந்துள்ளது நமக்கு அனைவருக்கும் தெரியும். பின்னர் அப்படிப்பட்டவர்கள் நியமனம் செய்யும் பேராசிரியர் உள்ளிட்ட அனைத்து பணி நியமனங்களும் நியாயமானதாக இருப்பதில்லை.  எனவே ஆரம்பக் கல்வி தொடங்கி உயர் கல்வி வரைக்கும் தேசம் பல பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது.

நாடு சுதந்திரம் அடைந்து சுமார் எழுபது ஆண்டுகள் கழித்து இன்னமும் கல்வி அனைத்து பிரிவினருக்கும் கிடைப்பதில்லை.  பள்ளியில் சேர்பவர்கள் அனைவரும் இறுதி வகுப்பு வரை முழுமையாகப் படிக்க முடிவதில்லை. பள்ளிக் கல்வி முடித்தவர்கள்  அனைவருக்கும் கல்லூரிகளில் சேர்வதற்கு வாய்ப்புக் கிடைப்பதில்லை. எனவே அனைவருக்கும் கல்வி என்பதை புதிய கல்விக் கொள்கை முக்கிய குறிக்கோளாக முன் வைக்கிறது.

கல்வி என்பது தேவைகளின் அடிப்படையில் அமைய வேண்டும். அப்போது தான் அது இளைஞர்களின் வாழ்க்கைக்கு உதவுவதாக அமையும். தற்போதைய கல்வி முறையில் உள்ள ஒரு முக்கியக் குறைபாடு, அது வாழ்க்கைக்குத் தேவையான திறன்களைப் போதிப்பதில்லை என்பதாகும்.

இன்று நமது நாட்டில் பல துறைகளுக்குத் திறன் வாய்ந்த தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாகக் கல்வி திறன்களைச் சொல்லிக் கொடுக்காமல் வெறும் ஏடுகளைச் சார்ந்தே உள்ளது. எனவே திறன்களை ஊக்குவிக்கின்ற முறையை இந்தக் கல்விக் கொள்கை மையப்படுத்துகிறது.

மேலும் பாடத்திட்டம் நடை முறை நிலவரங்களைப் பிரதிபலிப்பதாக இல்லை.  தொழில், வியாபாரம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த படிப்புகளில் கூட நாட்டில் நிலவும் நடைமுறைகள் சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை. அனைத்துப் பாடங்களும் நமது நாட்டுக்குச் சம்பந்தமில்லாத ஐரோப்பிய மற்றும் அமெரிக்கக் கோட்பாடுகளை ஒட்டியே அமைந்துள்ளன. அவை பெரும்பாலும் அவர்களின் நாடுகளிலேயே தோல்வி அடைந்து விட்டன; எனவே நமது நாட்டுக்குப் பொருந்துவதாக இல்லை.

இந்தியா உலக அளவில் இரண்டாவது அதிகமான மக்களைக் கொண்ட நாடு. இங்கு புதிய தொழில்களுக்கு வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. எனவே தொழில் முனைவோர்கள் அதிக அளவில் ஊக்குவிக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில் தொழில் முனையும் தன்மையை ஊக்குவிக்கும் வகையில் கல்வி கொடுக்கப்படும் எனப் புதிய கல்விக் கொள்கை கூறுவது வரவேற்கத்தக்கது.

முறையான கல்வித் திட்டத்துக்குள் வர வாய்ப்பில்லாத பல கோடிப் பேர் இன்னமும் நமது நாட்டில் உள்ளனர். அவர்களும் கல்வி பெறும் வகையில் புதிய கல்விக் கொள்கை திட்டங்களை வகுக்க இருப்பது மிகவும் ஆறுதலான விசயமாகும்.

மேலும் நமது நாட்டின் உண்மையான வரலாறு, பாரம்பரியம், கலாசாரம் ஆகியவை இன்னமும் முறையாகப் போதிக்கப்படுவதில்லை. அதனால் சரியான நாட்டுப் பற்றில்லாத இளைஞர்களை நமது கல்வி நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன. மேலும் நீதி போதனை, நற் பண்புகள், இலக்கிய மரபுகள்  ஆகியன போதுமான அளவு பாடத்திட்டங்களில் இல்லை; அதனால் அவை பற்றிய சிந்தனை இல்லாதவர்களையே நாம் தயாரித்து வருகிறோம்.

இன்று உலக முழுவதும் தொழில் நுட்பம் எல்லாத் துறைகளிலும் பரவியுள்ளது. அதன் தாக்கம் கல்வித் துறையில் மிக அதிகமாகவே உள்ளது. உதாரணமாக ஒரு பள்ளி மாணவன் வகுப்பறையில் உட்கார்ந்து கொண்டே உலக நடப்புகளைச்  சில நிமிடங்களில் சேகரிக்க முடியும். எனவே தொழில் நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தும் போது நாம் பல வழிகளில் பலன் பெற முடியும். அந்த வகையில் தொழில் நுட்ப வளர்ச்சியை  கல்வித் துறை அதிக அளவில் உபயோகப்படுத்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வி வளர்ச்சிக்குத் தேவையான ஆசிரியர் பயிற்சி, தலைமைப் பொறுப்புகளுக்குத் தயார் செய்யும் முறைகள், கல்வி நிர்வாகம்,  திட்டமிடல் மற்றும் நிதி திரட்டுதல்  உள்ளிட்ட பலவும் கல்விக் கொள்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. மேலும் குழந்தைகள் மற்றும் மாணவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் கல்விக் கொள்கை அமையும் எனச் சொல்லப்பட்டுள்ளது ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

புதிய கல்விக் கொள்கையானது பல வகைகளில் முந்தைய கொள்கைகளை விட வித்தியாசமாக உள்ளது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். முதலாவதாக  இதுவரை எல்லா விதமான அம்சங்களையும் உள்ளடக்கிய வகையில் கல்விக் கொள்கை என்பது உருவாக்கப்படவில்லை.

இரண்டாவதாக தற்போதைய அளவுக்கு இதுவரை எந்தக் கல்விக் கொள்கையை வகுக்கும் போதும் ஆலோசனைகளும், கருத்துப் பரிமாற்றங்களும் பரவலாக நடை பெற்றதில்லை. இப்போது முதன் முறையாக வரைவுக் கொள்கை மக்கள் மன்றத்தில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாகவே  நாட்டின் பல பகுதிகளில் மனித வளத் துறை வல்லுநர்களிடம் கலந்துரையாடல்களை நடத்திக் கருத்துக்களைக் கேட்டுள்ளது. தொடர்ந்து மக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு வசதிகளை ஏற்படுத்தி, அதன் மூலம் இலட்சக் கணக்கான கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.

மூன்றாவதாக புதிய கல்விக் கொள்கையை வகுப்பதில் மாநில அரசுகளுக்கு உரிய பங்கு அளிக்கப்பட்டுள்ளது.  கல்வித் துறையின் செயல்பாட்டுக்கான ஒரு திட்டம் ஒன்று வகுக்கப்பட உள்ளது. அதற்காக மாநில அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும் தங்களின் உத்திகளையும், செயல் திட்டங்களையும் வகுத்துக் கொள்வதை புதிய கொள்கை ஊக்குவிக்கிறது.

தமிழகத்தில் பொது வெளியில் பரவலாகச் சொல்லப் படும் முக்கிய குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்பது வரைவு கல்விக் கொள்கையை முழுமையாகப் படித்தவர்களுக்குத் தெரியும். உதாரணமாக பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படும் எனச் சொல்லப் படுவது மிகவும் அபத்தமானதாகும். வரைவுக் கொள்கையின் ஒரு முக்கிய நோக்கமே பிற்படுத்தப்பட்ட,   பட்டியலின மக்கள் மற்றும் மலை வாழ் மக்கள் ஆகியோரின் குழந்தைகளுக்குக் கல்வியை அவசியமாகக்  கொடுப்பதாகும்.

அதே போல சமஸ்கிருதத் திணிப்பு என்பது புதிய கல்விக் கொள்கையில் உள்ளது என்பது நகைப்புக்குரிய விசயமாகும். இப்படிச் சொல்லியே ஐம்பது ஆண்டு காலமாக தமிழைப் புறந்தள்ளி ஆங்கிலத்தை அரியணை ஏறச் செய்து விட்ட பெருமைக்குரியவர்கள் நமது போராளிகள். சமஸ்கிருதம் நமது நாட்டின் தொன்மையான மொழி. முந்தைய கல்விக் கொள்கைகளில் அதற்குக் கொடுக்கப்பட்டிருந்த அதே  இடம் தான் தற்போதும் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே புதிய கல்விக் கொள்கையின் விளைவாகத்  தமிழ் நாட்டுக்குப் பலன்கள் இல்லை; சாதாரண மக்கள் பாதிக்கப்படுவார்கள்;  சமஸ்கிருதத் திணிப்பு ஏற்பட்டுத் தமிழ் அழிந்து போகும் என்பதெல்லாம் குறுகிய அரசியல் தன்மை மட்டுமே கொண்ட பேச்சுக்கள்.

நூற்று முப்பது கோடி மக்களைப் பெற்ற பன்முகத் தன்மை கொண்ட நமது தேசத்தில் அனைவருக்கும் ஏற்ற வகையில் கல்விக் கொள்கையை வகுப்பது என்பது இயலாத காரியம். நாடு சுதந்திரம் பெற்ற பின் முதன் முறையாக, அதிக அளவில் கலந்து ஆலோசிக்கப்பட்டு ஒரு வரைவுக் கொள்கை தயாரிக்கப்பட்டு அதுவும் பரவலான விவாதத்துக்குப் பல மாத காலமாக ஆட்படுத்தப்பட்டுள்ளது.

இதில் பல சிறப்பான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அனைத்து தரப்பினருக்கும், தரமான மற்றும் முழுமையான கல்வி என்பது  மையக் கருவாக அமைந்துள்ளது.  வேலை வாய்ப்புகளுக்குத் தயார் செய்யும் வகையிலும், தொழில்களை ஊக்குவிக்கும் வகையிலுமான கல்வி என்கின்ற முறையில்  திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மக்கள் தங்களின் தனி மனித வாழ்க்கையில் முன்னேற வாய்ப்புக்கள் அதிகரித்து, அதனால் ஒட்டு மொத்த தேசமும்  வளர்ச்சிப் பாதையில் செல்ல வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாகவே தெரிகிறது. எனவே இந்த புதிய கல்விக் கொள்கையானது அவசியமான ஒன்றாக உள்ளது.

( ஓம் சக்தி, பிப்.2017)