பாரதிய ஜனதாவின் நாற்பதாண்டுகள்


1980 ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சி ஏப்ரல் ஆறாம் தேதியன்று நாற்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. மத்தியில்  பிரதமர் மோடி தலைமையில் இரண்டாவது முறையாக தொடர்ந்து தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்திக் கொண்டு வருகிறது. மேலும் பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி  பதினாறு மாநிலங்களில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது


பாரதிய ஜனதாவின் நாற்பது ஆண்டு கால வளர்ச்சி அசாத்தியமானது. 1996 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்து, வாஜ்பாய் அவர்கள் பிரதமரானார். 1998 தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று பதிமூன்று மாதங்கள் ஆட்சி நடந்தது.  தொடர்ந்து 1999 தேர்தலில் கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி தொடர்ந்தது


பின் வந்த காலங்களில் கட்சி மேலும் வளர்ச்சி பெற்று, திரு அமித் ஷா தலைவராக இருந்த போது பதினோரு கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப் பெரிய கட்சியாக உருவெடுத்தது.  கட்சியின்  வளர்ச்சிக்குக் காரணம் தேசத்தை மையமாகக் கொண்ட கொள்கைகளும், வாழ்வையே சமர்ப்பணம் செய்து கொண்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்களும் தான்.   


பாரதிய ஜனதாவின் வரலாறு உண்மையில் பாரதிய ஜன சங்கத்தில்  இருந்து துவங்குகிறது. ஜன சங்கம் 1951 ஆம் வருடம் டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அவர்களைத் தலைவராகக் கொண்டு துவக்கப்பட்டது. முகர்ஜி முதல் மத்திய மந்திரி சபையில்  தொழில் துறை அமைச்சராக இருந்து நேருவின் போக்கால் பதவி விலகியவர்


தெளிவான கொள்கைகளின் அடிப்படையில் கட்சி உருவாக்கப்பட்டது. நாட்டின் ஒருமைப்பாடு, நலன் மற்றும் வளர்ச்சி ஆகியன அவற்றின் மையமாக இருந்தன. ஷேக் அப்துல்லாவின் வேண்டுகோளின் பேரில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு  சிறப்பு அந்தஸ்தினை  டாக்டர் அம்பேத்கரின் எதிர்ப்பையும் மீறி சட்டப்பிரிவு 370 மூலம் நேரு கொடுத்தார். நாட்டைப் பிளவு படுத்தும் செயல் என ஜனசங்கம் அதைக் கடுமையாக எதிர்த்தது. அதற்காக தடை உத்தரவை மீறி அங்கு சென்ற முகர்ஜி கைது செய்யப்பட்டு, பின்னர் சிறையிலேயே காலமானார்


1960 ஆரம்பத்திலேயே காங்கிரஸ் அரசு சீனாவுடன் நெருங்கிப் போவதை எச்சரித்து ஜன சங்கம் நிகழ்ச்சிகளை நடத்தியது. ஆனால் நேருவின் அலட்சியப் போக்கால் சீனா 1962ல் படையெடுத்து நம்மை வெற்றி கண்டது.  பாகிஸ்தான் 1965 ல் கட்ச் பகுதியில் ஒரு இடத்தைக் கைப்பற்றியது. நேரு பாகிஸ்தானுடன் சமாதானமாகப் போக விரும்பினார். ஜனசங்கம் அதைக் கடுமையாக எதிர்த்தது. பின்னர் பாகிஸ்தானுடன் போர் ஏற்பட்டு, அதில்  இந்தியா வெற்றி பெற்றது


1971 தொடங்கி இந்திரா காந்தி ஆட்சியில் ஊழல், அகங்காரம் மற்றும் எதேச்சாதிகாரம் ஆகியவை அதிகரித்தன. நீதி மன்றத் தீர்ப்பினை ஏற்காமல் 1975ல் இந்திரா காந்தி அவசரச் சட்டம் கொண்டு வந்தார். அடிப்படை  உரிமைகள் பறிக்கப்பட்டு மக்கள் கொடுமைப் படுத்தப்பட்டனர். அப்போது ஜெய பிரகாஷ் நாராயணன் அவர்கள் தலைமையில் ஒரு மாபெரும் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது


ஜனநாயகத்தைப் பாதுகாக்க அந்த இயக்கத்தை ஜன சங்கம் மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் முன்னின்று நடத்தினர். லட்சக் கணக்கான பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். மக்கள் எழுச்சியின் விளைவாக 1977 தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததது. ஜனசங்கம் அங்கம் வகித்த ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது


நாடு விடுதலை பெற்ற பின்னரும் இங்கு மேற்கத்திய கருத்துகளின் தாக்கமே அதிகம். மேற்கத்திய முதலாளித்துவம் மற்றும் கம்யூனிசம் ஆகிய  இரண்டு மட்டுமே பொருளாதார சித்தாந்தங்களாக முன் வைக்கப்பட்டு வந்தன.  ஆனால்  நமது சிந்தனைகள்,  குடும்ப அமைப்பு மற்றும்  வாழ்வியல் முறைகள் ஆகியன இந்த மண்ணுக்கே உரித்தான சிறப்புத்  தன்மைகளால் சமைக்கப்பட்டவை


எனவே பாரதிய சிந்தனைகளை ஒட்டிஒருங்கிணைந்த மனித நேயம்என்னும் தத்துவம் கட்சியின் அடிப்படைக் கொள்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன் மையக் கருத்து,  மேற்கத்திய சித்தாந்தங்கள் சொல்வது போல் மனிதன் என்பவன் தனி நபர் அல்ல. மனிதர்கள் குடும்பம், சமூகம் மற்றும் தேசத்தினுடைய பிரிக்க இயலாத அங்கங்கள். ஆகவே நாட்டிலுள்ள கடைசி மனிதனின் நலன்களையும்  பாதுகாப்பது நமது தலையாய கடமை என்பதாகும்


மதச்சார்பின்மை என்பது இங்குள்ள  அரசியல் கட்சிகளால் வாக்கு வங்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. நமது கலாசாரம்  மனித இனம் முழுவதையும்  ஒரு குடும்பமாகப் பாவித்து வருவது.  அதனால் உலகில் எங்குமே இல்லாத அளவுக்கு இங்கு வேறுபட்ட வழி முறைகள்  அனைத்தும் எப்போதும் ஆராதிக்கப்பட்டு வருகின்றன. எனவே இங்கு தேவைப்படுவது தேசியம்; தற்போதைய போலி மதச்சார்பின்மை அல்ல. அதனால் 1989 தேர்தலிலேயே அனைவருக்கும் நீதி; யாருக்கும் தாஜா இல்லைஎன்கின்ற நிலைப்பாட்டை கட்சி முன் வைத்தது


கட்சியை விடவும் தேசமே முதன்மையானது என்பதை பாரதிய ஜனதா அடிப்படைக் கோட்பாடாக வைத்துள்ளது.  மேலும் மக்களாட்சி முறை, நாட்டு மக்கள் அனைவரையும் சமமாக பாவித்தல் மற்றும் நெறிகள் சார்ந்த அரசியல் ஆகியன கட்சியின் வழிகாட்டும் கொள்கைகளாக உள்ளன.


ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சி பெரும் தவறுகளைச் செய்ய ஆரம்பித்தது. சர்தார் பட்டேல், அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட மிகத் திறமையான தலைவர்கள் முழுமையாகச் செயல்பட முடியவில்லை. ஆகையால் முகர்ஜி, அம்பேத்கர் போன்றவர்கள் அமைச்சர் பதவிகளிலிருந்தே விலகிச் சென்றனர். எனவே காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக மத்தியிலும் மாநிலங்களிலும் ஆட்சியைக் கொண்டு வர ஜன சங்கம் முயற்சியை எடுத்தது


அதன் பலனாக 1967 தொடங்கி பீகார், உத்திர பிரதேசம் உள்ளிட்ட எனப் பல மாநிலங்களிலும்  ஜன சங்கம் பங்கு பெற்ற அரசுகள் ஆட்சிக்கு வந்தன. அதே சமயம் மத்தியில் இந்திரா காந்தி மூலமாக குடும்ப ஆட்சிக்கு வித்திடப்பட்டது. ஆனால் ஜன சங்கமும், பாரதிய ஜனதாவும் லட்சியங்களை முன் வைத்து தேசத்தையே தெய்வமாக வழிபடும்  தலைவர்களின்  வழிகாட்டுதலில்  வளர்ந்தது.  


ஆரம்ப காலங்களில் ஜன சங்கத்தைக் கட்டமைத்ததில் மிக  முக்கியமான பங்காற்றியவர் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா அவர்கள். அவர் மிகப் பெரும் சிந்தனையாளரும் ஆவார். பின்னர் பாரதிய ஜனதாவின் நாற்பது ஆண்டுகளில் வாஜ்பாய், அத்வானி ஆகியோரின் பங்கு மிக முக்கியமானது.

மேலும் கட்சியின் வளர்ச்சிக்காகப் பல்லாயிரக் கணக்கான தொண்டர்கள்  தமது வாழ்க்கையைத் தியாகம் செய்து வந்துள்ளனர். ஷ்யாம பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாய ஆகிய தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பலபேர்  தம் உயிரையே காணிக்கையாகக்  கொடுத்து வந்துள்ளனர்.  


அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமர் கோவில் நமது நாட்டின் பண்பாட்டுச் சின்னம். சட்டப்பிரிவு 370 நீக்கம் தேசத்தை முழுமையாக ஒருங்கிணைக்கும் பணி. மற்ற கட்சிகள் எல்லாம் அவற்றை யோசிக்கக் கூடத் தயங்கிய போது, பாரதிய ஜனதா அவற்றை முன்னெடுத்து ஒவ்வொன்றாக நிறைவேற்றியும் வருகின்றது. குடியுரிமைச் சட்டத் திருத்தம் 2019 காந்திஜி,  படேல், அம்பேத்கர், நேரு ஆகியோர் கொடுத்த உறுதி மொழியிலானது. எனவே அதை நிறைவேற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வுரிமை கொடுக்கும் கடமையை மோடி அரசு செய்துள்ளது.  


2004 முதல் 2014 வரை நாட்டில் ஊழல்கள் பெருகி, அரசியலில் குடும்பங்களின் ஆதிக்கம் அதிகரித்து, மக்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை இழந்து இருந்தனர். அப்போது நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் பாரதிய ஜனதாவை மக்கள் பெரும்பான்மை ஆதரவில் தேர்ந்தெடுத்தனர். பின்னர் கடந்த ஆறு ஆண்டுகளாக மோடி அரசு பல சாதனைகளைச் செய்து வருகிறது. நேர்மையும் திறமையும் கூடிய வெளிப்படையான ஆட்சியை நடத்தி வருகிறது.  


ஜன தன், முத்ரா, இலவச எரிவாயு, சுகாதார உதவி உள்ளிட்ட  திட்டங்கள் மூலம் ஏழை மக்களின் வாழ்க்கையில்  முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அறுபது வருடங்களாக நடக்காத திட்டங்கள் இப்போது எளிதாக முடிந்து வருகின்றன. எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு எதிரிகள் கட்டுக்குள் உள்ளனர். சர்வதேச அளவில் நாட்டு நலன்களைப் பாதுகாக்க  உறுதியான முடிவுகள் எடுக்கப்படுகின்றன.  


 உலகமே சந்தித்து வரும் கொரோனா பிரச்னையில்  மோடி அரசு உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்கி வருகிறது. தற்போது  கட்சியினர் நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு உணவளித்தும், பல்வேறு உதவிகள் செய்தும் சேவையாற்றி வருகின்றனர். அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தி,  நாட்டை உலக அளவில் முதன்மை நிலைக்கு எடுத்துச் சொல்லும் இலக்கில் பாரதிய ஜனதா பயணித்து வருகிறது.






No comments: