பொதுத்துறை நிறுவனங்களுக்கான புதிய சீர்திருத்தக் கொள்கை அறிவிக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் அறிவித்திருக்கிறார். அதன்படி முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் பங்களிப்பு செலுத்தும் பொதுத்துறைகள் அரசின் வசம் இருக்கும் எனவும், மற்ற நிறுவனங்கள்.தனியார் மயமாக்கப்படும் எனவும் சொல்லியிருக்கிறார்.
1991 ஆம் வருடம் நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசு பல பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதால், பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இழப்பை சரி செய்ய தனியார் மயமாக்கல் ஆக்க வேண்டும் என்று முடிவெடுத்தது. தொடர்ந்து வந்த அரசுகள் அந்தக் கொள்கையை நடைமுறைப் படுத்தி வருகின்றன. 2009-10 முதல் 2013-14 வரை நான்கு வருடங்களில் காங்கிரஸ் கூட்டணி அரசு 80000 கோடி ரூபாய்களுக்கு மேல் தனியார் மயம் ஆக்கியுள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களின் நஷ்டங்களால் வருடா வருடம் நாட்டின் ஒட்டு மொத்த சேமிப்புகளில் சுமார் 10 முதல் 15 விழுக்காடு அளவு குறைந்து அதனால் பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டு வருகின்றது. மேலும் ரூபாய் இரண்டு லட்சம் கோடி ரூபாய்களுக்கு மேல் பொதுத்துறை நிறுவனங்களில் முடங்கிக் கிடக்கிறது.
அதனால் நிதிப் பற்றாக்குறை அதிகரித்து, கட்டமைப்புகள் மற்றும் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சமூக வளர்ச்சித் திட்டங்களுக்கு செலவிட வேண்டிய தொகைகள் குறைகின்றன. மேலும் 40 விழுக்காட்டுக்கு மேற்பட்ட அரசு வருமானம் கடனுக்கு வட்டி கட்டவே சென்று விடுகின்றது.
பொதுத்துறை நிறுவங்களின் கணக்கெடுப்பு 2018-19, எழுபது நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாகவும், அவை வருடா வருடம் அதிகரித்து வருவதாகவும் கூறுகிறது. ஏர் இந்தியா நிறுவனத்தின் நஷ்டம் 2017-18 ஆம் வருடம் 53,777 கோடி ரூபாய்களாக இருந்தது. 2018-19 ல் நஷ்டம் ரூபாய் 87,840 கோடியாக உயர்ந்துள்ளது.
மத்திய அரசின் பி எஸ் என் எல் தொலைபேசி நிறுவனத்தில்
2019-20 நிதியாண்டு வரை மொத்த நஷ்டமாக 39089 கோடி ரூபாய்கள் உள்ளன. சென்ற வருடம் தான் பி எஸ் என் எல் மற்றும் எம் டி என் எல் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதால் மத்திய அரசு சீரமைப்பு நிதியாக 68,751 கோடி ரூபாய்களைக் கொடுத்திருந்தது.
தமிழகத்தில் உள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனத்தின் நஷ்டம் பத்து வருடங்களில் 13000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. எனவே மக்கள் மேல் அதிகரித்து வரும் சுமைகளைக் குறைத்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது ஒரு அரசின் கடமையாகும். அதன் மூலமே நாடு வளர்ச்சி பெற முடியும்.
( புதிய தலைமுறை, மே 28, 2020)
No comments:
Post a Comment