மேற்கு வங்கத்தில் வன்முறை வெறியாட்டம்

 


மே 2 ஆம் தேதி மாலை சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கியதிலிருந்து மூன்று நாட்களில் மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு மிகப் பெரிய வன்முறை வெறியாட்டம் நடந்தேறியுள்ளது. சுதந்திர இந்திய வரலாற்றில் தேர்தல் முடிவுகளை ஒட்டி நடந்த மிகக் கொடூரமான வன்முறையாக அது உள்ளது. கொலைகள், கற்பழிப்புகள், கொள்ளை, சொத்துக்கள் சூறையாடல், கூட்டு பாலியல் பலாத்காரம், வீடுகள் மற்றும் அலுவலகங்களில் குண்டு வீசுதல், தீ வைப்பு, பெண்கள் மானபங்கம், மக்களை ஊரை விட்டே துரத்துதல் என அத்தனையும் அங்கே நிகழ்ந்துள்ளது.

அந்த வன்முறைகளில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலின சமூகங்களைச் சேர்ந்தவர்கள். மாற்றுக் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த சுமார் முப்பது பேர்   உயிரிழந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில்  பெரும்பாலானவர்கள் பாரதிய ஜனதா கட்சி மற்றும் சகோதர அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். திட்டமிட்ட அந்த வன்முறைகளை அங்கு நிறைவேற்றியவர்கள் திரிணாமுல் கட்சியினர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள்.

அந்த வன்முறை நிகழ்வுகள் பலவும் கொடூரமானவை, நெஞ்சை உறைய வைப்பவை. வடக்கு  கல்கத்தாவைச் சேர்ந்த சர்க்கார் என்ற 35 வயதுடைய பாஜக தொண்டர் வீட்டிலிருந்து வெளியில் இழுத்து வரப்படுகிறார். சுமார் 35 பேர் சேர்ந்து கேபிள் கம்பியை வைத்து கழுத்தை முறுக்கி இழுத்துக் கொல்லப்படுகிறார். கூடவே அவர் பிரியமாக வளர்த்து வந்த மூன்று வளர்ப்பு நாய்களும் அடித்துக் கொல்லப்படுகின்றன.

24 தெற்கு பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்த ஹரன் அதிகாரி என்ற 45 வயதான இன்னொரு பாஜக தொண்டர். அவரது எழுபது வயது தந்தை மற்றும் பதினான்கு வயது மகன் ஆகியோர் முன்னால் வன்மையான முறையில்  கொல்லப்படுகிறார். கழுத்து ஒடிக்கப்பட்டு, கை கால்கள், மூக்கு உள்ளிட்ட பகுதிகள் உடைக்கப்பட்டு, முகம் சிதைக்கப்பட்டு  அவர் கொல்லப்படுகிறார். அவரைத் தாக்கியவர்கள் பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும், தன் மகன் ஜெய் ஸ்ரீராம் என உச்சரித்த காரணத்துக்காக முன்னரே அவரை மிரட்டியிருந்தனர் எனவும் அவரது அப்பா சொல்கிறார்.

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் விவரிக்க முடியாதவை. மாநிலத்தின் பல இடங்களில் கற்பழிப்புகள், கூட்டு பலாத்காரம் மற்றும் கொலைகள் நடந்துள்ளன. இருபது வயது இரண்டாமாண்டு படிக்கும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த  கல்லூரி மாணவி மேற்கு மித்னாபூர் மாவட்டத்தில் கற்பழித்துக் கீழ்த்தரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். தேர்தல் நாளன்று பாஜகவின் வாக்குச் சாவடி முகவர்களாக பணியாற்றிய  காரணத்துக்காகவே பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.  

பல மாவட்டங்களிலும் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறைகள் வெளிப்படையாக நடந்தேறியுள்ளன. தாய்மார்கள் சாலைகளில் தரதரவென இழுத்து வரப்பட்டு பொது மக்கள் முன்னிலையில்  கும்பல்களால் கொடுமைப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் வீடியோக்களில் வந்துள்ளன.  22 வயதே ஆன ஆர்.எஸ்.எஸ் தொண்டர் பலராம் மாஜி கிழக்கு பர்தமான் மாவட்டத்தில் திரிணாமுல் குண்டர்களால் அடித்துக் கொலை செய்யப்படுகிறார். அவரது வீடு வன்முறையாளர்களால் சேதப்படுத்தப்படுகிறது.

தேர்தல் முடிவுகள் தெரிய வந்த உடனே பல பாஜக கட்சி அலுவலகங்கள் தீக்கிரையாகின்றன. அங்குள்ள பொருட்கள் சூறையாடப் படுகின்றன. கட்சிப் பொறுப்பாளர்கள், ஆதரவாளர்கள், வாக்களித்தவர்கள் எனப் பலரும் துன்புறுத்தப்பட்டு அவர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் நாசமாக்கப்படுகின்றன.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியரும் விஞ்ஞானியுமான டாக்டர் கோவர்தன் தாஸ் பாஜகவின் புர்பஸ்தலி சட்டமன்ற தொகுதி வேட்பாளர். அவரின் வீட்டுக்கு முன் கும்பல்கள் வந்து கையெறி குண்டுகளை வீசி, உள்ளிருக்கும் அவரையும் குடும்பத்தாரையும் அச்சுறுத்துகின்றனர். அவர் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து தன்னையும் குடும்பத்தாரையும் காப்பாற்றக் கோரி வேண்டுகோள் வைக்கிறார்.

கொல்கத்தா தொடங்கி மாநிலத்தின் பல இடங்களில் எதிர்கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்தவர்கள், குறிப்பாக பாஜகவினர், குறி வைத்து குடும்பத்துடன் தாக்கப்படுகின்றனர்.  சில இடங்களில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் பாதிப்புக்குள்ளாகினர். அதனால் அந்த கட்சிகளும் வன்முறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. கிராமப் பகுதிகளில் குறிப்பாக பெண்களின் நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. கற்பழிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்கப் பயப்படுகின்றனர்.

எனவே பாதுகாப்பு தேடி மக்கள் தங்களின் சொந்த கிராமங்களையும் வாழ்விடங்களையும் விட்டு ஓடுகின்றனர். குடும்பம் குடும்பமாகவும், வீடுகளில் பெரியவர்களை மட்டும் விட்டு விட்டும் சாரை சாரையாக ஆயிரக்கணக்கான பேர் இடம் பெயர்ந்துள்ளனர். பிரபல பத்திரிக்கையாளாரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான  டாக்டர் ஸ்வபன் தாஸ் குப்தா அப்போதே ஆயிரம் இந்து குடும்பங்கள் உயிருக்கு பயந்து வீடுகளை விட்டு ஓடி விட்டதாக தெரிவித்தார்.

பக்கத்து மாநிலமான அஸ்ஸாமில் அவர்களில் சுமார் ஆயிரம் பேர்  தஞ்சம் அடைந்துள்ளனர். மீதி பேர் மாநிலத்தின் வேறு பகுதிகளுக்குச் சென்று விட்டனர். இப்போது அவர்கள் முகாம்களிலும் இருந்து வருவதாகத்  தெரிகிறது. அதனால் இது வரை சுமார் ஒரு லட்சம் பேர் வரை சொந்த நாட்டிலேயே அகதிகளாக இருந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   

வன்முறை குறித்து நேரில் பார்வையிடச் சென்ற மத்திய இணை அமைச்சர் முரளிதரன் அவர்களின் வாகனம் குண்டர்களால் தாக்கப்படுகிறது. அதனால் அவர் பாதியிலேயே திரும்ப நேரிட்டது. பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்கச் சென்ற அந்த மாநில பாஜக பாராளுமன்ற உறுப்பினர் சுபாஷ் சர்க்கார் மற்றும் தற்போதைய சட்ட மன்ற எதிர்கட்சி தலைவர் சுபேந்து அதிகாரி ஆகியோர் வாகனங்களும்  வழிமறித்து தாக்கப்பட்டு மக்கள் சந்திப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  

நடந்த நிகழ்வுகள் குறித்து நேரில் சென்று பார்த்த பட்டியலின சமூக தேசிய ஆணையத் தலைவர் விஜய் கம்ப்ளா அவர்கள் 1947 க்கு அப்புறம் முதன் முறையாக கொலைகளும் கற்பழிப்புகளும் அரசு பாதுகாப்புடன் நடந்து வந்துள்ளன என்றும் அதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலின சமூகத்தினர் என்றும் கூறியுள்ளார். மேலும் சுமார் 1700 சம்பவங்கள் பட்டியலின மக்களுக்கு எதிராக நடந்துள்ளன என்றும் அவை குறித்து காவல் துறைக்கு புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்

அங்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்களுடன் பேசிய தேசிய மகளிர் ஆணையத் தலைவி ரேகா ஷர்மா அவர்கள் அந்த மாநில இளம் பெண்கள் பலரும் தங்களின் எதிர்காலம் குறித்து மிகுந்த கவலையுறுவதாகவும், படித்த பெண்கள் மேற்கு வங்கத்தை விட்டு வெளியேற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இரண்டு நாட்கள் தங்கி மக்களைச் சந்திப்பதற்கு அவருக்கு மாநில அரசு அனுமதி கொடுக்கவில்லை. மாநில அதிகாரிகள் அவரின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து விட்டனர்.

விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் திரு அலோக் குமார் திரிணாமுல் கட்சியினர் மற்றும் அவர்களுடன் சேர்ந்து வன்முறையில் ஈடுபட்ட அடிப்படை மதவாதிகள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென குடியரசுத் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இத்தனைக்கும்  முக்கிய காரணம் முதலமைச்சர் மமாதா பானர்ஜி காவல்துறையின் கைகளை கட்டிப்போட்டு வன்முறையாளர்களுக்கு உடந்தையாக இருப்பது தான்.  பிரச்சாரத்தின் போதே அவர் தேர்தல் முடிந்ததும் மத்திய ரிசர்வ் காவல் படைகள் மாநிலத்தில் பாஜகவை தனியாக  விட்டு போய் விடுவார்கள்; அப்போது நாம் இங்கு என்ன நடக்க வேண்டும் என்பதை முடிவு செய்யலாம் என எச்சரித்திருந்தார்.

இவ்வளவு வன்முறை நடந்தும் மாநில ஆளுநருக்கு எந்த விபரமும் கொடுக்கப்படவில்லை. அரசியலமைப்பு சட்டத்தின்  பிரதிநிதி என்கின்ற முறையில் வன்முறைகள் சம்பந்தமான விபரங்களைக் கேட்டபோது, மாநில தலைமைச் செயலரும், தலைமை காவல்துறை அதிகாரியும் அவருக்கு விபரங்களைக் கொடுக்க மறுத்து விட்டனர். மேலும் மாநில அரசு நீதி மன்றத்துக்கே தவறான தகவல்களைத் கொடுத்தது.

அதனால் ஆளுநர் காவல் துறை திரிணாமுல் கட்சியினரைக் கண்டு பயப்படுகிறது எனக் குற்றம் சாட்டினார். மாநில முதல்வர் வன்முறைகள் நடந்த பின்னரும் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பது குறித்து வருத்தம் தெரிவித்தார். பின்னர் அவரே அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் அஸ்ஸாம் மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் தப்பியோடிய மக்கள் தங்கியுள்ள இடங்களுக்குச் சென்று அந்த மக்களின் துயரங்களைக் கேட்டு ஆறுதல் கூறினார்.

இவ்வளவுக்குப் பின்னரும் அந்த மாநில முதல்வர் நடந்த நிகழ்வுகளைக் கொச்சைப் படுத்தினார். படுகொலையை தற்கொலை என வர்ணித்தார். வன்முறையாளர்கள் மேல் எந்த விதக் கண்டனமும் தெரிவிக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கவில்லை. மத்திய அரசு, மாநில ஆளுநர், நீதி மன்றம் என எந்த அமைப்புகளுக்கும் அவர் சரியான பதிலளிக்கவில்லை.

எனவே பாரதிய ஜனதா கட்சி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி கண்டனக் குரல்களை எழுப்பியது. கட்சியின் தேசிய தலைவர் திரு நட்டா கொல்கத்தாவில் 77 பாஜக சட்ட மன்ற உறுப்பினர்களுடன் ஒன்று சேர்ந்து அமைதியான முறையில் எதிர்ப்பைத் தெரிவித்தார்.

உலகின் வெவ்வேறு பகுதிகளிலும் வாழும் இந்தியர்கள் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்தனர். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நைஜீரியா உள்ளிட்ட முப்பது நாடுகளில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இங்கிலாந்து வாழ் இந்தியர்கள்வங்காள இந்து இன ஒழிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம்எனவும்இந்துக்களின் உயிர்கள் கவனத்துக்குரியதுஎனவும்  எழுதப்பட்டிருந்த பதாகைகளைக் கைகளில் பிடித்திருந்தனர்.

மேற்கு வங்க மாநிலம் வங்கதேசத்துடன் பல நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் திறந்த வெளி எல்லைகளைக் கொண்டுள்ளது. அதனால் ஆரம்ப முதலே அங்கிருந்து ஊடுருவல்கள் அதிகம். சுதந்திரத்துக்குப் பின் தொடர்ந்து அங்கு ஆட்சி செய்து வந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திரிணாமுல் கட்சிகள் சட்ட விரோதமாக அங்கிருந்து வருபவர்களை மறைமுகமாக ஊக்குவித்து வாக்கு வங்கியாக பயன்படுத்தி வந்துள்ளன. பல ஆண்டுகளாகவே அங்கு நடைபெற்று வரும் வன்முறைகள் பலவற்றில் அவர்களின் உள்ளது தெரிய வந்துள்ளது.  

தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 77 இடங்களில் வென்றுள்ளது. அதில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் பாஜகவிடம் தோல்வி அடைந்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் பட்டியலின மற்றும் மலைவாழ் சமூக மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதிகள் மொத்தம் 84 ஆகும். அவற்றில்  38 தொகுதிகளை, அதாவது 45 விழுக்காடு இடங்களை பாஜக வென்றுள்ளது. மேலும் பாஜக வெற்றி பெற்ற தொகுதிகளில் பாதி தொகுதிகள் பட்டியலின மற்றும் பழங்குடி சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்டவை.

அதனால் அவர்கள் குடும்பத்துடன் குறி வைத்து தாக்கப்படுகின்றனர்.. உயிரிழப்புகள் மட்டுமன்றி பல நூற்றுக்கணக்கான பேர் படு காயமடைந்துள்ளனர். திரிணாமுல் கட்சி முதலில் இருந்தே பாரதிய ஜனதா கட்சியில் அர்ப்பணிப்புடன் வேலை பார்ப்பவர்களைத் துன்புறுத்தியும் கொலை செய்தும் வருகிறது. உள்ளூர் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலரையும் அடித்துக் கொன்று அவர்களின் உடல்களை மரத்தில் கட்டித் தொங்க விடுவது பல இடங்களில் நடந்துள்ளது.

அதனால் சென்ற 2020 வருட பின்பகுதியிலேயே முந்தைய ஐந்து வருடங்களில் அந்த மாநிலத்தில் கொல்லப்பட்ட 107 கட்சித் தொண்டர்களின் விபரங்களை பட்டியலிட்டு பாஜக கையேடு வெளியிட்டது. ஆனால் அதற்குப் பின்னரும் தொடர்ந்து அங்கு வன்முறைகள் அரசின் முழு ஆதரவுடன் நடந்து வந்தது.  அதனுடைய உச்ச கட்டம் தான் தேர்தலுக்குப் பின் நடந்த வெறியாட்டம். இந்த முறை அவர்களின் முக்கிய தாக்குதல் பட்டியலின சமூகங்களைச் சேர்ந்த சேர்ந்த கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் பெண்கள் மேல்   இருந்தது. 

ஆனால் அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூட சொல்ல மாநில ஆட்சியாளார்களோ அதிகாரிகளோ யாரும் முன் வரவில்லை. அதனால் தான் சொந்த வீடுகளுக்குத் திரும்ப மக்கள் பயப்படுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்கச் சென்ற  ஆளுநரையே ஆளும் கட்சியினர் எச்சரித்தனர். அதையெல்லாம் மீறி அவர் சென்ற போது  அதிகாரிகளை ஒத்துழைக்க விடாமல் செய்து தொந்தரவுகள் கொடுத்தனர்.

பாதிக்கப்பட்ட மக்களை ஆளுநர் சென்று நேரில் சந்தித்த போது பெண்கள் ஆளுநரின் கால்களில் விழுந்தும் கைகளைப் பற்றிக் கொண்டும் கதறி அழுதனர். தங்களின் மதத்தை விட்டு மாறினாலாவது  பாதுகாப்புக் கிடைக்குமா என அவரிடம் கேட்டனர். அவர்களின் அவலங்களைக் கேட்டு மாநில ஆளுநரே கண்ணீர் வடித்தார். ஒரு ஜனநாயகத்தில் இம்மாதிரி நடந்து கொண்டிருப்பதை தன்னால் நம்ப முடியவில்லை என்றும், நாம் ஒரு பெரிய பூகம்பத்தின் மேல் நின்று  கொண்டிருக்கிறோம் என்றும் கூறி ஆதங்கப்பட்டார்.

மத்திய அரசு மற்றும் ஆளுநர் உள்ளிட்ட பலரும் வேண்டுகோள்களை விடித்தும் திரிணாமுல் கட்சி அரசு இன்னமும் ஆக்க பூர்வமாக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட பலரும் நியாயம் வேண்டி உச்சநீதி மன்றத்தை நாடியுள்ளனர்.

மாநிலத்தில் நடந்துள்ள திட்டமிட்ட அரசியல் படுகொலைகள் பற்றி விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும்; மத்திய அரசின் மேற்பார்வையில் விசாரணைக் குழு வேண்டும்; பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய பாதுகாப்புப் படையினர் இருக்க வேண்டும்; இழந்த உயிர்களுக்கு நிவாரணமும், சொத்துகளுக்கு இழப்பீடும் வேண்டும் என்பது உள்ளிட்ட வேண்டுகோள்களை அவர்கள் நீதி மன்றத்தின் முன் வைத்துள்ளனர்.

இந்த மிகப் பெரிய மனிதாபிமானப் பிரச்னையின் முக்கியத்துவம் கருதி அதை விசாரிக்க உச்ச நீதி மன்றம் ஒத்துக் கொண்டுள்ளது. கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி உயிருக்கும் தன்மானத்துக்கும் அஞ்சி உள் நாட்டிலேயே அகதிகளாக வாழும்  மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இந்த மாதிரி எந்தவொரு மாநிலத்திலும் இனி நடக்காமல் இருக்க மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

( தமிழ் ஹிந்து, ஜூன் 2, 2021)

No comments: