ஏழு ஆண்டுகள்; ஏராள சாதனைகள்

  

திரு நரேந்திர மோடி அவர்கள் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் முறையாக பிரதமராகப் பொறுப்பேற்றார். பின்னர் 2019 ஆம் ஆண்டில் 303 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அவரது தலைமையிலான ஆட்சி தற்போது ஏழு ஆண்டுகளை நிறைவு செய்து பயணித்து வருகிறது.

முந்தைய ஆட்சிகளுடன் ஒப்பிடும் போது மோடி அவர்களின் ஆட்சிக் காலம் பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. வெவ்வேறு துறைகளில் அடிப்படையான மாற்றங்கள், நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்னைகளுக்குத் தீர்வுகள், துணிச்சலான நடவடிக்கைகள், சர்வதேச அளவில் தேசத்துக்கு மதிப்பு, ஊழல் இல்லாத வெளிப்படையான ஆட்சி எனப் பல தளங்களில் வியக்கத் தகுந்த மாற்றங்கள் நடந்து வருகின்றன.

சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரம் அதிகரித்து, வெவ்வேறு துறைகளும் வளர்ச்சியைக் கண்டு வருகின்றன. அரசின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் தேசநலன் மட்டுமே முன் வைக்கப்பட்டு  முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அரசின் ஏழாண்டு செயல்பாடுகளைக் கூர்ந்து பார்த்தால், அசாத்தியமான சாதனைகள் நடந்து கொண்டு வருவதை நம்மால் உணர முடியும்.

இந்தியா போன்ற பரந்து பட்ட தேசத்தில், பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகள் மாநிலங்களில் ஆட்சி செய்து வரும் சூழ்நிலையில், அடிப்படையான பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன என்பது முக்கியமான விசயமாகும். நாடு சுதந்திரம் அடைந்தது முதல் அறுபத்தைக்கு வருடத்துக்கு மேலாக நடக்காத பல விசயங்கள் இப்போது நடந்து வருகின்றன.

உதாரணமாக வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டு ஐம்பத்தைந்து ஆண்டுகள் ஆன பின்னரும், 2014 வரை  ஏழை மக்கள் மற்றும் சாதாரணக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வங்கிகளில் கணக்குத் தொடங்குவது என்பது எட்டாக் கனியாக இருந்து வந்தது. ஆனால் பிரதமர் பொறுப்பேற்ற வருடமே ஆகஸ்டு மாதம் ஜன தன திட்டம் என்கின்ற தனித்துவம் வாய்ந்த திட்டத்தைக் கொண்டு வந்தார். அதன் மூலம் சாதாரண மக்கள் வங்கிக் கணக்குகளைத் தொடங்க எந்தத் தொகையும் வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டது.

அதனால் இதுவரை 42 கோடியே 42 லட்சம் புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றில் 66 விழுக்காடு கணக்குகள் கிராமங்கள்  மற்றும் முழு நகரங்களாக இல்லாத பகுதிகளில் வாழும் மக்களால் தொடங்கப்பட்டவை. மேலும் மொத்த கணக்குகளில் 55 விழுக்காடு பெண்களால் நடத்தப்படுபவை. அந்தக் கணக்குகளில் தற்போதுள்ள உள்ள இருப்புத் தொகை மட்டும் சுமார் ஒரு லட்சத்து நாற்பத்து  ஆறாயிரம் கோடி ரூபாய்கள்.

மேலும் ஏழைக் குடும்பங்களில் சமையல் செய்வதற்கு  மக்கள் சாதரணமாக விறகுகளை உபயோகப்படுத்துகின்றனர். மழைக் காலங்களில் பல சமயம் அவற்றைச் சேகரித்துப் பாதுகாத்து வைப்பது கடினம். எனவே அத்தகைய குடும்பங்களுக்கு இலவச எரிவாயு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு 2016 ஆம் வருடம் அறிமுகப்படுத்தியது. அதன்படி இதுவரை எட்டு கோடி குடும்பங்களுக்கு பெண்களின் பெயரில் எரிவாயு இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மக்களின் வாழ்க்கையில் மருத்துவ வசதி என்பது அத்தியாவசியமான தேவையாகும். சாதாரண மக்களும் மருத்துவ உதவிகளைப் பெரும் வகையில் மத்திய அரசு 2018 ஆம் வருடம் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை நடைமுறைப் படுத்தியது.  அதன்படி பத்து கோடி ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த ஐம்பது கோடி மக்கள், வருடம் ஒரு குடும்பத்துக்கு ஐந்து லட்ச ரூபாய் அளவு மருத்துவ உதவிகளைப் பெற முடியும். அதன் மூலம் இதுவரை நாட்டிலுள்ள 22000க்கும் மேற்பட்ட மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறும் வகையில் சுமார் பதினாறு கோடி மருத்துவ அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் பொதுவாக மருந்துக் கடைகளில் மருந்துகள் அதிக விலைகளில் விற்கப்பட்டு வருகின்றன.  அதற்காக மக்கள் மருந்தகம் என்னும் திட்டத்தை மத்திய அரசு ஆரம்பித்து, சந்தை விலையில் ஐம்பது விழுக்காடு முதல் தொண்ணூறு விழுக்காடு வரை  குறைவாக மருந்துகளைக் கொடுக்கின்றன. தற்போது நாடு முழுவதும் 7700 மருந்தகங்களில் மேல் சுமார் 1500 வகையான மருந்துகள் கிடைக்கின்றன.  

நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையான துறைகளான விவசாயம், சிறு தொழில்கள், கட்டமைப்பு உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. சுதந்திரத்துக்கு அப்புறம் முதல் முறையாக விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விளை பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலை அதிகரிக்கப்பட்டு, பயிர்களின் உற்பத்தி விலைக்கு மேலாக 50 முதல் 190 விழுக்காடு வரை வருவாய் உறுதி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.  

குறு, சிறு, நடுத்தரத் தொழில்களை அதிக அளவில் உருவாக்கவும், வளர்ச்சி அடையச் செய்யவும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முத்ரா திட்டத்தின் மூலம் இதுவரை 15 லட்சம் கோடி ரூபாய்களுக்கு மேற்பட்ட சுமார் 29 கோடி கடன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ’ ஸ்டேண்ட் அப் இந்தியா’ ( எழுந்து நில் இந்தியா) திட்டம் மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பட்டியலின, மலைவாழ் மக்களுக்கு சுமார் 26,000 கோடி ரூபாய் கடன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மோடி அரசு பதவியேற்ற ஆயிரம் நாட்களுக்குள் நாட்டில் மின் வசதி இல்லாத எல்லா கிராமங்களுக்கும் இணைப்புகள் கொடுக்கப்பட்டு, இப்போது நாடு முழுவதும் நூறு விழுக்காடு மின்சார இணைப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏழு வருட காலத்தில் கிராமப் பகுதிகளில் மட்டும் 2.84 லட்சம் கிலோ மீட்டர் அளவுக்கு சாலைகள் போடப்பட்டுள்ளன. முதல் முறையாக வட கிழக்கு மாநிலங்களில் சாலைக் கட்டமைப்பு பணிகள் அதிகமாக நடைபெற்று, அவை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கப்பட்டு வருகின்றன.

நாடு சுதந்திரமடைந்து 2022 ஆம் வருடத்தில் எழுபத்தைந்து ஆண்டுகளை நிறைவு செய்யும் போது, அனைத்து மக்களும் வீடு மற்றும் அடிப்படைத் தேவைகளைக் கொடுக்க வேண்டுமென்ற லட்சியத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை 1.87 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. எல்லா வீடுகளுக்கும் சுத்தமான தண்ணீர் குழாய் மூலம் 2024 ஆம் வருடத்துக்குள்  கொடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை நாட்டில் சுமார் 7.2 கோடி வீடுகள் அந்த வசதியைப் பெற்றுள்ளன.

பல ஆண்டுகளாகத் தீர்க்க இயலாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த  பிரச்னைகள் இப்போது தீர்க்கப்பட்டுள்ளன. ஜம்மு- காஷ்மீர் மாநில சட்டப்பிரிவு 370 அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்டோரின்  எதிர்ப்புகளையும் மீறி, தற்காலிகமான என்ற பெயரில் தொடர்ந்து நீடித்து வந்தது. 2019 ஆகஸ்டில் அது நீக்கப்பட்டு, இப்போது அந்தப் பகுதி முழுமையாக நாட்டுன் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் குடியுரிமை மறுக்கப்பட்டிருந்த இரண்டு லட்சம் பட்டியலின மக்கள் அதைப் பெற்றுள்ளனர். பெண்களுக்கான ஒதுக்கீடுகள் மற்றும் அனைத்து சட்டங்களும் முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளன.  தீவிரவாதம் குறைந்து அந்தப் பகுதி வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டுள்ளது.

2019 டிசம்பரில் குடியுரிமைச் சட்டம் திருத்தப்பட்டு நமது அண்டை நாடுகாளான பாகிஸ்தான், வங்காள தேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவற்றில் மத அடிப்படையில் பாதிப்புக்களாகி இங்கு 2014க்குள் வந்து சேர்ந்துள்ள சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை வழங்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மகாத்மா காந்தி, சர்தார் பட்டேல் உள்ளிட்ட தலைவர்கள் விரும்பி, அறுபது வருடங்களுக்கு மேலாக கிடப்பிலிருந்த இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது.

நமக்கு எதிரி நாடான பாகிஸ்தானுக்கு அவர்களின் வழியிலேயே தக்க பதிலடிகள் கொடுக்கப்பட்டு, இப்போது சர்வதேச அளவில் அந்த நாடு தீவிரவாத நாடாக அடையாளம் காணப்பட்டுள்ளது. தொடர்ந்து நமக்குத் தொந்தரவுகளைக் கொடுத்து வரும் சீன நாட்டுக்கு எல்லைப் பகுதிகளில் மட்டுமன்றி,  உலக அளவிலும் தடைகள் போடப்பட்டு வருகிறது.  

உலக அளவில் கடந்த ஏழு வருடங்களாக மோடி அரசு மேற்கொண்டு வரும் அணுகுமுறைகள் காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாட்டின் மதிப்பு உயர்ந்து வருகிறது. சர்வதேச தலைவர்களிடம் அவர் தனிப்பட்ட முறையில் கொண்டுள்ள உறவுகள், நாட்டுக்குப் பெரிதும் உதவுகின்றன. அதனால் சீனாவைத் தவிர மற்ற  வல்லரசு நாடுகள் உள்பட பலவும் இந்தியா ஐக்கிய நாடுகள் சபையில் நிரந்தர உறுப்பினராவதை ஆதரிக்கின்றன.   

நமது நாட்டில் பல ஆண்டு காலமாகவே அரசு நடவடிக்கைகளில் ஊழல் பிரிக்க முடியாத அங்கமாக ஆகியிருந்தது. அதனால் மக்களின் முன்னேற்றம் தடைபட்டது மட்டுமன்றி, தேசத்தின் சொத்துகளும் வீணாகி வந்தன. பிரதமர் பொறுப்பேற்ற பின்னர், ஊழலை ஒழிக்கும்   வழிமுறைகளை உறுதியுடன் செயல்படுத்தி வருகிறார். அரசாங்கத்திடமிருந்து மக்களுக்கு கொடுக்கப்படும் பணம் இடையில் செல்வதை நிறுத்த, பயனாளிகளின் கணக்குகளிலேயே நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது.    

அதன் கீழ் 319 அரசின் திட்டங்கள் கொண்டுவரப்பட்டு  இதுவரை 15.47 லட்சம் கோடி ரூபாய் அளவு தொகை  மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் நாட்டுக்கு சுமார் 1.78 லட்சம் கோடி சேமிப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் பெரிய கம்பெனிகள் கோடிக் கணக்கில் கடன்களை வாங்கிக் கொண்டு திருப்பிச் செலுத்தாத போது, அதற்கு உத்தரவாதம் கொடுத்தவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை நான்கு லட்சம் கோடி ரூபாய் அளவு ஏமாற்றுப் பேர்வழிகளிடமிருந்து கடன்கள் திரும்பிப் பெறப்பட்டுள்ளன.

2020 மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதையும் நிலை குலையச் செய்து விட்டது. அதனால் உலகின்  இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நமக்கு சவால்கள் அதிகம். ஆனால் இந்த சமயத்திலும் இந்தியா செயல்பட்டு வரும் விதம் உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. உலகில் தடுப்பூசிகளைத் தயாரித்து வரும் ஐந்து நாடுகளில் நமதும் ஒன்று. மேலும் மேற்கத்திய நாடுகளை எல்லாம் முந்தி அதிகப்படியான பேருக்கு தடுப்பூசிகளைப் போட்டுள்ள நாடாகவும் உள்ளோம்.

மேலும் மக்கள் தொகை அடிப்படையில் இறப்பு விகிதம் நமது நாட்டில் மிகவும் குறைவு, கொரோனா தொடங்கிய பின்னர் பத்து மாதங்களுக்கு மேலாக எண்பது கோடி மக்களுக்கு இலவசமாக உணவுப் பொருட்களும், பாதிக்கப்பட்ட துறைகள் மற்றும் பிரிவினருக்கு சலுகைகள் மற்றும் உதவித் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதனால் 2020-21 நிதியாண்டில் முதல் அரையாண்டில் வீழ்ச்சியைக் கண்ட பொருளாதாரம், இரண்டாவது அரையாண்டில் வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டுள்ளது.  

கொரோனா சமயத்தில் பிரதமர் சுயசார்பு பொருளாதாரத்தின் அவசியம் குறித்து வலியுறுத்தி அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.  உலக நாடுகள் நமது பொருளாதாரத்தின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. சென்ற வருடம் மட்டும் 82 பில்லியன் டாலர் அளவு வெளிநாட்டு மூலதனம் இங்கு வந்துள்ளது. நமது அந்நியச் செலாவணி கையிருப்பு முன்னெப்போதும் இல்லாத அளவு 600 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது. வரக்கூடிய காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரமே உலக நாடுகளில் மிக வேகமாக வளருவதாக இருக்கும் என சர்வதேச கணிப்புகள் சொல்லுகின்றன.

எத்தனையோ சிரமங்களையும் மீறி பல துறைகளில் வளர்ச்சியும், மக்களிடையே நம்பிக்கையும் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு  குடிமகனும் இந்தியன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுமளவில் அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. மோடி அரசின் ஏழு வருட கால ஆட்சி சுதந்திர இந்திய வரலாற்றில் அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்தி, புதிய இந்தியாவுக்கான பாதையில் உறுதியாகப் பயணித்து வருகிறது.   

( தினமணி, ஜூன் 17,2021)

No comments: