பாரதக் குடும்பங்களின் சிறப்பம்சங்கள்

 

மனித இனம் தனது வாழ்க்கையை கணவன் – மனைவி- குழந்தைகள் – பெற்றோர் எனக் கூடி வாழ்ந்து சந்ததிகளை உருவாக்கி வாழ்வதற்குச் சமைக்கப்பட்ட முறைதான் குடும்ப அமைப்பு. அதில் பாரத நாட்டுக் குடும்ப அமைப்பு முறையானது தனிச் சிறப்புக்களைப் பெற்றது. நமது தொன்று தொட்ட வாழ்க்கை முறையில் ஏற்பட்ட ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் அனுபவங்களை வைத்து சிறந்த தலைமுறைகளை உருவாக்கி விட்டுச் செல்லும் ஒரு உயர்ந்த முறையானது இங்கு உருவாக்கப்பட்டது. அதன் மூலமாகத்தான் பண்டைய காலந்தொட்டு பண்பட்ட வாழ்க்கை முறை, பல்வேறு துறைகளிலும் உச்சம் தொட்ட சாதனைகள், மனித இனத்துக்கே முன்னோடியாக வாழ்ந்த தன்மை என ஒரு உயர்ந்த நோக்குடன் வாழும் பெருமைக்குரிய சமுதாயமாக பாரத தேசம் விளங்கி வந்தது.

கடந்த ஆயிரம் ஆண்டுகளில் நமது தேசம் பல்வேறு படையெடுப்புகளைச் சந்தித்தது. இங்கு ஆட்சியைக் கைப்பற்றிய அந்நிய சக்திகள் நம்மைப் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக்கிப் பெரும் சிதைவுகளை உண்டாக்கின. அதனால் நமது பாரம்பரிய அமைப்பு முறைகள் பலவும் கடும் சவால்களை எதிர்கொண்டன. அதனால் அவை பல சிரமங்களுக்கு ஆளாகின. ஆயினும் உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது நமது குடும்ப அமைப்பு முறையானது இன்னமும் உறுதியான அடிப்படைகளைக் கொண்டு சிறந்து விளங்கி வருகிறது.

குடும்பமே மனித வாழ்க்கையின் ஆதாரம். குடும்பம் நிறைவானதாக அமைந்தால் மனித வாழ்க்கை மகிழ்ச்சியானதாகவும் பயனுள்ளதாகவும் அமையும். அதே சமயம் குடும்பம் சச்சரவுகள் நிறைந்ததாக இருந்தால் வாழ்க்கை குழப்பங்கள் நிறைந்து அர்த்தமில்லாததாக அமைந்து விடும். நிறைவான குடும்பங்கள் அமைதியான சமுதாயம் மற்றும் வளர்ச்சியை நோக்கிய தேசத்துக்கு ஆதாரமாக இருக்கும். உடைந்து போன குடும்பங்கள் சிதைவுகள் நிறைந்த சமுதாயம் மற்றும் பிரச்னைகள் நிறைந்த பொருளாதாரங்களுக்கு வழி வகுக்கும். பல மேற்கத்திய நாடுகள் இப்போது பெரும் சமுதாயப் பிரச்னைகள் மற்றும் மோசமான பொருளாதார நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதற்குக் காரணம் அங்கு வேகமாக அதிகரித்து விட்ட சிதைவுற்ற குடும்பங்களே காரணம் என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பாரத தேசத்தைப் பொறுத்த வரையில் பண்டைய காலந்தொட்டு இன்று வரை வலுவான குடும்பங்களே நமக்கு ஆதாரமாக விளங்கி வருகின்றன. ஆங்கிலேயர்கள் இங்கு வந்து பதினெட்டு –பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் காலூன்றி நமது பாரம்பரிய வாழ்க்கை முறைகளைத் திட்டமிட்டுச் சிதைக்கும் வரை, ஆரம்ப காலந்தொட்டுப் பல நூற்றாண்டுகள் தொடர்ச்சியாக உலக அரங்கில் முதல்நிலை நாடாகப் பாரதம் விளங்கி வந்ததை வரலாறு தெளிவாக்குகிறது. பின்னர் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் பெரும் சிதைவுகளுக்கு உள்ளாகிப் பல்வேறு துறைகளிலும் நாடு வீழ்ச்சியடைந்தது. அதன் பின் சுதந்திரம் பெற்று வெறும் எழுபத்தெட்டு ஆண்டுகளில் இன்றைக்கு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாகப் பீடு நடை போட்டு முன்னேறி உலகின் பிற நாடுகளுக்கு முன்னுதாரனமாக விளங்கிக் கொண்டு வருகிறது. அவை அனைத்துக்கும் அடிப்படையான காரணம் பாரதீயக் குடும்பங்கள்.

பாரதக் குடும்பங்களின் சிறப்புகளாக ஐந்து அம்சங்களைச் சொல்லலாம். பாரதக் குடும்பங்கள் குடும்பங்கள் மன நிறைவான வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்கி வருகின்றன. வாழ்க்கையின் அடிப்படை நோக்கமே நிறைவான வாழ்க்கை தான். பாரதக் குடும்ப முறை அதனைத் தருகிறது. எத்தனையோ சிரமங்களைச் சந்தித்த போதும் ஏழை மக்கள் கூட மன நிறைவுடன் இருப்பதற்குக் காரணம் குடும்பம்தான். அன்பு செலுத்தி ஆறுதல் சொல்லி ஊக்கம் கொடுக்கும் பெரியவர்கள், ஒருவரை ஒருவர் நேசித்து கணவன் மனைவியாக வாழ்ந்து குழந்தைகளின் நலனுக்காகத் தம்மை அர்ப்பணிக்கும் தம்பதியர், கள்ளம் கபடம் இல்லாமல் விளையாடி வாழும் குழந்தைகள் எனக் குடும்பம் என்பதே ஒரு தனி உலகம். அதற்காக இணைந்து பெரியவர் முதல் சிறியவர் வரை வாழும் வாழ்க்கை மிகச் சிறப்பானது. பாரதக் குடும்ப முறை பொறுப்புகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டது. மேற்கத்திய நாடுகளைப் போல உரிமைகளை மையமாக கொண்டதல்ல. ஒவ்வொருவரும் பொறுப்புகளை உணர்ந்து அந்த அந்தக் கால கட்டங்களில் தனது பொறுப்புகளைச் செய்து முடிக்கும் போது வாழ்க்கை நிறைவானதாக அமைகிறது.  

இரண்டாவது சிறப்பம்சம் பாரதக் குடும்ப முறையில் தனி மனித முன்னேற்றம்  எளிமையாகின்றது. இங்கு குடும்பத் தலைவர் மற்றும் தலைவியின் தலையாய கடமையே அடுத்த தலைமுறைகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதாகும். அதற்காகவே பாரதீயக் குடும்பங்கள் அதிகம் சேமிக்கின்றன; குழந்தைகளுக்குத் தரமான கல்வியைக் கொடுக்கின்றன; அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துப் பொருத்தமான முறையில் திருமணம் செய்து வைக்கின்றன; பின்னர் தமது பேரக் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு அவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்கத் தம்மை அர்ப்பணித்துக் கொள்கின்றன. அதனால் குடும்பத்திலுள்ள மகனும், மகளும் வெற்றிகரமான முறையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது எளிதாகிறது. நமது நாட்டில் வருடந்தோறும் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் தமது சேமிப்புகள் மற்றும் உழைப்பினை மூலதனமாக வைத்துச் சிறிய அளவில் தொழில்களை ஆரம்பிக்கின்றன. அவை பின்னர் நிறுவனங்களாக நன்கு வளர்ந்து அடுத்த தலைமுறையினருக்கு நல்ல பலன்களைத் தருகின்றன.

பாரதக் குடும்பங்களின் மூன்றாவது சிறப்பம்சம் அவை நமது கலாசாரம் மற்றும் பண்பாட்டின் பாதுகாவலர்களாக விளங்கி அவற்றைத் தலை முறை – தலை முறைகளாகப் பாதுகாத்துக்  கொண்டு வந்து கொண்டிருக்கும் உயர்ந்த பண்பு. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நமது பண்பாடு நீடித்து நிலைத்து வர அடிப்படைக் காரணம் குடும்பங்கள். ஆரம்ப காலந்தொட்டு நமது வாழ்க்கை முறைகள், வழிபாட்டு முறை, உறவு முறை எனப் பலவும் மாறாமல் இருந்து வருகின்றன. அவற்றையெல்லாம் அப்படியே எடுத்துக் கொண்டு வருவது குடும்பங்கள் தான். மேலும் அவற்றை நமது தேசத்தில் மட்டுமல்லாமல் வெளி நாடுகளுக்குச் சென்று வாழும் போது கூட கடைப்பிடித்து வருவது தான் மிகவும் சிறப்பான விசயம். 

சில வருடங்களுக்கு அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு செய்தி சமூகவியலாளர்களை ஆச்சரியப்படுத்தியது. சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னர், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதிதாகத் திருமணமான இளம் பெண் தனது கணவனுடன் அமெரிக்கா சென்று வாழ்க்கையை நடத்துவதற்குத் தயாரானார். அப்போது அவரது தாயார் எத்தனை சிரமங்கள் வந்தாலும் நமது குடும்பங்கள் பாரம்பரியமாக குடும்ப நலனுக்காக கடைப்பிடிக்கும் விரதம் மற்றும் ஆற்று நீரில் வழிபாடு ஆகியவற்றை மட்டும் தொடர வேண்டும் என மகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட மகள்  ஆரம்ப காலத்தில் அவர்கள் வாழ்ந்து வந்த பெரு நகரில் விரதம் இருந்தும் ஆற்றுப்பகுதி இல்லாதால் தூரத்திலிருக்கும் ஒரு சிறு நீர் நிலையைக் கண்டுபிடித்து கணவனுடன் சென்று தனிக் குடும்பமாக வழிபாடு நடத்தினார். வருடங்கள் அதிகரிக்க அவர்கள் வழிபாடு நடத்துவதை அமெரிக்காவின் அண்டை நகரங்களில் வாழ்ந்த அறிந்த பல வட மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தம்பதியர்கள் ஒன்றிணைந்தனர். பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து விரதம் இருந்து தூரத்தில் உள்ள ஆற்றங்கரைக்குச் சென்று நமது நாட்டில் உள்ளது போலவே வழிபாடு நடத்தி வருகின்றனர். எனவே ஒரு குடும்ப பெண் வைராக்கியத்துடன் கடைப்பிடித்த உறுதி இன்று அமெரிக்காவில் தாய் நாட்டில் இருப்பது போலவே வழிபாட்டை நடத்த வழி வகுத்திருக்கிறது. அதே போல வெளி நாடு வாழ் தமிழ் குடும்பங்கள் நமது பண்டிகைகளை உலகின் பல நாடுகளிலும் கொண்டாடி வருவது நமக்குத் தெரியும். எனவே குடும்பங்கள்  நமது கலாசாரம் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருவதற்கு ஆதாரமாக விளங்கி வருகின்றன.

நமது குடும்பங்களின் நான்காவது சிறப்பம்சம் சமூக அமைதியைக் காப்பதாகும். ஒரு ஊரோ, மாவட்டமோ, மாநிலமோ, தேசமோ நிம்மதியாக வாழ்ந்து வளர்ச்சியைக் காண்பதற்கு அந்த அந்தப் பகுதிகளைச் சேர்ந்த சமூகங்கள் அமைதியாக இருப்பது அவசியமாகிறது. சமூக அமைதி அதிகமாக நிலவும் தேசங்களில் தான் நிறைவான வாழ்க்கையும் பொருளாதார முன்னேற்றமும் ஏதுவாகிறது. இன்றைக்குப் பல மேற்கத்திய நாடுகளில் மக்கள் தனி நபர்களாக வாழ்ந்து வருவதால் சமூக அமைப்புகள் செயலிழந்து விட்டன. உறைவு முறைகள் சிதைந்து சமூக பாதுகாப்பு பெரும் கேள்விக் குறியாகி விட்டது.

எனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் குடும்பங்கள், குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோய் வாய்ப்பட்டவர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் தவிர்க்க முடியாத கடமையாகி விட்டது. பெற்றோர்களும், குழந்தைகளுமே தங்களின் சொந்த குடும்பங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத போது அரசாங்க நிர்வாகம் நாட்டிலுள்ள பல லட்சக்கணக்கான குடும்பங்களைப்  பாதுகாப்பது என்பது இயலாத ஒன்று. மேலும் அதற்கு அந்த நாடுகளின் ஒட்டு மொத்த பொருளாதார உற்பத்தியில் வருடா வருடம்  இருபது முதல் நாற்பது விழுக்காடு வரை செலவிடப்படுகிறது. அவ்வளவு பெரிய தொகைகளைச் செலவு செய்ய முடியாமல் அந்த அரசாங்கங்கள் திணறி வருகின்றன.

அதே சமயம் நமது தேசத்தில் எவ்வளவோ சிரமங்கள் இருப்பினும், குடும்ப அமைப்பு முறை பெருமளவு வலுவாக இருந்து வருவதால், கிராமங்கள் தொடங்கி பெரு நகரங்கள் வரை  அமைதி காக்கப்பட்டு வருகின்றது. குடும்பங்கள்  உறவுகளாக, நட்பு வட்டங்களாக விரிந்து விழாக்கள், பண்டிகைகள், பொது நிகழ்ச்சிகள் எனப் பலவற்றையும் இணைந்து ஆண்டாண்டு காலமாக நடத்தி வருகின்றன. அதனால் சமூகங்களில் அமைதி நிலவி தேசத்தின் முன்னேற்றம் சாத்தியமாகிறது.

பாரதக் குடும்பங்களில் ஐந்தாவது முக்கிய அம்சம் அவை பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக விளங்கி வருகின்றன என்பதாகும். அந்நியர்களால் நமது செல்வங்கள் ஒவ்வொரு முறையும் சூறையாடப்பட்டு, பின்னர் காலனி ஆதிக்க சக்திகளால் பொருளாராதாரம் பெருமளவு சீரழிக்கப்பட்ட போதும் அவை மீண்டெழுந்து வருவதற்கு அடிப்படைக் காரணம் உறுதி வாய்ந்த நமது குடும்ப அமைப்பு முறை.

சுதந்திர காலத்தில் மிகவும் வளர்ச்சி குறைந்த நாடாக இருந்த நமது தேசம் இப்போது  உலகிலேயே மிக வேகமான வளர்ச்சியைக் கொண்ட நாடாக விளங்கி வருகிறது. மேலும் தற்போது உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு பதினைந்து விழுக்காட்டு மேல் பாரதம் பங்களித்துக் கொண்டுள்ளது. எதிர்காலத்தில் உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான அதிக வாய்ப்புள்ள நாடாக பாரதம் விளங்குகிறது என அனைத்து சர்வதேச கணிப்புகளும் ஒத்துக் கொள்கின்றன.

கடந்த இரண்டாயிரம் கால உலக வரலாற்றில் எந்த ஒரு நாடும் ஒரு எழுபத்தைந்து ஆண்டுகளில் மிக ஏழை நாடாக இருந்து உலகின் அதிக வாய்ப்புள்ள நாடாக மாறவில்லை. அதற்கு ஒரே விதி விலக்கு பாரத நாடு மட்டுமே. அதற்கான முதன்மையான காரணங்களாக இங்கு உண்டாகும் அதிக சேமிப்புகள், மக்களின் அதீத தொழில் முனையும் தன்மை, அடுத்த சந்ததியினருக்காக அர்ப்பணிப்புடன் உருவாக்கப்படும் தொழில்கள் ஆகியவற்றைச் சொல்லலாம். அவையெல்லாவற்றுக்கும் காரணம் நமது பாரதீயக் குடும்ப அமைப்பு முறை மற்றும் அதை வழி நடத்தும் சனாதனக் கலாசார அடிப்படைகள் என்பதைக் கள ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

எனவே இந்துக் குடும்ப முறை என்பது  நமது பாரம்பரியம் நமக்குக் கொடுத்திருக்கின்ற ஒரு  அரிய நன்கொடை. ஆகையால் அதைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைகளுக்கு கொடுப்பது நமது தலையாய கடமை.

அதே சமயம் அண்மைக் காலங்களில் நமது சமூகங்களில் உண்டான தாக்கங்களால் பாரதீயக் குடும்ப அமைப்பு முறை சில சவால்களைச் சந்தித்து வருகிறது. எனவே அதில் ஏற்பட்டுள்ள குறைகளைக் களைந்து மக்கள் அனைவரும் இலட்சியமான குடும்பங்களாக வாழ்க்கை நடத்த எல்லா முயற்சிகளையும் நாம் எடுக்க வேண்டும்.  

(கலைமகள் தீபாவளி மலர், அக்.2025)  

 

 

 

  

குடும்ப பொருளாதாரமே நமது தேசத்தின் பலம்

 

பாரத நாடு தொன்மையான வரலாறும் நீண்ட நெடிய பாரம்பரியமும் கொண்டது. பல்லாயிரம் ஆண்டுகளாக நீடித்து நிலைத்து வரக்கூடிய பண்பாட்டை வைத்திருப்பது. அந்தப் பண்பாட்டின் அடித்தளங்கள் தான் பண்டைய காலந்தொட்டு நமது தேசத்தை மனித வாழ்வின் வெவ்வேறு துறைகளிலும் உலகின் முன்னோடியாக விளங்க வைத்த பெருமைக்குரியவை. அதனால் ஆரம்ப காலந்தொட்டே  பொருளாதாரத்தில் உலகின் முதல் நிலையில் இருந்து பெரும் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா விளங்கி வந்துள்ளது.

பாரதப் பண்பாட்டின் அடிப்படைத் தன்மையே குடும்ப அமைப்பு முறையாகும். குடும்பம் என்பது தேசத்தின் சமூகம் மற்றும் கலாசாரத்துக்கு ஆதாரமானதாக இருந்து வருவது  மட்டுமன்றி, பொருளாதாரத்துக்கும் அஸ்திவாரமாக அமைந்துள்ளது. எனவே வலுவான குடும்ப அமைப்பு முறையே ஒரு நாட்டின் சமூக, கலாசார மற்றும் பொருளாதார கட்டமைப்புகளுக்கு அடிப்படையாகும். அதனால் தான் நமது வாழ்க்கை முறையில் குடும்ப அமைப்பு தொன்று தொட்டு வலியுறுத்தப்பட்டு வருகிறது. தாய்மார்கள் குடும்பங்களின் மையப்புள்ளியாக இருந்து செயல்பட்டு வருகின்றனர்.

கடந்த அரை நூற்றாண்டு காலத்துக்கு மேலாக மேற்கத்திய நாடுகள் பலவற்றில் தனிநபர்கள் தாங்கள் விரும்பியதையெல்லாம் எந்தவிதக் கட்டுப்பாடுகளுமின்றி அனுபவிக்க வேண்டும்; ஒவ்வொருவரின் விருப்பு, வெறுப்புகளே குடும்ப நலனை விட முக்கியம் என்கின்ற வக்கிரமான சிந்தனை பெருகியது. அதனால் அங்கு குடும்ப அமைப்பு முறை சிதையத் தொடங்கியது. குடும்பங்கள் சீரழியும் போது உறவுகள் வலுவிழக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழக் கூடிய தன்மை மறையும்.

அதனால் அங்கு இயற்கையாக நிலவி வந்த சமூக கட்டமைப்புகள் வேகமாக உடைந்து வருகின்றன. அவை நடக்கும் போது பொருளாதாரமும் கடும் பாதிப்புகளுக்கு ஆளாகும். உதாரணமாக குடும்ப அமைப்பு முறையில், தாய் – தந்தை மற்றும் பெரியவர்கள் அடுத்த தலைமுறைக்காகச் சேமிக்கும் தன்மை அடிப்படையானதாக இருக்கும். ஆனால் குடும்பங்கள் சிதையும் போது அடுத்தவர்களுக்காகச் சேமிக்கும் தன்மை குறையும். அந்த வகையில் மேற்கு நாடுகள் உள்ளிட்ட பல வளர்ந்த நாடுகளில் கடந்த முப்பதாண்டுகளில் சேமிப்புகள் மிகவும் குறைந்து விட்டன.

தேசிய அளவில் போதுமான சேமிப்புகள் இல்லாமல், குடும்ப அமைப்புகளும் சிதைவடைந்து வருவதால், அங்கு அரசாங்கங்கள் குடும்பங்களைப் பராமரிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன. தொடர்ந்து அதற்காக ஆகும் செலவுகள் அந்த நாடுகளின் பொருளாதார உற்பத்தியில் வருடா வருடம் இருபதிலிருந்து முப்பத்தைந்து விழுக்காட்டுக்கு மேல் ஆகி வருகிறது. எனவே அதற்குப் போதுமான நிதியாதாரம் இல்லாமல், அண்மைக்காலமாக அந்த நாடுகள் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன.

நமது தேசத்தைப் பொறுத்த வரையில் எத்தனையோ சிரமங்கள் மற்றும் சவால்களுக்கு இடையிலும், குடும்ப அமைப்பு முறையானது இன்றும் பெருமளவு நீடித்து வருகிறது. அதனால் குடும்பங்கள் அதிக அளவில் சேமிப்புகளை மேற்கொள்கின்றன. எனவே கடந்த பல ஆண்டுகளாகவே சேமிப்புகள் நாட்டின் பொருளாதார உற்பத்தியில் வருடா வருடம் முப்பது விழுக்காட்டுக்கு மேல் தொடர்ந்து இருந்து வருகின்றன. அந்த சேமிப்புகள் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு நல்ல கல்வி மற்றும் எதிர்காலம் கிடைக்கின்றன. தொழில்கள் பெருகுகின்றன.

இந்தியர்கள் இங்கு மட்டுமல்ல; உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், சேமிப்புகளை இன்னமும் வாழ்க்கை முறையாகக் கொண்டுள்ளனர். அதனால் வெளிநாடுகளில் வாழ்ந்து தொழில் மற்றும் பணிகள் செய்து தாய் நாடுகளுக்குப் பணம் அனுப்புவோர் மத்தியில் இந்தியர்களே தொடர்ந்து பல ஆண்டுகளாக முதல் இடத்தில் உள்ளனர். சென்ற 2024 வருடத்தில் மட்டும் உலகிலேயே அதிக அளவில் 129 பில்லியன் டாலர்களை  நமது நாட்டுக்கு அனுப்பியுள்ளனர். மேலும் அப்படி அனுப்பும் தொகைகள் சென்ற மூன்று வருட காலமாகவே நூறு பில்லியன் டாலர்களுக்கு மேல் இருந்து வருகிறது.

சேமிப்புகள் மட்டுமன்றி, உறவுகளைப் பேணுதல், கலாசாரத்தைப் பாதுகாத்தல், தொழில் முனைதல்  எனப் பலவிதமான வாழ்க்கையின் அடிப்படை அம்சங்களை எடுத்துக் கொண்டாலும் அவற்றில் குடும்பங்களின் பங்கு அடிப்படையாக அமைகிறது. சுமுகமான வாழ்விற்கு அமைதியான சமூகங்கள் அவசியமாகிறது. சமூகங்களில்  நிலவும் இணக்கமான சூழ்நிலையே  பொது அமைதிக்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கும் ஏதுவாக அமைகிறது. ஏனெனில் இணக்கமில்லாத ஊர்களில் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது. இந்திய சமூகங்கள் பாரம்பரியமாக உறவுகளையும், நட்புகளையும் அடிப்படையாகக் கொண்டவை. இங்கு குடும்பங்களின் நீட்சியாகவே சமூகங்கள் அமைந்துள்ளன.

நமது நாடு முழுவதும் பொருளாதார நடவடிக்கைகளின் மையமாக குடும்பங்களே விளங்கி வருகின்றன. குடும்ப உறுப்பினர்கள் எந்தத் துறைகளில் ஈடுபட்டு வந்தாலும் அதிகமான சேமிப்புகள், கவனமான முதலீடுகள், எதிர்காலத்துக்கான திட்டங்கள் எனக் கவனத்துடன் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் எடுக்கின்றன. தற்போதைக்குச் சிரமங்கள் இருந்தாலும் எதிர்காலத்தில் குழந்தைகள் வாழ்க்கை நன்றாக அமையும் வகையில் செயல்பாடுகளை அமைத்துக் கொள்கின்றன. அதனால் நம்பிக்கையுடன் முன்னேற்றத்தை நோக்கிச் செல்கின்றன.     

கடந்த முப்பது வருடங்களாக நாட்டின் பல பகுதிகளிலும் தொழில் மற்றும் வியாபார மையங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் நமது நாட்டுத் தொழில் வளர்ச்சியிலும் பொருளாதாரத்திலும் குடும்ப அமைப்பு முறையே முக்கியப் பங்கினை வகித்து வருவதை எடுத்துச் சொல்கின்றன. குடும்பங்களின் நிதி ஆதாரமும் ஊக்கமுமே புதிய தொழில் முனைவுகளுக்கு காரணமாக அமைகின்றன; அவற்றின் பங்களிப்பின் மூலமே வருடா வருடம் இலட்சக் கணக்கான குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துவங்கப்படுகின்றன. பின்னர் அவையே விரிவடைந்து கார்ப்பரேட் நிறுவனங்களாக உருவெடுக்கின்றன.  இன்று இந்தியப் பொருளாதாரத்துக்கு ஆதாரமாக விளங்கி வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் தொழில் மற்றும் வியாபார மையங்கள் குடும்பங்களாலும், உள்ளூர் சமூகங்களாலும் உருவாக்கப்பட்டு நடத்தப்பட்டு வருபவையே ஆகும். 

உதாரணமாக நமது தேசத்தில் பட்டாசுத் தொழிலில் முதன்மையான இடம் வகித்து வருவது சிவகாசி. அங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் நாடு முழுவதும் சென்று மக்களை மகிழ்ச்சி கொள்ள வைக்கின்றன. அங்கு ஆரம்பத்தில் தீப்பெட்டி தயாரிப்பதில் தொடங்கிய தொழில், பின்னர் பட்டாசு மற்றும் பிரிண்டிங் தொழில்கள் என விரிவடைந்தது.  இப்போது அந்தப்பகுதி பல கோடிக்கணக்கான ரூபாய்கள் வியாபாரத்தையும் பல லட்சக் கணக்கான பேர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் தந்து வருகிறது. வறண்ட பூமியாக இருந்த அந்தப் பகுதியை இன்று நாட்டின் முக்கியமான தொழில் மையமாக உருவாக்கியது யார்? அந்த ஊரைச் சேர்ந்த சாதாரணக் குடும்பங்கள். நூறு வருடங்களுக்கு முன்னால் அங்கிருந்து மிகுந்த சிரமங்களுக்கிடையில் கல்கத்தா சென்று தொழிலைக் கற்றுக் கொண்டு வந்து, பின்னர் அந்தத் தொழிலுக்கு அஸ்திவாரம் போட்ட இரண்டு குடும்பத்தினர்.

அதே போலத்தான் திருப்பூர், கோவை, விருதுநகர் உள்ளிட்ட பல தமிழகத் தொழில் மையங்களும் அந்தப் பகுதிகளில் வாழும் குடும்பங்கள் மற்றும் சமூகங்களால் உருவாக்கப்பட்டு வளர்ந்து வந்துள்ளன. இந்திய நாடு முழுவதுமே அதே போலத் தொழில் மையங்கள் வளர்ச்சி கண்டுள்ளதைக் காண முடியும். சூரத், லூதியானா, ராஜ்கோட், பெல்கவி, கான்பூர் எனப் பல நூற்றுக்கணக்கான தொழில் மையங்களை குடும்பங்களே உருவாக்கி நடத்தி வருகின்றன.

நாட்டிலுள்ள வளர்ச்சியடைந்த மாநிலங்களுக்கு ஆதரமாக விளங்குவது அங்கெல்லாம் திறமையாக செயல்பட்டு வரும் தொழில் மையங்களாகவே உள்ளன. குஜராத், தமிழ் நாடு, மகாராஷ்டிரம், பஞ்சாப் என எங்கு பார்த்தாலும் தொழில் மையங்களில் குடும்பங்களின் தாக்கமே பிரதானமாக உள்ளது. குஜராத்தின் முக்கிய தொழில் மையமான சூரத் நகரில் வருட விற்று முதல் சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாய் அளவு. அங்கு இரண்டு முக்கிய தொழில்கள் உள்ளன. ஒன்று வைரக் கற்கள் வெட்டுதல். இன்னொன்று மொத்த ஜவுளி வியாபாரம்.

அவற்றை நடத்துவது அனைத்தும் குடும்பங்களே. வைரத் தொழிலில் இன்று வெற்றிகரமாகச் செயல்படும் பட்டேல்கள் விவசாயப் பின்னணி கொண்ட சாதாரண மக்கள். விவசாயத்தில் வருமானம் இல்லாதமையால், வயிற்றுப் பிழைப்புக்காக வெவ்வேறு ஊர்களிலுமிருந்து வேலைக்காக வந்து இன்று வியாபாரத்தில் கொடி கட்டிப் பறக்கிறார்கள்.  இன்று சர்வதேச அளவில் உலகின் வைர வியாபர மையமாக பெல்ஜியம் நாட்டிலுள்ள ஆன்ட்வெர்ப் நகரம் இருந்து வருகிறது. சர்வதேச சந்தையில் அறுபது விழுக்காட்டுக்கு மேல் வியாபரம் செய்பவர்கள் பட்டேல்களும், ஜெயின்களும் தான்.

அதனால் தான் சுதந்திரம் பெற்ற போது வளர்ச்சி குறைந்து பின் தங்கிய நிலையில் இருந்த நமது தேசம், வெறும் எழுபத்தெட்டு வருடங்களில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. மேலும் எதிர் காலத்தில் உலகிலேயே அதிக வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள நாடாக அனைவராலும் கணிக்கப்படுகிறது. இந்தக் குடும்பம் சார்ந்த பொருளாதார அமைப்பு முறையே நம்மைக் காலங் காலமாக காப்பாற்றி வருகிறது.  2008 உலகப் பொருளாதார நெருக்கடி, 2020 கொரோனா ஆகியவற்றில் உலக நாடுகள் பெரும் சிரமங்களைச் சந்தித்த போது, கவசம் போல இருந்து நம்மைக் காப்பாற்றியது நமது குடும்ப அமைப்பு முறையே. எனவே இந்திய வாழ்க்கை முறையின் ஆதாரமாக விளங்கி பொருளாதாரத்தைத் தாங்கி நிற்கும் குடும்ப அமைப்பு முறையைக் கட்டிக் காப்பது நமது தலையாய கடமையாகும்.

(விஜயபாரதம் தீபாவளி மலர், அக்.2025 )