குடும்ப பொருளாதாரமே நமது தேசத்தின் பலம்

 

பாரத நாடு தொன்மையான வரலாறும் நீண்ட நெடிய பாரம்பரியமும் கொண்டது. பல்லாயிரம் ஆண்டுகளாக நீடித்து நிலைத்து வரக்கூடிய பண்பாட்டை வைத்திருப்பது. அந்தப் பண்பாட்டின் அடித்தளங்கள் தான் பண்டைய காலந்தொட்டு நமது தேசத்தை மனித வாழ்வின் வெவ்வேறு துறைகளிலும் உலகின் முன்னோடியாக விளங்க வைத்த பெருமைக்குரியவை. அதனால் ஆரம்ப காலந்தொட்டே  பொருளாதாரத்தில் உலகின் முதல் நிலையில் இருந்து பெரும் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா விளங்கி வந்துள்ளது.

பாரதப் பண்பாட்டின் அடிப்படைத் தன்மையே குடும்ப அமைப்பு முறையாகும். குடும்பம் என்பது தேசத்தின் சமூகம் மற்றும் கலாசாரத்துக்கு ஆதாரமானதாக இருந்து வருவது  மட்டுமன்றி, பொருளாதாரத்துக்கும் அஸ்திவாரமாக அமைந்துள்ளது. எனவே வலுவான குடும்ப அமைப்பு முறையே ஒரு நாட்டின் சமூக, கலாசார மற்றும் பொருளாதார கட்டமைப்புகளுக்கு அடிப்படையாகும். அதனால் தான் நமது வாழ்க்கை முறையில் குடும்ப அமைப்பு தொன்று தொட்டு வலியுறுத்தப்பட்டு வருகிறது. தாய்மார்கள் குடும்பங்களின் மையப்புள்ளியாக இருந்து செயல்பட்டு வருகின்றனர்.

கடந்த அரை நூற்றாண்டு காலத்துக்கு மேலாக மேற்கத்திய நாடுகள் பலவற்றில் தனிநபர்கள் தாங்கள் விரும்பியதையெல்லாம் எந்தவிதக் கட்டுப்பாடுகளுமின்றி அனுபவிக்க வேண்டும்; ஒவ்வொருவரின் விருப்பு, வெறுப்புகளே குடும்ப நலனை விட முக்கியம் என்கின்ற வக்கிரமான சிந்தனை பெருகியது. அதனால் அங்கு குடும்ப அமைப்பு முறை சிதையத் தொடங்கியது. குடும்பங்கள் சீரழியும் போது உறவுகள் வலுவிழக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழக் கூடிய தன்மை மறையும்.

அதனால் அங்கு இயற்கையாக நிலவி வந்த சமூக கட்டமைப்புகள் வேகமாக உடைந்து வருகின்றன. அவை நடக்கும் போது பொருளாதாரமும் கடும் பாதிப்புகளுக்கு ஆளாகும். உதாரணமாக குடும்ப அமைப்பு முறையில், தாய் – தந்தை மற்றும் பெரியவர்கள் அடுத்த தலைமுறைக்காகச் சேமிக்கும் தன்மை அடிப்படையானதாக இருக்கும். ஆனால் குடும்பங்கள் சிதையும் போது அடுத்தவர்களுக்காகச் சேமிக்கும் தன்மை குறையும். அந்த வகையில் மேற்கு நாடுகள் உள்ளிட்ட பல வளர்ந்த நாடுகளில் கடந்த முப்பதாண்டுகளில் சேமிப்புகள் மிகவும் குறைந்து விட்டன.

தேசிய அளவில் போதுமான சேமிப்புகள் இல்லாமல், குடும்ப அமைப்புகளும் சிதைவடைந்து வருவதால், அங்கு அரசாங்கங்கள் குடும்பங்களைப் பராமரிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன. தொடர்ந்து அதற்காக ஆகும் செலவுகள் அந்த நாடுகளின் பொருளாதார உற்பத்தியில் வருடா வருடம் இருபதிலிருந்து முப்பத்தைந்து விழுக்காட்டுக்கு மேல் ஆகி வருகிறது. எனவே அதற்குப் போதுமான நிதியாதாரம் இல்லாமல், அண்மைக்காலமாக அந்த நாடுகள் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன.

நமது தேசத்தைப் பொறுத்த வரையில் எத்தனையோ சிரமங்கள் மற்றும் சவால்களுக்கு இடையிலும், குடும்ப அமைப்பு முறையானது இன்றும் பெருமளவு நீடித்து வருகிறது. அதனால் குடும்பங்கள் அதிக அளவில் சேமிப்புகளை மேற்கொள்கின்றன. எனவே கடந்த பல ஆண்டுகளாகவே சேமிப்புகள் நாட்டின் பொருளாதார உற்பத்தியில் வருடா வருடம் முப்பது விழுக்காட்டுக்கு மேல் தொடர்ந்து இருந்து வருகின்றன. அந்த சேமிப்புகள் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு நல்ல கல்வி மற்றும் எதிர்காலம் கிடைக்கின்றன. தொழில்கள் பெருகுகின்றன.

இந்தியர்கள் இங்கு மட்டுமல்ல; உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், சேமிப்புகளை இன்னமும் வாழ்க்கை முறையாகக் கொண்டுள்ளனர். அதனால் வெளிநாடுகளில் வாழ்ந்து தொழில் மற்றும் பணிகள் செய்து தாய் நாடுகளுக்குப் பணம் அனுப்புவோர் மத்தியில் இந்தியர்களே தொடர்ந்து பல ஆண்டுகளாக முதல் இடத்தில் உள்ளனர். சென்ற 2024 வருடத்தில் மட்டும் உலகிலேயே அதிக அளவில் 129 பில்லியன் டாலர்களை  நமது நாட்டுக்கு அனுப்பியுள்ளனர். மேலும் அப்படி அனுப்பும் தொகைகள் சென்ற மூன்று வருட காலமாகவே நூறு பில்லியன் டாலர்களுக்கு மேல் இருந்து வருகிறது.

சேமிப்புகள் மட்டுமன்றி, உறவுகளைப் பேணுதல், கலாசாரத்தைப் பாதுகாத்தல், தொழில் முனைதல்  எனப் பலவிதமான வாழ்க்கையின் அடிப்படை அம்சங்களை எடுத்துக் கொண்டாலும் அவற்றில் குடும்பங்களின் பங்கு அடிப்படையாக அமைகிறது. சுமுகமான வாழ்விற்கு அமைதியான சமூகங்கள் அவசியமாகிறது. சமூகங்களில்  நிலவும் இணக்கமான சூழ்நிலையே  பொது அமைதிக்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கும் ஏதுவாக அமைகிறது. ஏனெனில் இணக்கமில்லாத ஊர்களில் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது. இந்திய சமூகங்கள் பாரம்பரியமாக உறவுகளையும், நட்புகளையும் அடிப்படையாகக் கொண்டவை. இங்கு குடும்பங்களின் நீட்சியாகவே சமூகங்கள் அமைந்துள்ளன.

நமது நாடு முழுவதும் பொருளாதார நடவடிக்கைகளின் மையமாக குடும்பங்களே விளங்கி வருகின்றன. குடும்ப உறுப்பினர்கள் எந்தத் துறைகளில் ஈடுபட்டு வந்தாலும் அதிகமான சேமிப்புகள், கவனமான முதலீடுகள், எதிர்காலத்துக்கான திட்டங்கள் எனக் கவனத்துடன் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் எடுக்கின்றன. தற்போதைக்குச் சிரமங்கள் இருந்தாலும் எதிர்காலத்தில் குழந்தைகள் வாழ்க்கை நன்றாக அமையும் வகையில் செயல்பாடுகளை அமைத்துக் கொள்கின்றன. அதனால் நம்பிக்கையுடன் முன்னேற்றத்தை நோக்கிச் செல்கின்றன.     

கடந்த முப்பது வருடங்களாக நாட்டின் பல பகுதிகளிலும் தொழில் மற்றும் வியாபார மையங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் நமது நாட்டுத் தொழில் வளர்ச்சியிலும் பொருளாதாரத்திலும் குடும்ப அமைப்பு முறையே முக்கியப் பங்கினை வகித்து வருவதை எடுத்துச் சொல்கின்றன. குடும்பங்களின் நிதி ஆதாரமும் ஊக்கமுமே புதிய தொழில் முனைவுகளுக்கு காரணமாக அமைகின்றன; அவற்றின் பங்களிப்பின் மூலமே வருடா வருடம் இலட்சக் கணக்கான குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துவங்கப்படுகின்றன. பின்னர் அவையே விரிவடைந்து கார்ப்பரேட் நிறுவனங்களாக உருவெடுக்கின்றன.  இன்று இந்தியப் பொருளாதாரத்துக்கு ஆதாரமாக விளங்கி வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் தொழில் மற்றும் வியாபார மையங்கள் குடும்பங்களாலும், உள்ளூர் சமூகங்களாலும் உருவாக்கப்பட்டு நடத்தப்பட்டு வருபவையே ஆகும். 

உதாரணமாக நமது தேசத்தில் பட்டாசுத் தொழிலில் முதன்மையான இடம் வகித்து வருவது சிவகாசி. அங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் நாடு முழுவதும் சென்று மக்களை மகிழ்ச்சி கொள்ள வைக்கின்றன. அங்கு ஆரம்பத்தில் தீப்பெட்டி தயாரிப்பதில் தொடங்கிய தொழில், பின்னர் பட்டாசு மற்றும் பிரிண்டிங் தொழில்கள் என விரிவடைந்தது.  இப்போது அந்தப்பகுதி பல கோடிக்கணக்கான ரூபாய்கள் வியாபாரத்தையும் பல லட்சக் கணக்கான பேர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் தந்து வருகிறது. வறண்ட பூமியாக இருந்த அந்தப் பகுதியை இன்று நாட்டின் முக்கியமான தொழில் மையமாக உருவாக்கியது யார்? அந்த ஊரைச் சேர்ந்த சாதாரணக் குடும்பங்கள். நூறு வருடங்களுக்கு முன்னால் அங்கிருந்து மிகுந்த சிரமங்களுக்கிடையில் கல்கத்தா சென்று தொழிலைக் கற்றுக் கொண்டு வந்து, பின்னர் அந்தத் தொழிலுக்கு அஸ்திவாரம் போட்ட இரண்டு குடும்பத்தினர்.

அதே போலத்தான் திருப்பூர், கோவை, விருதுநகர் உள்ளிட்ட பல தமிழகத் தொழில் மையங்களும் அந்தப் பகுதிகளில் வாழும் குடும்பங்கள் மற்றும் சமூகங்களால் உருவாக்கப்பட்டு வளர்ந்து வந்துள்ளன. இந்திய நாடு முழுவதுமே அதே போலத் தொழில் மையங்கள் வளர்ச்சி கண்டுள்ளதைக் காண முடியும். சூரத், லூதியானா, ராஜ்கோட், பெல்கவி, கான்பூர் எனப் பல நூற்றுக்கணக்கான தொழில் மையங்களை குடும்பங்களே உருவாக்கி நடத்தி வருகின்றன.

நாட்டிலுள்ள வளர்ச்சியடைந்த மாநிலங்களுக்கு ஆதரமாக விளங்குவது அங்கெல்லாம் திறமையாக செயல்பட்டு வரும் தொழில் மையங்களாகவே உள்ளன. குஜராத், தமிழ் நாடு, மகாராஷ்டிரம், பஞ்சாப் என எங்கு பார்த்தாலும் தொழில் மையங்களில் குடும்பங்களின் தாக்கமே பிரதானமாக உள்ளது. குஜராத்தின் முக்கிய தொழில் மையமான சூரத் நகரில் வருட விற்று முதல் சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாய் அளவு. அங்கு இரண்டு முக்கிய தொழில்கள் உள்ளன. ஒன்று வைரக் கற்கள் வெட்டுதல். இன்னொன்று மொத்த ஜவுளி வியாபாரம்.

அவற்றை நடத்துவது அனைத்தும் குடும்பங்களே. வைரத் தொழிலில் இன்று வெற்றிகரமாகச் செயல்படும் பட்டேல்கள் விவசாயப் பின்னணி கொண்ட சாதாரண மக்கள். விவசாயத்தில் வருமானம் இல்லாதமையால், வயிற்றுப் பிழைப்புக்காக வெவ்வேறு ஊர்களிலுமிருந்து வேலைக்காக வந்து இன்று வியாபாரத்தில் கொடி கட்டிப் பறக்கிறார்கள்.  இன்று சர்வதேச அளவில் உலகின் வைர வியாபர மையமாக பெல்ஜியம் நாட்டிலுள்ள ஆன்ட்வெர்ப் நகரம் இருந்து வருகிறது. சர்வதேச சந்தையில் அறுபது விழுக்காட்டுக்கு மேல் வியாபரம் செய்பவர்கள் பட்டேல்களும், ஜெயின்களும் தான்.

அதனால் தான் சுதந்திரம் பெற்ற போது வளர்ச்சி குறைந்து பின் தங்கிய நிலையில் இருந்த நமது தேசம், வெறும் எழுபத்தெட்டு வருடங்களில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. மேலும் எதிர் காலத்தில் உலகிலேயே அதிக வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள நாடாக அனைவராலும் கணிக்கப்படுகிறது. இந்தக் குடும்பம் சார்ந்த பொருளாதார அமைப்பு முறையே நம்மைக் காலங் காலமாக காப்பாற்றி வருகிறது.  2008 உலகப் பொருளாதார நெருக்கடி, 2020 கொரோனா ஆகியவற்றில் உலக நாடுகள் பெரும் சிரமங்களைச் சந்தித்த போது, கவசம் போல இருந்து நம்மைக் காப்பாற்றியது நமது குடும்ப அமைப்பு முறையே. எனவே இந்திய வாழ்க்கை முறையின் ஆதாரமாக விளங்கி பொருளாதாரத்தைத் தாங்கி நிற்கும் குடும்ப அமைப்பு முறையைக் கட்டிக் காப்பது நமது தலையாய கடமையாகும்.

(விஜயபாரதம் தீபாவளி மலர், அக்.2025 )

 

தேசத்துக்காகக் குரல் கொடுத்த தமிழ் படைப்பாளிகள் சங்கமம்

 


தமிழகத்தில் படைப்பாளிகள் கூட்டம் என்று சொன்னாலே அது வழக்கமாக  ‘முற்போக்கு’ அல்லது ‘ திராவிட’ என்னும் அடைமொழிகளுக்குக்குள்ளே வரக்கூடிய இடதுசாரி- திராவிடவாத கருத்துக்களைக் கொண்டவார்களின் சந்திப்பு என  இருந்து வரும் சூழ்நிலை இங்கு கடந்த பல வருடங்களாகவே நிலவி வருகிறது. அவர்கள் பொதுவாகவே இந்து விரோத மனப்பான்மை மற்றும் பாஜக - மோடி அரசு எதிர்ப்பு ஆகிய கருத்துக்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் மத்திய அரசு எடுக்கும் எல்லா நடவடிக்கைகளையும் எதிர்ப்பது என்பதும் அவர்களின் பொதுவான கொள்கையாக உள்ளது. அவர்களில் சிலருக்கு இடதுசாரி தீவிரவாதம் மற்றும் மத தீவிரவாதப் போக்குக்கள் குறித்த மேம்போக்கான அணுகுமுறையும் உள்ளது.

சென்ற ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரிலுள்ள பெஹல்காமில் 26 அப்பாவி பயணிகளை பாகிஸ்தான் ஊக்குவித்த  இஸ்லாமிய தீவிரவாதிகள் கொடூரமாக கொன்றது நாட்டையே உலுக்கியது. அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய அரசு உடனடியாகப் பல நடவடிக்கைகளை எடுத்தது. மே ஏழாம் தேதி  அதிகாலை பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வரும் முக்கிய தீவிரவாத முகாம்களை நமது படைகள் துல்லியமாகத் தாக்கி அழித்தன. பின்னர் அவர்களின் விமான தளங்கள் பல தகர்க்கப்பட்டன. பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல், அவர்களின் முகாம்களையும், ராணுவ தளங்களையும் மட்டுமே வெற்றிகரமாகத் தாக்கியது  இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு என உலகின் பலநாடுகளும் பாராட்டுகின்றன.

இந்தப் பின்னணியில் தமிழகத்தைச் சேர்ந்த சில எழுத்தாளர்கள், இயக்குநர்கள் ஆகியோர் சென்ற மே 9 ஆம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் பாகிஸ்தானுடன் சமரசம் செய்ய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், ‘ஆபரேசன் சிந்தூர்’ என்னும் பெயரிலுள்ள சிந்தூர் (திருமணமான மகளிர் வைத்துக் கொள்ளும் செந்தூரப் பொட்டு)  ஒரு குறிப்பிட்ட மதம் மற்றும் ஒரு பால் சார்ந்ததாக உள்ளது ஆகிய காரணங்களைச் சொல்லி இனியொரு போர் என்பது கூடாது எனக் கூறியுள்ளனர்.  

மனிதர்களிடையே போர் கூடாது என்பது தான் இந்தியர்கள் அனைவரின் நோக்கமாகவும் உள்ளது. அதே சமயம் பாகிஸ்தான் தீவிரவாதம் மூலமாக சுதந்திரத்துக்கப்புறம் தொடர்ந்து பல ஆண்டுகளாகவே நமது நாட்டில் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்தி வந்து  கொண்டுள்ளது. சமாதானத்துக்காகப் பல முயற்சிகளைத் தொடர்ந்து இந்திய அரசு மேற்கொண்டு வந்துள்ளது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவற்றுக்குப் பின்னரும், பாகிஸ்தான் தீவிரவாத நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. எனவே தீவிரவாத முகாம்களையும், அவர்களின் கட்டமைப்புகளையும் தாக்குவது என்பது ஒரு பொறுப்புள்ள அரசின் கடமையாகிறது. அந்த வகையில் பல எச்சரிக்கைகளுக்குப் பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே மீண்டும் பேச்சு வார்த்தை என்பது அர்த்தமில்லாத வாதமாகும்.

மேலும் ’சிந்தூர்’ என்பதற்கு இந்து மதச் சாயம் பூசுவது என்பது தேசத்துக்காக அனைவரும் ஒன்று பட்டு நிற்கும் இந்தச் சூழலில் நமது மக்களை மத ரீதியாகப் பிளவு படுத்தும் நோக்கமாகத் தெரிகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திருமணமான பெண்கள் செந்தூரம் வைத்துக் கொள்வது நமது தேசத்தின் கலாசாரம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் பாரம்பரியம். இதில் மதத்தைத் தேடிக் கண்டுபிடித்துப் பார்ப்பது தான் இந்த படைப்பாளிகளின் குதர்க்க புத்தி.

அது மட்டுமன்றி, செந்தூர் என்பது பெண்பாலை மட்டுமே குறிப்பதாகவும் அந்த அறிக்கை சொல்கிறது. இது என்ன முட்டாள்தானம் ? நாம் நமது தேசத்தைத் தொன்று தொட்டு தாயாக வணங்கி வருகிறோம். நமது பண்பாடு தேசம் மட்டுமின்றி, கடல்கள், மலைகள், நதிகள் என இயற்கையின் அரிய படைப்புகள் அனைத்தையும் தேவியின் வடிவாகவே வழிபட்டு வருகின்றது. நமது தேசத்தில் பெண்மை என்றாலே உயர்வானது; தெய்வீகமானது என்பது நமது வாழ்க்கை முறை. அதனால்தான் மேற்கத்தியவர்கள் தங்கள் நாட்டினைத் தந்தையர் நாடு என்னும் போது, நாம் நமது தேசத்தை தாய்நாடு என அழைக்கிறோம்.

பெஹல்காம் தீவிரவாதிகள் பெண்களின் செந்தூரத்தை அழிக்கும் நோக்கத்துடன் ஆண்களை மட்டுமே கொன்றார்கள்.  எனவே தீவிரவாத்தை அழிக்கும் அந்த நடவடிக்கைக்கு இராணுவ அதிகாரிகள் ’செந்தூர்’ எனப் பெயர் வைத்துள்ளனர். இதை விட வேறு எந்தப் பெயர் பொருத்தமானதாக இருக்க முடியும்?  எனவே இவர்கள் எல்லாம் என்ன விதமான படைப்பாளிகள்? இவர்களின் உள்நோக்கம் மக்களைத் திசை திருப்புவதாகவே தெரிகிறது.

ஆகையால் அவர்களின் கருத்துக்கள் தமிழக மக்களின் மொத்த கருத்தல்ல. அவை ஒரு குறிப்பிட்ட கருத்துக்களை மையமாகக் கொண்ட ஒரு சிறு குழுவின் கருத்து மட்டுமே. ஏனெனில் ஒட்டு மொத்த தமிழகமும் படைவீரர்களின் பின்னர் நின்றது. அதற்காக தமிழக முதல்வர் தலைமையில் சென்னையில் ஒரு பேரணி  நடைபெற்றது. தேசப் பாதுகாப்பு சம்பந்தமான விசயத்தில் எந்தவிதமான வேறுபாடுகளும் நம்மிடையே இல்லை; நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வே அனைத்து தமிழர்களிடமும் உள்ளது.

அதனை வெளிப்படுத்தி படைவீர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த தேசிய சிந்தனை கொண்ட படைப்பாளிகள் 49 பேர் மே 25 ஆம் தேதியன்று கோவையில் ஒன்று கூடினர். நிகழ்ச்சிக்கு ஆதரவு கொடுத்த 16 பேர் அன்று நேரில் வர இயலவில்லை. அவர்களில் எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், கட்டுரையாளர்கள், ஓவியர்கள் எனப் பலவிதமான படைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இருந்தனர்.

தேசபக்திப் பாடல்களுடன் தொடங்கிய நிகழ்ச்சிகளின் ஆரம்பத்தில் பெஹல்காமில் உயிர் நீத்த அப்பாவி மக்கள், பின்னர் நடைபெற்ற பாகிஸ்தான் தாக்குதல்களில் உயிரிழந்த எல்லைப் பகுதி மக்கள் மற்றும் வீர மரணமடைந்த போர் வீரர்கள் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன் பின்னர் ’ஆபரேசன் சிந்தூர்’ பற்றியும் நமது படைவீரர்களுக்கு நன்றி தெரிவித்தும் கவியரங்கம் மற்றும் கருத்தரங்கம் ஆகியவை சிறப்பாக நடைபெற்றன. அதில் கல்வியாளர் டாக்டர் பாலகுருசாமி, கவிஞர்கள் சிதம்பரநாதன், மரபின் மைந்தன் முத்தையா, சிவதாசன், முத்து பாரதி, புலவர் ரவீந்திரன், அயகோகா சுப்பிரமணியன், பேராசிரியர் கனகசபாபதி, சேக்கிழான், அர்ஜூன் சம்பத், ஈரோடு அரங்க. சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் நமது தேசத்தைக் காக்க அசாத்தியமாகச் செயல்பட்ட பாதுகாப்புத் துறை, படை வீரர்கள் மற்றும் முப்படைகளின் நடவடிக்கைகளைத் திறம்பட வழி நடத்திய பிரதமர் மோடி தலைமயிலான மத்திய அரசு உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து வந்திருந்த அனைவரின் கையெழுத்துகளுடன் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதன்முறையாக தமிழகத்தில் தேசியத்துக்காகக் குரல் கொடுக்க கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சுமார் ஐம்பது படைப்பாளிகள் ஒன்றிணைந்து அறிக்கை வெளி விட்டிருப்பது  மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று.

( துக்ளக், சென்னை, ஜூன் 2025)