தொழிலதிபர் மகாலிங்கம் ஒரு சுதேசி சிந்தனையாளர்


தமிழகத்தின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரும் காந்தியவாதியுமான திரு. மகாலிங்கம் ஐயா அவர்கள் கடந்த அக்டோபர் 2 ஆம் நாளன்று தனது 92 ஆவது வயதில் காலமானார்.  பல துறைகளின் மேம்பாட்டுக்குத் தனது சிறப்பான பங்கினை ஆற்றியுள்ள அவர், ஒரு தேசியவாதி மற்றும்  சுதேசி சிந்தனையாளர்.

சுதந்திர இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் தமிழகத்துக்கு   என ஒரு தனியான இடமுள்ளது. தமிழகத்தின் தொழில் முன்னேற்றத்தில் மாநிலத்தின் மேற்குப் பகுதியாக உள்ள   கொங்கு நாடு முக்கிய பங்கு வகிக்கின்றது. அங்கு தொழில் வளர்ச்சி பெருகுவதற்குக் காரணமாக இருந்த சில குடும்பங்களில் மகாலிங்கம் ஐயாவுடையதும் ஒன்று.

அவரது தந்தையார் நாச்சிமுத்துக் கவுண்டர் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.  தனது  சொந்த உழைப்பின் மூலம் உயர்ந்தவர். அவர் உருவாக்கிய ஏ.பி.டி (ஆனைமலைஸ் டிரான்ஸ்போர்ட்) நிறுவனம் 1946ம் வருடத்திலேயே நூறு பேருந்துகளைக் கொண்டதாக  இருந்தது. தனது தந்தையின் மறைவுக்குப் பின்னர், முழுப் பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டு புதிய தொழில்களில்  கால் பதித்தார். அதன் மூலம் சக்தி குழுமம் தமிழ் நாட்டின் ஒரு முக்கியமான தொழில் குழுமமாக உருவாகியது. 

செய்யும் தொழில்களில் தனக்கென உறுதியான  கொள்கைகளை வைத்திருந்தார். பெரிய சர்க்கரை ஆலை வைத்திருந்த போதும், அது சம்பந்தப்பட்ட எரி சாராயத் தொழிலுக்கு அவர் செல்லவேயில்லை. அதில் பெரிய இலாபமிருந்தும்,  கடைசி வரை தவிர்த்து  விட்டார். மாநிலத்திலுள்ள தொழில் துறையினர் பலருக்கும் நிறைய  விதங்களில்   ஒரு முன் மாதிரியாக விளங்கினார்.

அவர் தொழிலதிபர் என்று பரவலாக அறியப்பட்டாலும்,  பல்வேறு துறைகளில் மிகுந்த ஈடுபாடும் நெருக்கமான தொடர்பும் கொண்டவர்.   கல்வி, ஆன்மிகம், இலக்கியம், வேளாண்மை, அரசியல், விளையாட்டு, பொதுப்பணிகள் என வெவ்வேறு துறைக்கும் தனது பங்கினை அளித்தவர்.

ஆரம்ப முதலே அவரது வாழ்க்கை செயல்பாடுகள் நிறைந்ததாகவே இருந்து வந்துள்ளது. 1952ல் தனது இருபத்தொன்பதாவது வயதில் பொள்ளாச்சி சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967ல் காங்கிரஸ் ஆட்சி மாறும் வரை  தொடர்ந்து பதினைந்து வருடங்கள் அந்தப் பொறுப்பில் இருந்துள்ளார். அதன் பின்னர்  அவர் நேரடி அரசியலில் ஈடுபடவில்லை.

மாறி விட்ட தமிழக அரசியல் களம் அவருக்குப் பொருத்தமானதாகப் படவில்லை. பின்னர் அவரைத்  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குத் தலைவராக்கச் சில முக்கிய தலைவர்கள் விரும்பினார்கள். ஆனால் அதற்கு அவர் ஒப்புதல் அளிக்கவில்லை.

கிராம முன்னேற்றம் மற்றும் விவசாயத் துறை குறித்து நிறைய சிந்தித்து தனக்கென வித்தியாசமான  கருத்துகளை வைத்திருந்தார். சில வருடங்களுக்கு முன்னர் ஒரு சமயம் பேசிக் கொண்டிருக்கும் போது, ”மேற்குத் தமிழ் நாட்டைச் சேர்ந்த  விவசாயிகள் அதிக அளவில் ஓரிசா போன்ற மாநிலங்களுக்கு செல்ல வேண்டும்” எனக் கூறினார். அதற்கு ”என்ன காரணம்?” எனக் கேட்ட போது, ”இங்குள்ள  விவசாயிகள்  கடுமையான உழைப்பாளிகள்; ஆனால் விவசாயம் செய்வதற்குப் போதிய தண்ணீர் வசதிகள் இங்கில்லை; ஆனால் அங்கெல்லாம் தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் எளிதாகக் கிடைக்கின்றன; எனவே இங்கிருந்து விவசாயிகள் அங்கு செல்வது அவர்களுக்கு மட்டுமன்றி, நாட்டுக்கும் நல்லது” எனப் பதிலளித்தார்.

கல்வித் துறையில் முன்னோடியான சில முயற்சிகளை மேற்கொண்டார். தொழில் கல்வியிலும் தாய் மொழிக் கல்வியிலும் தனி ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளிப் பருவம் முதல் மாணவர்கள் தொழில் கல்வி பயில்வது அவசியம் எனக் கருதினார். அதற்காக பொள்ளாச்சியில்  அவர் ஆரம்பித்த பழனிக் கவுண்டர் பள்ளியில் தொழில் கல்வியோடு சேர்ந்த கல்வி முறையை நடைமுறைப் படுத்தினார்.

 ஆரம்ப முதலே ஆன்மிகத்தில் முழுமையான ஈடுபாடு கொண்டிருந்தார். பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் தொடங்கி, சென்னை கபாலீஸ்வரர் கோவில் வரையில் நூற்றுக்கு மேற்பட்ட கோவில்களின் திருப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.  மேலும் நமது தேசத்தின் புனித நகரமான வாரணாசியில், தென்னிந்தியப் பாணியில் கோவில் கட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்தார்.  தொடர்ந்த அவரது ஆன்மிகப் பணிகள் மற்றும் செயல்பாடுகள் காரணமாக ‘ அருட் செல்வர்’ எனப் பலராலும் அழைக்கப்பட்டார்.

புத்தகங்களின் மேல் அவருக்கு எப்போதுமே அலாதியான ஆர்வம் உண்டு. அவரைச் சந்திக்கும் பல சமயங்களில் ஒவ்வொருவருக்கும் புத்தகங்களைப் பரிசாகக் கொடுத்து அனுப்புவார்.  மேலும் எழுத்தாளர்களை நன்கு ஊக்கப்படுத்துவார். ஒவ்வொரு முறையும் என்னுடைய புத்தகங்களின் பிரதியை அவருக்குக் கொடுத்துப் பேசி விட்டு வந்த சில மணி நேரங்களிலேயே,  குறிப்பிட்ட அளவு பிரதிகளைப் புத்தகக் கடையில் இருந்து வாங்கி விடுவார். பின்னர் அவற்றை மற்றவர்களுக்குக் கொடுப்பார். 

தனது வாழ்நாளில் நூற்றுக்கணக்கான புத்தகங்களை அவர் வெளியிட்டுள்ளார்.  திருக்குறளை ஆங்கிலம், இந்தி, ஒரியா, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட்டார். திருமந்திரத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பத்து பாகங்களாக வெளியிட்டார்.  மகாத்மா காந்தி பற்றிய ஆங்கிலப் புத்தகத்தைத் தனது செலவில் மறுபதிப்புச் செய்தார்.  மேலும் ஆன்மிக நூல்கள் குறைந்த விலையில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் உதவிகளைச் செய்து வந்தார்.

தனது கருத்துக்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடர்ந்து பல வருடங்களாகக்  கட்டுரைகளாகவும் புத்தகங்களாகவும் வெளியிட்டு வந்தார். அவற்றின் மூலம் அவரது சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார்.   தமிழில் ‘ஓம் சக்தி’ மாத இதழ், ஆங்கிலத்தில்  ’கிசான் வொர்ல்டு’  என்னும் வேளாண்மை மாத இதழ் ஆகியவற்றைத் தொடங்கிப் பல ஆண்டுகளாக நடத்தி வந்தார். அவற்றில் அவர் கூறியுள்ள பல கருத்துக்கள் மிகவும் தனித்தன்மை வாய்ந்தவை.

தமிழத்தின் பல்வேறு  துறைகளைச்  சார்ந்த மக்களிடமும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.  அதனால் பட்டி தொட்டிகள் முதல் சென்னை வரை மாநிலம் முழுதும் பல்லாயிரக் கணக்கான பேர்களுக்கு  நேரடியாக அறிமுகமானவராக இருந்தார். அவ்விதத் தொடர்புகள் உலக அளவிலும் அவருக்கு இருந்தன.

அவரது நட்பு வட்டம் சாதாரண மனிதர்கள் முதல் நாட்டின் செல்வாக்குள்ளவர்கள் வரை இருந்தது. அவரே பெரிய தொழிலதிபராக விளங்கிய போதும், சாதாரண மக்கள், கிராமத்து விவசாயிகள், பழைய கால நண்பர்கள்  மற்றும் அவரது நிறுவன ஊழியர்கள் எனப் பல வகையானவர்களிடமும் தொடர்பு வைத்திருந்தார். அவரைப் போல மிக அதிக அளவில் மக்களை நேரடியாக அறிந்த ஒரு தொழிலதிபரைப் பார்ப்பது அரிது.

தேவையான சமயத்தில் பிறருக்கு உதவுவதைக் கடைசி வரைக்கும் தன்னுடைய கடமையாகவே கொண்டிருந்தார். அந்த உதவிகளை எந்த வித வித்தியாசமும் பார்க்காமல் பலருக்கும் செய்து வந்தார். அதுவும் பல சமயங்களில்   சம்பந்தப்பட்டவர்கள் கேட்காமலேயே செய்வார்.

காந்திய வாதிகள், வயதில் மூத்தவர்கள், ஓய்வு பெற்றவர்கள் எனப் பலதரப்பட்டவர்களின் பணிகளைப் பயன்படுத்தி அவர்களின் வாழ்வுக்கு ஒரு நிறைவை அளித்து வந்தார்.  பல சமயங்களில் அவரது அறைக்கு  முன்னால் அவரைப் பார்ப்பதற்கு  பெரியவர்கள் கூட்டம் இருந்து கொண்டேயிருக்கும்.

அவரைச் சந்தித்து  ஒவ்வொரு முறை விரிவாகப் பேசும் போதும், அவர் ஒரு அறிவுப் பெட்டகமாகவே தோன்றியிருக்கிறார். அரசியல், வேளாண்மை, தொழில், கல்வி, ஆன்மிகம் எனப் பல துறைகளிலும் அவருக்கு அதிக அளவில்  வரலாற்று அறிவு மற்றும் அனுபவம் ஆகியவை இருந்தது. சம கால அரசியலைப் பற்றிக் கேட்டால் சுதந்திரம் பெற்ற காலத்தில் தொடங்கி, விசயங்களைப் பிறழாமல் சொல்லும் ஞாபக சக்தி நம்மை வியக்க வைக்கும்.

அவரது இன்னுமொரு உயர்ந்த குணம் என்னவெனில்  கடைசி வரைக்கும் அவர் மற்றவர்களிலிருந்து கற்றுக் கொள்ள விரும்பினார். அதைப் பல சமயங்களில் நான் நேரடியாக உணர்ந்திருக்கிறேன். பேசிக் கொண்டிருக்கும் போது  எங்களின் முக்கியமான ஆய்வுகள் குறித்து ஆர்வமாகக் கேட்பார். இது சம்பந்தமாக எனக்குக் கடைசியாகக்  கூட ஒரு அனுபவம் ஏற்பட்டது.

சென்ற வருடத்தின் இறுதியில் என்னை அழைத்தார். அந்த சமயத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு புதிய யோசனையைத் தெரிவித்தார். மாதா மாதம் கோவை புரந்திர தாசர் வளாகத்தில் பொருளாதாரம் குறித்து அதில் ஆர்வம் கொண்டவர்களுக்காக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யலாமா என்றும், அதில் கலந்து கொண்டு என்னால் பேச முடியுமா எனவும் கேட்டார். எனக்கும் அது நல்ல கருத்தாகவே  பட்டது. ஆனால் அதைச் செயல்படுத்துவது பற்றி மேலும் யோசித்து இறுதி முடிவு செய்யலாம் எனத் திட்டமிட்டோம்.  

அது சம்பந்தமாக இந்த வருடத்தின் ஆரம்பத்தில்   மீண்டும் அவரே அழைத்துப் பேசினார். அப்போது பொருளாதாரக் கோட்பாடுகள்   மற்றும் உலக நடை முறைகள் பற்றித் தொடர்ந்து பேசும் போது, அது  கேட்பவர்களுக்குப் பெரும்பாலும் சலிப்பைக் கொடுத்து விடலாம் என்றும், எனவே   நடை முறையில் நிலவும் இந்திய முறைகள் குறித்து எங்களின் ஆய்வுகளின் அடிப்படையில் சமூக மற்றும் கலாசாரத் தன்மைகளோடு இணைத்துச் சொன்னால் அதை ஆர்வத்துடன் கேட்க வாய்ப்பு அதிகம் என்றும் எனது கருத்தைத் தெரிவித்தேன்.

அவர் உடனே தானும் அதைத் தான் விரும்புவதாகவும், காந்திய மற்றும் இந்திய சிந்தனைகளின் தாக்கம் பற்றி அனைவரும் அறிந்து கொள்வது அவசியம் எனவும் கூறினார். எனவே கலந்துரையாடலைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் முதல் கூட்டத்துக்கான தேதியை முடிவு செய்யும் சமயத்தில் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அதன் பின்னர் அந்த நிகழ்ச்சியைத் தொடங்கவே முடியவில்லை. 

தமிழ் நாட்டில் முதல் முறையாக 2001 ஆம் வருட ஆரம்பத்தில் கோவையில் சுதேசி தொழிற்காட்சி நடைபெற்றது. அதன் வரவேற்புக் குழுவுக்கு மகாலிங்கம் ஐயாவும், ஜி.கே. சுந்தரம் ஐயாவும் தலைவர்களாக இருந்தார்கள்.  அவர்கள் இருவரும் கோவை பகுதியின் மூத்த தொழிலதிபர்கள் மட்டுமல்லாமல், மிகுந்த மரியாதைக்குரியவர்களாகவும் விளங்கி வந்தவர்கள். அப்போது தொடங்கி  மகாலிங்கம் ஐயாவுடன்  கருத்துகளை நெருக்கமாகப் பகிர்ந்து கொள்ள எனக்கு வாய்ப்புக்கள்  அதிகரித்தன.   

பொருளாதாரம் குறித்த அவரது சிந்தனைகள் காந்தியம் மற்றும் சுதேசிக் கருத்துகளை மையமாக வைத்தே இருந்தது. அவர் மேற்கத்திய உலக மயமாக்கலை கடுமையாக விமர்சித்தார். அமெரிக்கப் பொருளாதார கொள்கைகளில் அவருக்கு நம்பிக்கையில்லை. சீனப் பொருளாதார முறைகளில் ஜனநாயகம் இல்லை எனச் சொல்லுவார்.

இரண்டு வருடங்களுக்கு முன் சென்னையில் அவர் வருடா வருடம் நடத்தும் காந்தி- வள்ளலார் விழாவில் பொருளாதாரம் குறித்து ஒரு அமர்வினை ஏற்பாடு செய்திருந்தார். அதன் தலைப்பினையே பொருளாதார வன்முறைகள் என்னும்படி அளித்திருந்தார்.  அதில் மாநில கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு மாதப் பத்திரிக்கை ஆசிரியரை பொருளாதாரம் குறித்த இடதுசாரிப் பார்வையை அளிக்க அழைத்திருந்தார். அது பற்றிய தேசிய சுதேசிப் பார்வையைக் கொடுக்க  என்னை அழைத்திருந்தார்.

அவருக்கு அன்று உடல் நிலை சரியில்லை. எனவே அந்த அமர்வுக்கு வர முடியவில்லை. ஆனால் அதற்கப்புறம் அந்த அமர்வின் நிகழ்வுகளை அவர் ஒலி நாடாவில் கேட்டிருக்கிறார். பின்னர் ஓரிரு மாதங்கள் கழித்து அந்த அமர்வில் பேசப்பட்ட கருத்துகள் பற்றி அவரது எண்ணங்களைத் தெரிவித்தார்.  

அவரைப் பற்றி நிறைய விசயங்களைச் சொல்லிக் கொண்டே போக முடியும். இந்தியப் பாரம்பரியம்  குறித்த அவரது ஆய்வுகள், கூட்டுறவுத் துறையில் அவரது பங்களிப்பு, சதுரங்க விளையாட்டுக்கு அவர் அளித்த ஆதரவு என முற்றிலும் வேறுபட்ட கோணங்கலில் தனது முயற்சிகளைச் செலுத்தியிருக்கிறார்.

வள்ளலார் கொள்கைகளிலும் மகாத்மா காந்தியின் சிந்தனைகளிலும் மிகுந்த பற்று கொண்டிருந்தார்.  அவர்களின் பெயரில் சென்னையில் தொடர்ந்து நாற்பத்தொன்பது ஆண்டுகளாக விழா எடுத்து வந்தார். அப்போது பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிந்தனையாளர்களை அழைத்து உரையாற்ற வைப்பார். ஒவ்வொருவரின் பேச்சுகளையும் உட்கார்ந்து கேட்பார். அவ்வாறு இந்த வருடமும் விழா நடந்து வரும் போது தான்,   அவரது நாயகனான காந்தியின் பிறந்த நாளில் விழா மேடைக்குக் கீழேயே அவரது உயிர் பிரிந்தது.

பன்முகத் தன்மை கொண்ட அவரது வாழ்க்கை நம்மை பிரமிக்க வைக்கிறது. பொள்ளாச்சியைச் சொந்த ஊராகக் கொண்டிருந்தாலும், கொங்கு நாடு முழுவதும் அவரைத் தலைமகனாகவே கருதி வந்தது.  இங்கு அவரது மறைவு ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையல்ல.

பெரிய வசதிகள் இருந்தும் தனிப்பட்ட வாழ்க்கையில் எளிமையாக வாழ்ந்து வந்தார். சாதாரண கதர் ஆடைகளையே எப்போதும் அணிவார்.  உயர்ந்த மனித நேயத்தின் பல பண்புகளைக் கொண்டிருந்தார்.  தெய்வ பக்தியும், தேச சிந்தனையுமே  கடைசி வரைக்கும் அவரது செயல்பாடுகளுக்கு ஆதாரமாக இருந்து வந்தன. 

( சுதேசி செய்தி, டிச.2014)


No comments: