காஷ்மீர் ஃபைல்ஸ் படம் உணர்த்தும் விசயங்கள்

 

மார்ச் 11 ஆம் தேதி வெளியிடப்பட்டு மக்களின் பேராதரவைப் பெற்று வரும் இயக்குநர் விவேக் அக்னி கோத்ரியின் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் சுதந்திர இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தாக அமைந்துள்ளது. கடந்த முப்பத்திரண்டு வருட காலமாக  மறைக்கப்பட்டு வந்த உண்மைகளை எடுத்து வைத்து, அதன் மூலம் நமது வரலாற்றைச் சரியாகப் புரிந்து கொள்ளத் தூண்டும்  கருவியாக உள்ளது.   

காஷ்மீர் பகுதி தொடர்ந்து பல நூற்றாண்டுகளாகவே கடும் பாதிப்புகளைச் சந்தித்துக் கொண்டு வந்துள்ளது. ஆரம்ப காலங்களில் வெளியிலிருந்து படையெடுத்து வந்த முகலாயர்களால்  தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. பின்னர் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜிகாதி தீவிர வாதிகள் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தனர். அதனால் பூர்விக குடிகளான இந்துக்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி மதம் மாற்றப்பட்டும், உயிர்கள், உடமைகள் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து அங்கிருந்து வெளியேற்றப்பட்டும் வந்திருக்கிறார்கள். அந்த வகையில் 1990 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் தேதி அங்கு நடந்தேறிய கொடுமைகள் ஏழாவது முறையாக மக்கள் அங்கிருந்து துரத்தியடிக்கடிக்கப்பட்ட நிகழ்வாக அமைந்துள்ளது.   

சுதந்திர இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டம் வந்த பின் நமது கண் முன்னால் நடந்த மிகப்பெரிய இனப் படுகொலையாக இது அமைந்துள்ளது. அதற்கான துவக்கம் 1980 களின் பிற்பகுதியிலேயே  ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அப்போது பரூக் அப்துல்லா ஜம்மு- காஷ்மீர் முதலமைச்சராகவும், ராஜிவ் காந்தி இந்தியப் பிரதமாரகவும் இருந்து வந்தனர்.

அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் மற்றும் கொலைகள் பற்றி தெரிந்திருந்தும் அந்த முதல்வர் மத தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இருந்து வந்ததை நிகழ்ச்சிகள் தெளிவாக்குகின்றன.  அவை பற்றிப் பிரதமரிடம் சொல்லப்பட்ட போது முதலமைச்சர் தனது நண்பர் என்பதால் தம்மால் எதுவும் செய்ய முடியாது எனக் கூறியுள்ளார். எனவே அதிகார வர்க்கத்தால் முழுதும் கைவிடப்பட்ட நிலையில்,  காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு ஓடி வருவதைத் தவிர வேறு வழியில்லை.

ஏனெனில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆணைமதம் மாறு; இல்லையெனில் ஓடி விடு;  அப்படியும் இல்லையெனில் சாவைச் சந்தித்துக் கொள்என்பதாகும். அதற்கும் மேலாக உங்களின் பெண்களையும் சொத்துக்களையும் இங்கேயே எங்களிடம் விட்டு விட்டு ஓடிப் போய் விடுங்கள்என ஒலி பெருக்கிகள் எச்சரித்தன.

எனவே இரவோடு இரவாக கிடைத்த வாகங்களில் தொற்றிக் கொண்டு தப்பித்தனர். அப்படி வரும் வழிகளிலும் சொல்ல முடியாத துயரங்களை அவர்கள் சந்திக்க வேண்டியிருந்தது. பின்னர் ஜம்மு, டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களின் பல பகுதிகளில் வசதியில்லாத  கொட்டகைகளிலும், பொது இடங்களிலும் தொடர்ந்து வாழ நேர்ந்தது. இன்னமும் அகதி முகாம்களில் பல பேர் வாழ்ந்து வருகின்றனர்.

அவ்வாறு துரத்தியடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்திலிருந்து ஏழு லட்சம் பேர் வரை இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. எனவே அவர்கள் சொந்த நாட்டிலேயே  அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அவர்களின் சோகமான வாழ்க்கை, இழப்புகள் பற்றி இன்றுவரை பொது வெளியில் பேசப்படவில்லை.

மதச்சார்பின்மை என்ற பெயரில் கட்சிகள் மற்றும் ஊடகங்கள் அமைதி காத்தன.  அறிவு ஜீவிகள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட கருத்துரிமைவாதிகள் பலரும் வாய் திறக்கவில்லை. மேலும் சம்பந்தப்பட்ட கட்சிகள், இயக்கங்கள் மற்றும் இடது சாரி செயல்பாட்டாளர்கள்   அதை மூடி மறைக்கும் வேலைகளைச் செய்து வந்தனர்.

இந்தப் பின்னணியில் தான் சென்ற 2019 ஆண்டு ஆகஸ்டு மாதம்   பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஆகியவற்றை நீக்கியது. ஏனெனில் சட்டப்பிரிவு 370 ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த போது அவரது சட்ட அமைச்சராக இருந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் எதிர்ப்பையும் மீறி தற்காலிகம் என்கின்ற பெயரில் கொண்டு வரப்பட்டது.

பின்னர் அதுவே பல ஆண்டு காலம் நீடித்து, அதனால் தீவிரவாதம் பெருகி பிரிவினை வாதம் ஊக்குவிக்கப்பட்டு, மாநிலத்தின் அமைதியும், வளர்ச்சியும் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. 2019க்கு அப்புறம், சட்டம், ஒழுங்கு மீட்டு வரப்பட்டு, தீவிரவாதம் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டு, நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் ஜனநாயக நாட்டில் தமது சோகங்களை வெளியில் சொல்வதற்கே முப்பது வருடங்களுக்கு மேலாகி உள்ளது என்பது மிகவும் வேதனையளிக்கும் விசயமாகும். அதற்கான சூழ்நிலையே இப்போது தான் வந்துள்ளது.

இந்தப் படத்தைப் பொறுத்த வரையில், அவை உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. அங்கு நடந்த சம்பவங்களில் பலவும் மிகவும் நெஞ்சை உறைய வைப்பவை; மிருகத்தனமானவை; கொடூரமானவை. ஆனால் அவையெல்லாம் அப்படியே திரைப்படத்தில் காட்டப்படவில்லை. மாறாக சில சம்பவங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டு அவை படத்தின் கருத்தை வெளிப்படுத்தும் வகையில் சொல்லப்பட்டுள்ளன.

உதாரணமாக அரிசி வைத்திருக்கும் பீப்பாயில் ஒளிந்திருந்த இளம் பொறியாளர் அதற்குள்ளேயே குண்டுகள் மூலம் கொல்லப்பட்டது, அரசு பள்ளியில் பணியாற்றி வந்த ஒரு பெண்மணி பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு பின் திரும்பும் வழியில் கூட்டு பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டு, மர அறுவை மில்லில் இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்டது, ஒரு பிரபல கவிஞர் மற்றும் அவரது மகன் இருவரும் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் ஆணி அடித்து மரங்களில் தொங்கவிடப்பட்டது, பேருந்துக்காக காத்திருந்த  விமானப் படை வீரர்கள் நான்கு பேர் மக்கள் முன்னிலையில் கொல்லப்பட்டது, இந்தியபாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது இந்தியாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய சிறுவன் சக நண்பர்களால் தாக்கப்பட்டது உள்ளிட்ட அனைத்துமே அங்கு நடந்தேறியவை தான்.

1990 ஆம் வருடம் ஜனவரி மாதம் 1990ல் பால் கிருஷ்ண கஞ்சூ என்ற பொறியாளரைத் தேடி தீவிரவாதிகள் அவரது வீட்டுக்குச் சென்றனர். அவர்  வீட்டின் மேல் தளத்தில் இருந்த அரிசி பீப்பாயில் ஒளிந்து கொண்டார். அவர் இல்லையென்று தீவிரவாதிகள் திரும்பிச் செல்லும் போது பக்கத்து வீட்டினர் காட்டிக் கொடுக்கவே, வீட்டின் மேற்பகுதிக்குச் சென்று அவரைக் குண்டுகளால் தாக்கிக் கொன்றனர்.

அதே போல அரசுப் பள்ளியில் பணியாற்றி வந்த கிரிஜா திக்கூ என்னும் பெண்மணி 1990 ஜூன் மாதம் தொலைபேசி மூலம் ஜம்முவிலிருந்து வரவழைக்கப்படுகிறார். பின்னர் பள்ளியிலிருந்து திரும்பிச் செல்லும் வழியில் காரில் வந்தவர்கள் வாகனத்தை மறித்து கடத்திச் செல்கின்றனர். பிறகு கற்பழிப்பு, கூட்டு பலாத்காரம் என நடந்து, கடைசியில் மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் உடல் பிளக்கப்படுகிறது.

1990 ஏப்ரல் மாதம் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் பிரபலமான கவிஞர் மற்றும் எழுத்தாளர் சர்வானந்த கௌல் ப்ரேமி மற்றும் அவரது மகன் வீட்டிலிருந்து பிடித்துச் செல்லப்பட்டு மிக கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். கண்கள் இரண்டும் தோண்டப்பட்டு, முடிகள் பிடுங்கப்பட்டு, தோலுரிக்கப்பட்டு  கொலை நடக்கிறது.. பின்னர்  உடல்கள் மற்றவர்களுக்கு எச்சரிக்கையளிக்கும் வகையில் பொது வெளியில் கொடூரமாகத் தொங்க விடப்படுகிறது.

அதே போல 2003 ஆம் வருடம் 24 காஷ்மீர் இந்துக்கள் நந்திமார்க் கிராமத்தில் வீடுகளிலிருந்து வெளியில் வரவழைக்கப்பட்டு வரிசையாக நிறுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். அதில் பெண்கள் மற்றும் சிறு வயதினர் அடங்குவர்.

இவையெல்லாம் திரைப்படத்தில் காட்டப்பட்டிருக்கும் உதாரணங்கள் மட்டுமே. 1990 ஆம் வருடத்துக்கு முன்னரும், பின்னரும் இவை போன்ற பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்துள்ளன. 1989 செப்டம்பர் மாதம் ஜம்மு காஷ்மீரின் பாரதிய ஜனதா கட்சி தலைவர் வழக்கறிஞர் திகா லால் தப்பூ ஸ்ரீநகரில் மக்கள் முன்னிலையில் கொல்லப்பட்டார். தொடர்ந்து தீவிரவாதி மக்பூல் பட்டுக்கு மரண தண்டனை தீர்ப்பளித்த உயர்நீதி மன்ற நீதிபதி நீல்கந்த கஞ்ஜூ கொல்லப்பட்டார்.

அங்கு நடந்த கொடுமைகளால் நேரடியாக பாதிக்கப்பட்ட மற்றும் பார்த்தவர்களில் பெரும்பான்மையானோர்  இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் அவர்களின்  அழுகுரல்களுக்கு இன்னமும் நியாயம் கிடைக்கவில்லை. அங்கு நடந்த இனப்படுகொலை ஏதோ மக்களே விரும்பி தமது இருப்பிடங்களை விட்டு வெளியே போனது போல, இதுவரை காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேற்றம் என்றே சொல்லப்பட்டு வந்தது.

படத்தில் காட்டப்படுவது போல பேராசிரியர்கள் மற்றும் இடதுசாரி அறிவு ஜீவிகள் பலர் அங்கே நடந்தது படுகொலை அல்ல என மறுத்து வந்தனர். மேலும் ஒருபடி சென்று ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியை ஒருவர் ஜம்மு- காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கமாக எப்போதுமே இருந்தில்லை எனப் பேசினார். அதனால் பல்கலைக் கழகங்களில் மாணவர்களிடையே பிரிவினைவாத சிந்தனைகள் விதைக்கப்பட்டன.  

மத்தியில் மோடி அரசு பொறுப்பேற்று நடவடிக்கைகளைத் தொடங்கும் வரை, அங்கு குற்றம் இழைத்தவர்கள் மற்றும் கொலையாளிகளுக்கு எதிராக மாநிலத்திலோ அல்லது மத்தியிலோ உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு யாரும் தண்டிக்கப்படவில்லை. அதனால்  குற்றவாளிகள் தைரியமாகக் கதாநாயகர்கள் போல பொது வெளியில் நடமாடி வந்தனர்.

யாசின் மாலிக் என்னும் தீவிரவாதி தான் 1990 ஆம் ஆண்டு இந்திய விமானப் படை வீரர்கள் நான்கு பேரைக் கொன்ற நபர். அம்மாநில முன்னாள் முதல்வர் முப்தி முகமது சயீதின் மகளைக் கடத்தியதாக நம்பப்படுபவர். ஜம்மு- காஷ்மீர் விடுதலை இயக்கத்தின் தலைவராக இருந்தவர். பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு நெருக்கம். காஷ்மீர் இனப்படுகொலையில் முக்கிய பங்கு வகித்தவர்.  அப்பேர்ப்பட்ட நபரை 2006 ஆம் வருடம் பிரதமர் மன்மோகன் சிங் அவரது அதிகார பூர்வமான வீட்டுக்கு விருந்தாளியாக அழைத்து பேச்சு நடத்தினார். 

அதே போல பரூக் அகமது தார் என்னும் தீவிரவாதி இருபது பேருக்கு மேற்பட்ட காஷ்மீர் இந்துக்களைத் தான் கொன்றிருப்பதாக தொலைக் காட்சியில் வெளிப்படையாக அறிவித்த நபர். காஷ்மீர் தெருக்களில் துப்பாக்கியுடன் சென்று இந்துக்களைப் பார்த்தால் சுட்டுக் கொன்றவர். அவர் 42 பேரை சுட்டுக் கொன்றிருப்பதாக காஷ்மீர் இந்து அமைப்பு தெரிவிக்கிறது.

மேற்கண்ட நபர்கள் இருவரும் தற்போது சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதுவரை பல ஆண்டுகளாக சுதந்திரமாக குடும்பம் நடத்தி, தலைவர்களாக வலம் வந்து கொண்டிருந்தார்கள். யாசின் மாலிக் மீது முப்பது வருடங்களுக்கப்புறம் 2020ல் தான் விமானப்படை வீரர்கள் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

காஷ்மீர் இனப்படுகொலை குறித்து நீதி விசாரணை வேண்டி 2017 ஆம் வருடத்தில் உச்சநீதி மன்றத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக மனு கொடுக்கப்பட்ட போது, அது நீதி மன்றத்தால் நிராகரிக்கப்பட்டது வருத்தமான விசயமாகும்.  

இந்த திரைப்படம் நாட்டு மக்களுக்கு முதன் முறையாக காஷ்மீர் கொடுமைகளைத் தெரியப்படுத்தி இருக்கிறது. அதன் மூலம் மத அடிப்படை வாதம் மற்றும் தீவிரவாதத்தின் தாக்கங்கள் மற்றும் பல்லாயிரம் ஆண்டுகளாக  அமைதியாக வாழ்ந்து வந்த பூர்வக் குடி மக்கள் துரத்தியடிக்கப்பட்ட சம்பவங்கள் ஆகியவை வெளி வந்துள்ளன. மேலும் மதச்சார்பின்மை என்ற பெயரில் அரசியல் கட்சிகள், ஊடகங்கள், அறிவு ஜீவிக் குழுக்கள் உள்ளிட்ட பலவும் உண்மைகளை மறைத்து நாட்டில் ஒற்றுமையைச் சிதைக்கும் சக்திகளுக்கு ஆதரவு கொடுத்து வரும் போக்கும் எடுத்து வைக்கப்பட்டுள்ளது.  

இந்திய சமூகம் தனது வரலாற்றில் தொடர்ந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே படையெடுப்பாளர்கள், காலனி ஆதிக்கவாதிகள் மற்றும் மத அடிப்படைவாத சக்திகளால் பெரும் உயிரிழப்புகளையும், பாதிப்புகளையும் எதிர்கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் பாகிஸ்தான் தூண்டுதலில்  இங்கு நிகழ்ந்து வந்த மத அடிப்படைவாத தீவிரவாதச் செயல்பாடுகளின் வெளிப்பாடுதான் காஷ்மீர் இனப் படுகொலையாகும்.

அது போன்ற எந்தவொரு சிறிய நிகழ்வு கூட இனிமேல் நமது மண்ணில் நடைபெறக் கூடாது. தீவிரவாத  நடவடிக்கைகளை மத்திய அரசு மட்டுமன்றி, மாநில அரசுகளும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். நமது நாட்டு மக்கள் அனைவரும் அமைதியாக வாழ்க்கை நடத்தும் வகையில் தீவிரவாத, பிரிவினைவாத மற்றும் அடிப்படைவாத சக்திகளுக்கு ஆதரவு தரும் இயக்கங்கள், கட்சிகள் மற்றும் அமைப்புகளை இனங்கண்டு மக்கள் அவற்றை நிராகரிக்க வேண்டும்.

காஷ்மீர் படுகொலைகளைப் பொறுத்த வரையில் அந்த மக்களுக்கு சீக்கிரமே நியாயம் கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் உடனடியாக சட்த்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் சென்று இழந்த சொத்துக்களை திரும்பப் பெற்று பாதுகாப்புடன் வாழும் சூழ்நிலையை ஏற்படுத்தி தர வேண்டும்.

 

 

 

 

No comments: