மத்திய பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு அவசியம் - பேரா கனகசபாபதி அறிக்கை

 

மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள படிப்புகளுக்கான  நுழைவுத் தேர்வுக்கு  ஆன்லைன் விண்ணப்பம் ஏப்ரல் ஆறாம் தேதி ஆரம்பித்துள்ளது. மேற்படி தேர்வுகள் பிற்போக்குத் தனமானவை என்றும் அவை நமது மாநிலத்துக்குத் தேவை இல்லை என்றும் தமிழக முதல்வர் கூறியுள்ளார். எனவே அவற்றை ரத்து செய்யக் கோரி இந்தியப் பிரதமருக்கு கடிதமும் எழுதியுள்ளார்.

அந்த தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டதே மத்தியில் காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசும், மாநிலத்தில் திமுக அரசும் ஆட்சியில் இருந்த 20210 ஆம் வருடம் தான். மேலும் நாட்டில் முதல் முறையாக அவை ஆரம்பிக்கப்பட்ட போது இந்தியாவில் உள்ள ஏழு மத்திய பல்கலைக் கழகங்களில் நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை நடைபெற்றது. அதில் தமிழகத்தில் திருவாரூரில் அமைந்துள்ள மத்திய பல்கலைக் கழகமும் ஒன்று.

எனவே அப்போது மத்திய அரசில் அதைக் கொண்டு வர ஆதரவும், தமிழகத்தில் அதை நடத்த அனுமதியும் அளித்து விட்டு, இப்போது எதிர்ப்பது எப்படி நியாயமாகும்? கடந்த பன்னிரண்டு வருட காலமாக தமிழக மத்திய பல்கலைக் கழகத்தில் நடந்து வரும் தேர்வுக்குக் காரணமாக இருந்து விட்டு இப்போது எதிர்ப்பது முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவே தெரிகிறது. அப்படியானால் இதுவரை நடந்த தேர்வுகள் அனைத்தும் தவறாகுமா?

மேற்படி தேர்வினை நாட்டின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் திமுக மட்டும் ஏன் எதிர்க்க வேண்டும்.? கல்வித் துறையில் திராவிட மாடல் மூலமாக தமிழகம் சிறந்து விளங்குவதாக திமுக கூறுகிறது. அப்படியானால் ஏன் அதைக் கண்டு பயப்பட வேண்டும். அகில இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் நடைபெறும் பெரும்பாலான சேர்க்கைகள் நுழைவுத் தேர்வு மூலமே நடந்து வருகின்றன.

பல்கலைக் கழக மானியக் குழு இந்திய அளவிலான போட்டித் தேர்வு மூலமே 1986 முதல் உதவித் தொகை பெறுவதற்கு ஆராய்ச்சியாளர்களைத் தேர்ந்தெடுத்து ஐந்து வருடங்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது. அதை  வேண்டாம் என்று நிராகரிக்க முடியுமா? இப்போதும் இந்திய தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு நாடு முழுவதும் இணை நுழைவுத் தேர்வு மூலமே சேர்க்கைகள் நடை பெற்று வருகின்றன.

எனவே நமது பள்ளிக் கல்வித் தரத்தை உயர்த்தவும், மாணவர்கள் வெளியில் பயிற்சி பெற வேண்டிய தேவை இல்லாத அளவுக்கு அவர்களை எல்லா வகைத் தேர்வுகளுக்கும் தயார் செய்ய வேண்டியதும் நமது அடிப்படைக் கடமையாகும். அதை விடுத்து தேர்வு வேண்டாம் என்று சொல்வது நமது மாணவர்களின் வாய்ப்புகளைத் தடுப்பதாகும்.

நீட் தேர்வின் மூலமாகவே கடந்த சில வருடங்களாக மிகவும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த சாதாரண குடும்ப குழந்தைகள் அதிக அளவில் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்து வருவது அனைவருக்கும் தெரியும்.  கடந்த நாற்பத்தைந்து வருடங்களாக ஏன் அதிக அளவிலான ஏழை மாணவர்கள் இந்தப் படிப்புகளில் சேர முடியவில்லை?

மேலும் இந்த வருடம் நாடு முழுவதுமுள்ள எய்ம்ஸ் நிறுவனங்களில் மட்டும் முன்னெப்போதும் இல்லாத வகையில் நாற்பது பேர் சேர்ந்துள்ளனர். பாண்டிச்சேரி ஜிப்மெர் நிறுவனத்தில் 26 தமிழக மாணவர்கள் சேர்ந்து சாதனை படைத்துள்ளனர்.

தமிழக மாணவர்கள் திறமை படைத்தவர்கள். மேலும் மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் வெளிப்படையான முறையில் தமிழ் உள்ளிட்ட பதின்மூன்று இந்திய மொழிகளில் நடக்கின்றன. எனவே தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர்கள் மனங்களில் தேவையற்ற சந்தேகத்தை உருவாக்குவதை தவிர்க்க வேண்டும். 

( தினமலர், ஏப் 8, 2022 )

No comments: