தமிழ் மொழியை வைத்து அரசியல் வேண்டாம் - பேரா கனகசபாபதி அறிக்கை

 

அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா மொழி பற்றிப் பேசியது தமிழகத்தில் மீண்டும் அரசியலாக்கப்பட்டு விட்டது. அவர் ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகள்  பயன்படுத்தப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதில் என்ன தவறு இருக்கிறது? இந்தி திணிப்பு எங்கே வருகிறது?

குழந்தைகள் விரும்பிய மொழியைப் படிக்க அவர்களுக்கும் அவர்தம் பெற்றோர்களுக்கும் முழு உரிமை உள்ளது. அதைப் பறிப்பதற்கு அரசியல்வாதிகளுக்கு எந்த உரிமையும் இல்லை. அரசியல் தலைவர்களின் குடும்பக் குழந்தைகள் மட்டும் பள்ளிகளில் இந்தி படித்து வருகின்றனர். அவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி மொழி கற்பிக்கப்படுகிறது. அப்படி இருக்கும் போது நாட்டில் அதிகம் பேர் பேசும் இந்தியைப் படிப்பதற்கு  சாதாரண குடும்பக் குழந்தைகளை ஏன் தடுக்க வேண்டும்?

தமிழ் மொழியை அழித்து வருவது ஆங்கிலம் தான். தமிழகத்தில் தற்போது எத்தனை விழுக்காடு பேருக்கு தமிழில் நன்றாக படிக்கவும், எழுதவும் தெரியும்? கடந்த ஐம்பது வருட காலத்தில் தமிழ் தெரிந்த தலைமுறைகளை நாம் ஏன் இழந்து வருகிறோம்? மாநிலத்தில் தமிழ் பள்ளிகள் ஏன் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன? அதற்கு காரணம் காலத்துகேற்ற வகையில் தமிழைப் பாதுகாத்து வளர்க்க அரசுகள் தவறி விட்டன.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசியக் கல்விக் கொள்கை தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை மேம்படுத்த பல செயல் திட்டங்களைக் கொண்டுள்ளது. முதல் முதலாக தாய்மொழிக் கல்வி பள்ளியில் தொடங்கி பல்கலைக் கழகம் வரை வரவுள்ளது. இப்போதே கல்லூரி அளவில் சில துறைகளில் தாய் மொழிக் கல்வி தொடங்கப்பட்டு விட்டது. .

மொழி உயிர்ப்புடன் இருக்க வேண்டுமெனில் அவை நடைமுறையில் இருக்க வேண்டும். மொழி பெயர்ப்புகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். மண்ணுக்குச் சொந்தமான கலைகள், இலக்கியங்கள், இசை உள்ளிட்டவை வாழ்க்கையோடு பின்னப்பட வேண்டும்.

அந்த வகையில் மொழி பெயர்ப்புக்கென நிறுவனம் தேசிய அளவில் அமைய உள்ளது. மேலும் நமது தேசிய மொழிகளை மேம்படுத்த இந்திய மொழிகள் நிறுவனம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தனியாகஅகாடெமிகள்உருவாக்கப்பட உள்ளன.

மேலும் ஓலைச் சுவடிகளைப் பாடத்திட்டத்துடன் இணைத்தல் மற்றும் அனைத்து மொழிகள் மற்றும் கலைகளை  ஆவணப்படுத்தல் ஆகியன தொடங்க உள்ளன. அதற்கு மேலாக வேலை வாய்ப்புக்கு மொழிப் புலமை தகுதியாக எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

இவற்றால் உலகின் தொன்மையான நமது தமிழ் மொழி தொடர்ந்து பேணப்படவும், உலக  அளவில் அதிகம் செல்லவும்  வாய்ப்புக்கள் ஏற்பட உள்ளது. பிரதமர் மோடி ஒருவர் தான் தொடர்ந்து தமிழை உலகின் மூத்த மொழி என நிறுவி வருகிறார். எனவே தமிழ் மற்றும்  இந்திய மொழிகளுக்காக மோடி அரசு பலவிதமான முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

தமிழகத்தில் தமிழின் பயன்பாட்டை மேம்படுத்த தொடர்ந்து நமது அரசுகள் தவறி வருகின்றன. அதை மோடி அரசு செய்து வருவது பாராட்டுதலுக்குரியது. எனவே மொழி அரசியல் செய்வதை விட்டு, தமிழை மேம்படுத்த அனைவரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

(தினமலர், ஏப் 12, 2022)

 

No comments: