வெற்றிக்கதைகள்-17


பெரிதாகப் பார்க்க படத்தின்மேல் க்ளிக்கவும்.

ராஜ்கோட்டின் ராஜநடை
வெற்றிக்கதைகள்17நம் நாட்டின் தொழிற்வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பது கடந்த 50 ஆண்டுகளில் வியக்கத்தக்க வகையில் வளர்ந்துள்ள தொழில் மையங்கள் தான். இவற்றில் பெரும்பாலானவை விவசாயத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கையின் சீற்றத்தால் விவசாயத்தை தொடர முடியாமல் புதிய தொழில்களில் இறங்கி வெற்றியடைந்ததால் உருவானவை. விவசாயத்தில் காட்டிய கடும் உழைப்பை நேரம் காலம் பார்க்காமல் புதிய தொழில்களிலும் காட்டியதால் அவர்களால் வெற்றிக்கொடியை நாட்ட முடிந்தது. இந்த வரிசையில் குஜராத்தின் நான்காவது பெரிய நகரமான ராஜ்கோட்டும் ஒன்று. இங்கு விவசாயத்தில் படேல் இன மக்களும், விவசாயத்திற்கு தேவையான கருவிகளை செய்யும் பணியில் "ராம்கடியா' இன மக்கள் ஈடுபட்டிருந்தனர். ஒரு இயந்திரத்தை பார்த்தவுடன் அதேபோல செய்துவிடும் திறன்படைத்த ராம்கடியா மக்களும், கடும் உழைப்பாளிகளான படேல் இன மக்களும் ஒன்று சேர்ந்து மாற்றுத் தொழில்களில் இறங்கினர். விளைவு குண்டூசி முதல் விமான உதிரிபாகங்கள் வரை உற்பத்தி செய்யும் மாபெரும் தொழில்நகரமாக ராஜ்கோட் தற்போது உருவாகி நிற்கின்றது.ஆஜி மற்றும் நயாரி நதிகளின் கரைகளில் அமைந்துள்ள ராஜ்கோட் நகரம் 1612 ம் ஆண்டில் அப்பகுதியை ஆட்சி செய்து வந்த ஜடேஜா ராஜபுத்திர மன்னர்களால் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயேர்கள் ஆட்சிக்காலம் வரை விவசாயத்தை அடிப்படையாக கொண்ட நகரமாக இருந்து வந்தது. விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் இறைக்கும் டீசல் இன்ஜின்களை லீசஸ்டர் என்ற இங்கிலாந்து நிறுவனம் விற்பனை செய்து வந்தது. 1950 களில் லீசஸ்டர் டீசல் இன்ஜின் ஒன்றை பிரித்து பார்த்த படேல் ஒருவர், அதேபோல இன்ஜினை உருவாக்கி லீசஸ்டர் மாடல் டீசல் இன்ஜின் என்று பெயரில் விற்பனைக்கு கொண்டு வந்தார். ஒரிஜினல் லீசஸ்டர் இன்ஜினைவிட விலை குறைந்தும், தரமானதாகவும் லீசஸ்டர் மாடல் இன்ஜின்கள் இருந்ததால் விவசாயிகளிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து மேலும் பலர் டீசல் இன்ஜின் உற்பத்தியில் இறங்கினர். சில ஆண்டுகளிலேயே லீசஸ்டர் இன்ஜின்களின் விற்பனை பாதாளத்திற்கு போய்விடவே அந்த கம்பெனி நிர்வாகிகள் ராஜ்கோட்டிற்கு வந்து ஆராய்ந்தனர். இனி லீசஸ்டர் இன்ஜின்களை இந்தியாவில் விற்பது சிரமம் என்று அவர்கள் புரிந்து கொண்டனர். "லீசஸ்டர்' என்ற பெயரிலேயே இன்ஜின்களை தயாரித்து விற்றுக் கொள்ள அனுமதிப்பதாகவும், அதற்கு ராயல்டியாக ஒரு தொகையை அளிக்கும்படியும் ராஜ்கோட் டீசல் இன்ஜின் தயாரிப்பாளர்களான படேல்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதற்கு படேல்கள் உடன்படவில்லை. மாறாக புதிய பெயர்களில் இன்ஜின்களை தயாரித்து விற்பனை செய்ய துவங்கினர். 15 ஆண்டுகளில் நாடு முழுவதும் ராஜ்கோட் டீசல் இன்ஜின்கள் விற்பனைக்கு வந்துவிட்டது. இவற்றில் குறிப்பிடத்தக்கவை ஸ்டேண்டர்டு ஆக்ரோ, பீல்டு மார்ஷல் இன்ஜின்கள். தற்போது ராஜ்கோட் டீசல் இன்ஜின்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. விவசாயத்திலிருந்து விவசாயத்திற்கு தேவையான டீசல் இன்ஜின் தொழிலுக்கு மாறிய ராஜ்கோட் விவசாயிகள், விவசாயத்தைவிட தொழில்துறை நல்ல லாபத்தை அளிக்கவே மெல்ல மெல்ல மற்ற தொழில்களிலும் இறங்கினர்.முதலில் டீசல் இன்ஜின்பாகங்கள் தயாரிப்பதற்காக வார்ப்படத் தொழிலும், லேத்துப்பட்டறைகளும் துவங்கப்பட்டன. டீசல் இன்ஜின் உற்பத்தியிலேயே முடங்கிப்போய்விடாமல் வாய்ப்புகளைத் தேடி தொழில்முனைவோர் சென்றதால் ஆட்டோமொபைல், ஜவுளி இயந்திரங்கள் போன்றவற்றிற்குத் தேவையான உதிரிபாகங்களும் இந்த பட்டறைகளில் உற்பத்தியாகத் தொடங்கின. முன்னேற்றத்திற்கு முடிவு என்பதே இல்லாமல் தற்போது மதர்மெஷினரி எனப்படும் உற்பத்தி இயந்திரங்களை உருவாக்கத் தேவைப்படும் இயந்திரங்கள் ராஜ்கோட்டில் தான் உருவாகின்றன. உலகில் அறிமுகப்படுத்தப்படும் நான்கு சக்கர வாகனங்களின் உதிரி பாகங்கள், வாகனம் அறிமுகமாகி நான்கே மாதத்தில் ராஜ்கோட்டில் உற்பத்தி செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகின்றன. வீட்டில் பயன்படும் கேஸ் அடுப்பு முதல் இந்திய விமானப்படைக்குத் தேவையான உதிரி பாகங்கள் வரை பல ஆயிரக்கணக்கான பொருட்கள் தற்போது ராஜ்கோட்டில் உற்பத்தியாகின்றன.ராஜ்கோட்டின் இந்த அசுர வளர்ச்சியின் பின்னணியில் அந்நகர மக்களுக்கே உரித்தான சில விசேஷ குணங்கள் காரணமாக அமைந்துள்ளது.ராஜ்கோட் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பெரும்பாலும் அந்நிறுவனத்தின் உரிமையாளருக்கு உறவினர்களாக இருக்கின்றனர். இவர்கள் தொழிற்சாலையிலேயே தங்கி பல ஆண்டுகள் நேரம் காலம் பார்க்காமல் உழைக்கின்றனர். மாதந்தோறும் தங்கள் செலவிற்கு மட்டும் பணம் பெற்றுக் கொள்ளும் இவர்கள் குறைந்ததது 5 ஆண்டுகள் வரை தங்களது சம்பளத்தை நிறுவன உரிமையாளரிடம் விட்டு வைக்கின்றனர். தொழிலை நன்கு கற்றுத் தேர்ந்தவுடன் இதுவரை விட்டுவைத்த மொத்த பணத்தையும் பெற்றுக் கொண்டு தொழிலாளியும் சொந்தமாக தொழிலை ஆரம்பிக்கிறார். அப்போது பழைய நிறுவன முதலாளியே முதல் ஆர்டரை கொடுப்பதுடன் முதலீட்டிற்கு தேவையான கூடுதல் பணத்தையும் அன்பளிப்பாக தந்து உதவுகிறார். இதன்காரணமாகவே ராஜ்கோட்டில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.ஒவ்வொரு தொழிலாளியும் தானும் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பதால் உழைப்பதற்கு நேரம் காலம் பார்ப்பதில்லை என்பதோடு தொழிற்சங்கங்களும் இந்நகரில் இல்லை.இதுதவிர இந்நகரில் உள்ளவர்களுக்கு குடிபழக்கம் இல்லாததும் தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமாக உள்ளது. மது அருந்துவது கேவலம் என்ற மக்களின் மனநிலையே இதற்கு முக்கிய காரணம்.ராஜ்கோட் நகரம் தொழில்வளத்தில் சிறந்து வழங்கி செல்வ செழிப்பில் திகழ்ந்தாலும் இந்நகர மக்கள் ஆன்மீகம், சமுதாய சேவை போன்றவற்றிலேயே அதிக ஈடுபாடு காட்டி நாட்டிற்கு முன்னுதாரணமாக இருந்து வருகின்றனர்.

* ராஜ்கோட் நகரின் தொழிற்வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்து வரும் ராம்கடியா மக்கள் எந்த ஒரு இயந்திரத்தையும் ஒரு முறை பார்த்தவுடனேயே அதைப்போலவே தயாரித்துவிடும் வல்லமை பெற்றவர்கள். இதனால் ஜெர்மனி போன்ற இயந்திர தயாரிப்பில் முன்னணியில் உள்ள நாடுகளின் நிறுவனங்கள் ராம்கடியா இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்தால் தங்கள் நிறுவனங்களின் உற்பத்தி பிரிவுக்குள் அனுமதிக்க மறுக்கின்றனர்.
ராஜ்கோட்டில் உள்ள சிறுதொழில் நிறுவனங்கள்:13,000*பிரபல எஸ்கேஎப் பேரிங்குகள் மற்றும் ரிங்குகள் ஜெர்மனிக்க மட்டும் ஆண்டிற்கு 10 லட்சம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.*பொறியியல் உற்பத்தி 700 கோடி ரூபாய். * பவுண்டரிகள் 500* ராஜ்கோட் தங்க சந்தை நாட்டின் முக்கியமான தங்க சந்தைகளில் ஒன்றாகும். இங்கு ஒரு நாளைக்கு ஆயிரம் கிலோ தங்கம் விற்பனையாகிறது.
தொழில்கள் பட்டியல்:வார்ப்படத்தொழில், ஏர்கம்பரசர், பர்னிச்சர், மரம்வெட்டும் இயந்திரங்கள், விமான உதிரி பாகங்கள் தயாரிப்பு, லேத் மெசின்கள் தயாரிப்பு, வைரம் வெட்டும் இயந்திரங்கள், ஜவுளி இயந்திரங்கள் தயாரிப்பு, வெள்ளிநகை தயாரிப்பு, தங்கநகைத்தயாரிப்பு, கேஸ் லைட்டர் தயாரிப்பு, பித்தளை பாகங்கள் தயாரிப்பு, பேரிங்குகள், மினிடிராக்டர்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பு, ஐடி மென்பொருள் தயாரிப்பு என்று ஆயிரக்கணக்கான தொழில்கள் உள்ளன.

No comments: