லூதியானா பஞ்சாப் மாநிலத்தின் தொழில் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. மாநிலத்தின் மிகப்பெரிய நகரமும் கூட. சட்லெஜ் நதியின் பழைய கரையில் அமைந்துள்ளது. மான்செஸ்டர் ஆப் இந்தியா என்பது அதன் இன்னுமொரு பெயர். லூதியானா மாவட்டம் தான் பஞ்சாப்பின் செல்வந்த மாவட்டமாக கருதப்படுகிறது. இந்தியாவிலேயே அதிக விலையுள்ள நீர்வளம் பெற்ற நிலங்களை உடைய மாவட்டமும் இது தான்.லூதியானாவில் 150 ஆண்டுகளுக்கு முன்பே காஷ்மீரிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்கள் பின்னலாடை உற்பத்தியில் ஈடுபட்டனர். பின்னர் அவை ஐரோப்பியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காலுறைகள் தயாரிக்கும் இயந்திரங்கள் அங்கு நிறுவப்பட்டன. அந்த சமயத்தில் சில தொழில் நிறுவனங்களும் தோன்றின. 1920 களில் பவுண்டரி தொழிலும் அங்கு ஏற்பட்டது. இதைத்தவிர குறிப்பிடத்தக்க தொழில்கள் ஏதும் அப்போது அங்கில்லை. லூதியானா நகரின் பெயரை தொழில்கள் மூலம் உலகறியச் செய்தவர்கள் மேற்கு பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்த மக்கள் தான் என்பது ஆச்சரியத்தை அளிக்கக்கூடியது. இந்தியா துண்டாடப்பட்டு 1947 ம் ஆண்டு சுதந்திரத்தை பெற்றது. இன்றைய பாகிஸ்தான் பகுதியில் வசித்து வந்த மண்ணின் மைந்தர்களின் அங்கிருந்து விரட்டப்பட்டனர். பலர் தங்கள் நிலம், வீடு, சொத்துக்களை இழந்து நிர்கதியாக இந்தியாவிற்கு வந்தனர். அப்படி தங்கள் உடமைகளை விட்டுவிட்டு வெறுங்கையுடன் லூதியானா வந்த அகதிகள் பலர் மீண்டும் பழைய நிலையை அடைய வேண்டும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று கடினமாக உழைத்தனர். கிடைத்த தொழிலை கிணற்றில் மூழ்குபவனுக்கு கிடைத்த கயிறுபோல பயன்படுத்தி கிடுகிடுவென முன்னேறினர். அவர்களின் அந்த உழைப்பு, லூதியானாவை இன்று இந்தியாவின் முக்கிய தொழில்மையமாக உருவாக்கிக் காட்டியிருக்கிறது.1950 மற்றும் 60 களில் புதியவர்களும், இளைஞர்களும் பல தொழில்களில் அதிக எண்ணிக்கையில் ஈடுபட்டனர். சைக்கிள்களின் உதிரிபாகங்கள், இயந்திரங்கள், தையல் இயந்திரங்கள், வாகன உதிரிபாகங்கள், டீசல் இன்ஜின்கள், ஜெனரேட்டர்கள், டயர், டியூப்புகள், எஃகு தயாரிப்பு போன்ற தொழில்களில் நுழைந்தனர். அவற்றை ஏற்றுமதியும் செய்யத் தொடங்கினர். அதன்விளைவாக தொழில் வேகமாக வளர்ச்சிப் பெற்றது.எனவே தற்போத குறுந்தொழில்கள், சிறுதொழில்கள், நடுத்தர தொழில்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் எனப் பல்வேறு நிலைகளில் தொழில்கள் நடந்து வருகின்றன. பதிவு செய்யப்பட்ட சிறு, நடுத்தர மறறும் பெரிய தொழில்கள் மட்டும் 40 ஆயிரம் உள்ளன. சிறிய மற்றும் நடுத்தர அளவில் வுல்லன் பஞ்சாலைகள் 150 உள்ளன.பின்னலாடைத் துறையை பொருத்தவரøயில் உள்நாட்டு வணிகம் மற்றும் ஏற்றுமதியில் லூதியானா தனி பெயர்பெற்ற நகரமாக விளங்குகிறது. இறககுமதி செய்யப்படும் வெளிநாட்டு இயந்திரங்கள் அனைத்தையும் அதேமாதிரி உருவாக்குமளவு திறமை பெற்ற ராம்கடியா இனத்தைச் சேர்ந்த மக்கள் லூதியானாவின் வெற்றிக்கு பின்னணியில் உள்ளனர். லூதியானாவைச் சேர்ந்த பெரிய நிறுவனம் ஒன்றில் அதிக விலை மதிப்புள்ள வெளிநாட்டு இயந்திரத்தின் உதிரிபாகம் ஒன்று பழுதடைந்துவிட்டது. அதற்கு மாற்று பாகத்தை அனுப்பி வைக்குமாறு இயந்திரத்தை தயாரித்த வெளிநாட்டு கம்பெனியை அதன் உரிமையாளர் நாடினார். ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்த உதிரிபாகம் வந்து சேரவில்லை. உற்பத்தி குறைந்து நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க உள்ளூர் ராம்கடியா நண்பரை தொழிலதிபர் அணுகினார். அவர் இரண்டே நாட்களில் அந்த உதிரிபாகத்தை தரமானதாக தயாரித்து அளித்துவிட்டார். அதற்காக அவர் பெற்றுக் கொண்ட தொகை மிகமிக குறைவு. அதற்கு சில தினங்களுக்கு பின்னர் இயந்திரத்தை தயாரித்த வெளிநாட்டுகம்பெனிகளின் பிரதிநிதிகள் லூதியானா வந்து ராம்கடியா நண்பர் தயாரித்த உதிரிபாகத்தைக் கண்டு பிரமித்து போனார்கள்.இதுபோன்ற தொழில்நேர்த்தியும் லூதியானாவை வெற்றியடையச் செய்திருக்கிறது.தையல் இயந்திரத் தயாரிப்பில் நாட்டின் முதலிடம் லுதியானாவிற்கு தான். விதவிதமான தையல் இயந்திரங்கள் அங்கு தயாரிக்கப்படுகின்றன. இதில் 400 க்கும் மேற்பட்ட சிறு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ரெடிமேடு துணி ரகங்கள் அதிகளவில் லூதியானாவில் தயாரிக்கப்படுகின்றன. அதில் 95 சதவீதத்திற்கு மேல் சிறு தொழில்களாக நடப்பது சிறப்பு. மற்ற எல்லாத் தொழில்களையும் விட லூதியானாவை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றிருப்பது அங்கு உற்பத்தியாகும் சைக்கிள்கள் தான். பாகிஸ்தானிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட ஒரு குடும்பம் தான் லூதியானாவின் சைக்கிள் தொழிலுக்கு வித்திட்டிருக்கிறது. மேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு நகரில் 1944 ம் ஆண்டில் முஞ்சால் குடும்பத்தினர் சைக்கிள் உதிரிபாகங்கள் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை துவங்கினர். வியாபாரம் சற்று சூடுபிடிக்கும் சமயத்தில் பிரிவினை நடந்தது. வாழ்க்கையைத் தேடி லூதியானாவிற்கு முஞ்சால் குடும்பத்தினர் வந்து சேர்ந்தனர். அந்த குடும்பம் இந்தியாவில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள 9 ஆண்டுகள் பிடித்தது. பின்னர் 1956 ம் ஆண்டு சைக்கிள் உதிரிபாகங்கள் தயாரிப்பு தொழிலை இங்கேயும் ஆரம்பித்தனர். நல்ல வரவேற்பு கிடைத்ததும் முழு சைக்கிள்களை உருவாக்கி விற்பனை செய்யதுவங்கினர். வெறும் 25 சைக்கிள்களில் தொடங்கிய அவர்களது தொழில் நாளடைவில் தினசரி 18 ஆயிரத்து 500 சைக்கிள்கள் தயாரித்து விற்பனை செய்யும் பிரமாண்டமான "ஹீரோ' சைக்கிள் நிறுவனமாக உயர்ந்தது. உலக அளவில் அதிக சைக்கிள் தயாரிக்கும் நிறுவனமாக 1986 ல் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றது. இந்திய சந்தையில் ஹீரோ சைக்கிள் 48 சதவீதத்தை பிடித்துக் கொண்டுள்ளது.பின்னர் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு, கம்ப்யூட்டர் தயாரிப்பு என்று தொழிலை பெருக்கி தற்போது 20 கம்பெனிகளையும், 5 ஆயிரம் விற்பனை நிலையங்களையும், 25 ஆயிரம் பணியாளர்களையும் கொண்டு பிரமாண்டமாக உருவாகி நிற்கிறது முஞ்சால் குடும்பத்தின் நிறுவனம்.ஒரு நிறுவனத்தில் அதிகமாக ஒரே சமயத்தில் பொருட்களை வைத்திருக்கும் போது தேவையில்லாத பணமுடக்கம் ஏற்படும், அதை தவிர்ப்பதற்காக தேவைப்படும் நேரத்தில் தேவையான பொருட்களை பெற்றுக் கொள்ளும் "ஜிட்' என்ற முறையை நாட்டிலேயே முதன்முறையாக அமல்படுத்தியவர்களும் இவர்கள் தான். ஒரு பணியாளர் ஒரே நேரத்தில் இரண்டு இயந்திரங்களை இயக்கும் முறையை அமல்படுத்தி அதில் பெரும் வெற்றியை கண்டவர்களும் இவர்கள் தான். 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டிலான இந்நிறுவனத்தின் தலைவராக 86 வயதான பிரிஜ்மோகன் முஞ்சால் உள்ளார். ஹீரோ நிறுவனம் குறித்த பாடங்கள் இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளின் முன்னணி மேலாண்மை நிறுவனங்களில் பாடங்களாக வைக்கப்பட்டுள்ளன.கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பத் தொழிலாக நடத்தப்பட்டவரும் இவர்களது தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுடன் நல்ல உறவு பேணப்படுவதால் தொழிற்சங்கங்கள் ஏதும் இல்லை என்பது ஆச்சரியமான உண்மை. ஹீரோ நிறுவனத்தைப் போலவே ஆவன் நிறுவனம் நவீன தொழிற்சாலையை நிறுவி சைக்கிள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.சிறிய அளவிவில் லூதியானாவில் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் இன்று உலக அளவில் பெரிய தொழில் குழுமங்களாக மாறி நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியமான பங்காற்றி வருகின்றன. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொத்த தொழில்நிறுவனங்களில் 21 சதவீதம் லூதியானாவில் உள்ளதாகவும், அவை மாநிலத்தின் உற்பத்தியில் 28 சதவீதம் அளிப்பதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.எல்லாவற்றையும் இழந்து ஊர்பெயர்ந்து வந்தமக்களின் உழைப்பால் லூதியானா இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது. உழைப்பும், உறுதியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணம் லூதியானா. வந்தவர்களால் வாழவைக்கப்பட்ட ஊர் லூதியானா.
*சைக்கிள் நகரம்
இந்தியாவின் சைக்கிள் நகரமாக லூதியானா விளங்குகிறது. ஹீரா, ஆவன், அட்லாஸ், நீலம் உட்பட பல சைக்கிள்கள் இங்கு தயாராகின்றன. இந்த தொழிலில் ஆயிரத்து 800 தொழிற்சாலைகள் ஈடுபட்டுள்ளன. இதில் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வேலை வாய்ப்புபெற்றுள்ளனர்.
*ஆசியாவின் பெரிய விவசாயப்பல்கலைக்கழகம் லூதியானாவில் உள்ள பஞ்சாப் விவசாய பல்கலைக்கழகமாகும். ஆயிரத்து 500 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது.
No comments:
Post a Comment