வெற்றிக்கதைகள்-20









அமராவதிக்கரையிலிருந்து அமெரிக்கா வரை

நாட்டின் மற்ற தொழில் நகரங்களுக்கு இல்லாத பல பெருமைகள் கரூருக்கு உண்டு. இந்நகரம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றையும், சங்கப்புலவர்களால் பாடப்பட்ட சிறப்பையும் உடையது. சங்க காலத்திலேயே கரூர் முக்கியமான வணிக மையமாக திகழ்ந்து வந்துள்ளது.அக்காலத்தில் கரூவூர், வஞ்சி என்ற பெயர்களில் அழைக்கப்பட்ட கரூர், சேரன் செங்குட்டவன் ஆட்சி காலத்தில் சேரநாட்டின் தலைநகராக இருந்துள்ளதாக சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொங்கு அரசர்களின் ஆட்சி காலத்தின் போதும் தலைநகராக விளங்கி வந்தது. 1850 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது பொதுயுகம் 150 ல், கரூர் நம் நாட்டின் முக்கியமான சர்வதேச வணிக மையமாக இருந்து வந்ததாக கிரேக்க வரலாற்று ஆசிரியரான தாலமி குறிப்பிட்டுள்ளார். அதை உறுதிப்படுத்தும் வகையில் கரூர் பகுதியில் பல இடங்களில் ரோம நாணயங்கள் கிடைத்துள்ளன. அந்த காலக்கட்டங்களிலேயே முக்கியமான நகை தயாரிக்கும் மையமாக கரூர் இருந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அமராவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள கரூர் நகரின் மக்கள் தொகை 2001 ம் ஆண்டு கணக்குப்படி 1.5 லட்சம். மாவட்டத்தின் மக்கள் தொகை 10 லட்சம். தமிழகத்தில் அதிகமான பெண்கள் உள்ள மாவட்டங்களில் கரூரும் ஒன்று. பெரும்பான்மையான மக்களின் தொழிலாக விவசாயமே இருந்து வருகிறது. நெல், வாழை, கரும்பு< வெற்றிலை, பயிறு வகைகள், மரவள்ளி, நிலக்கடை உள்ளிட்ட பொருள்கள் விளைகின்றன.கடந்த பல ஆண்டுகளில் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, நிதி சம்மந்தமான தொழில்கள், பஸ் பாடி பில்டிங், கொசுவலை உற்பத்தி என்று பல தொழில்கள் மக்கள் ஈடுபட்டு அவற்றில் முன்னேற்றமும் கண்டு வருகின்றனர். இதில் கைத்தறி துணிகளுக்கு பெயர் பெற்ற ஊராக கரூர் விளங்குகிறது. அந்த துறையில் கரூருக்கு நூறு ஆண்டுகளுக்கு மேலான வரலாறு உள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் நெசவுத்தொழிலின் வளர்ச்சி பிரமாண்டமாக உள்ளது. விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த பலரும் நெசவுத்தொழிலில் நுழைந்து அதை பெரிய அளவில் எடுத்துச் சென்றுள்ளனர். அதன்விளைவாக இன்று நாட்டின் முக்கிய ஜவுளி ஏற்றுமதி மையமாக கரூர் விளங்குகிறது.1975 ம் ஆண்டு கரூரில் 15 ஏற்றுமதியாளர்கள் மட்டுமே இருந்தனர். தற்போது 500 பேருக்கு மேல் ஏற்றுமதித்தொழிலில் உள்ளனர். உலகின் மிகப்பெரிய நிறுவனங்களான வால்மார்ட், டார்ஜெட் ஆகியவற்றிற்கு இங்கிருந்து பொருட்கள் செல்கின்றன. அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், தென்கொரியா, ஆப்பிரிக்க உட்பட உலகின் பல பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.கரூர் தொழிலதிபர்கள் துணியை உற்பத்தி செய்து அதை அப்படியே விற்க நினைக்காமல் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்யத்துவங்கியதால் தான் சர்வதேச அளவில் தனியான இடத்தை தனக்கென பிடித்துள்ளது. துணிகளில் விதவிதமான பொருட்கள் ஏற்றுமதிக்காக தயாரிக்கப்பட்டு பல நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. அவற்றில் குளியலறை, சமையலறை, படுக்கையறை சம்மந்தப்பட்ட துணி வகைகள் முக்கியமானவை. படுக்கை விரிப்புகள், துண்டுகள், தரையில் விரிக்கப்படும் துணிகள், சிற்றுண்டி துண்டுகள், நாப்கின்கள், ஏப்ரன்கள், திரைச்சீலைகள், தலையணை உறைகள் என்று இதன் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.அண்மை காலங்களில் ஜவுளித்துறையில் விசைத்தறிகள் அதிகமாகி கைத்தறிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. நெசவுத்தொழில் வளர்ச்சி பெற்றதால் அதையொட்டி அரவை மற்றும் நூற்பாலைகள், சாயப்பட்டறைகள், டெய்லரிங், பேக்கிங் தொழில்களும் வளர்ந்து அவை 3 லட்சம் பேருக்கும் மேல் வேலை வாய்ப்பை அளிக்கின்றன. நேரடி மற்றும் மறைமுக ஏற்றுமதிகளின் மூலம் 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான அந்நிய செலாவணியை கரூர் ஈட்டித்தருகின்றது.கரூர் தொழிலதிபர்களின் வெற்றிக்கு பின்னால் அவர்களது கடும் உழைப்பு உள்ளது.விவசாயத்தில் வருமானம் குறைந்ததால் வருமானத்தை பெருக்கும் நோக்கத்துடன் அதிகமான விவசாயிகள் கைத்தறித் தொழிலில் நுழைந்தனர். அவர்களில் 50 சதவீதம் பேர் வேலையாட்களாகவே நுழைந்து பின்னர் தொழிலில் பங்குதாரர்களாக சேர்ந்து தங்களது கடின உழைப்பு காரணமாக முன்னேறியுள்ளனர். அதன்பின் ஏற்றுமதி வர்த்தகத்திலும் ஈடுபட்டுள்ளனர். ஏற்றுமதி செய்பவர்களில் மூன்றில் இரண்டு பேர் தொழிலாளிகளாக இருந்து முன்னேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் தொழில் வளர்ச்சிக்கு உறவுகளும் அவற்றின் அடிப்படையில் அமைந்த பங்குதாரர்கள் சார்ந்த அமைப்பு முறையும் முக்கிய காரணமாக உள்ளது.கரூரின் தொழில்வளர்ச்சிக்கு அங்கு உள்ள நிதி அமைப்பு முறைகள் முக்கிய பங்கு வகித்துள்ளன. ஆரம்ப காலங்களில் தொழில்களுக்குத் தேவையான நிதியை அப்போதிருந்த வட்டிக்கடைகள், மற்றும் உறவுகள் மூலமே தொழில் முனைவோர் பெற்று வந்துள்ளனர். தொழில் வளர்ந்த போது அங்குள்ள வாய்ப்புகளைக் கண்டு அப்பகுதிகளைச் சேர்ந்த மக்களே கூட்டாக சேர்ந்து நிதி அமைப்புகளை உருவாக்கினர். அதன்மூலம் நூற்றுக்கணக்கான சிறியதும், பெரியதுமான நிதிஅமைப்புகள் பங்குதாரர்களை வைத்து துவக்கப்பட்டன. 1980 களில் அவற்றின் வளர்ச்சிஅதிகரித்தது. சராசரியாக ஆறு முதல் 10 பேர் வரை சேர்ந்தும் சில சமயங்களில் 20 பேர்கள் வரை சேர்ந்தும் நிதி நிறுவனங்களை நடத்தி வந்தனர். உறவுகள் மற்றும் நட்புகள் மூலம் கிராமங்களின் சேமிப்புகள் மூலதனங்களாகவும், வைப்புகளாகவும் வந்தன. அதனால் வைப்புகள் அதிகரித்து தொழில்களுக்கு கடன்கள் கொடுக்கப்பட்டன. லாபங்கள் மேலும் முதலீடாக போடப்பட்டதால் நிதி அமைப்புகள் வேகமாக வளர்ந்தன.கடன்களும் உறவுகள், நட்புகள் மற்றும் தொடர்புகளை மையமாக வைத்தே கொடுக்கப்பட்டதால் பெரும்பாலும் முறையாக திருப்பி செலுத்தப்பட்டன. பெரும்பாலான கடன்கள் நம்பிக்கை, நாணயம் மற்றும் பங்குதாரர்களின் உத்தரவாதம் ஆகியவற்றை வைத்து கொடுக்கப்பட்டன. ஒரு வாடிக்கையாளர் கடனை திருப்பி செலுத்தாமல் போய்விட்டால் பல சமயங்களில் சம்மந்தப்பட்ட பங்குதாரரே அந்த தொகையை செலுத்தி நிறுவனத்திற்கு வராகடன் இல்லாமல் செய்து விடுவார். வங்கிகளை விட அங்கு நடத்தப்பட்ட நிதி அமைப்புகளில் வைப்புகளுக்கும், கடன்களுக்கும் வட்டி அதிகம். கடன்களுக்கு வட்டி அதிகமாக இருந்த போதும் தொழில் முனைவோர் பெரும்பாலும் நிதி அமைப்புகளையே அதிகம் நாடுகின்றனர். இதற்கு காரணம் கடன்பெறுவதற்கு உள்ள எளிதான வழிமுறைகள் மற்றும் நிறைய சமயங்களில் சொத்துக்களை அடமானமாக வைத்து உத்தரவாதம் கொடுக்கத் தேவையில்லாத, சூழ்நிலை ஆகியவை ஆகும். மேலும் கடன் வாங்கியவருக்கு தொழில் சிரமங்கள் ஏற்படும் போது நிதி அமைப்புகள் தங்கள் நடைமுறைகளை தளர்த்தி உதவுகின்றன. அதுமட்டுமன்றி அவசர தேவைகளுக்கு உடனே உதவி கிடைக்கிறது. எனவே வங்கிகளை விட மக்கள் நிதி அமைப்புகளை அதிகம் நாடுகின்றனர்.கரூர் மாவட்டத்திற்கு அருகில் உள்ள நாமக்கல், சங்ககிரி பகுதிகளை பின்பற்றி கரூரிலும் மோட்டார் வாகனத்தொழில் ஆரம்பிக்கப்பட்டு தென்னிந்தியாவில் பஸ் பாடி பில்டிங் என்றாலே கரூர் என்ற பெயர் பெற்றுள்ளது. துவக்கத்தில் சிறிய அளவில் துவக்கப்பட்ட பஸ் பாடி பில்டிங் தொழில் தற்போது தென்னிந்தியாவில் உள்ள 90 சதவீத தனியார் பஸ்களுக்கு பாடி கட்டும் அளவிற்கு வளர்ந்துள்ளது. சாதாரண பஸ் முதல் நவீன பஸ்கள், சொகுசு பஸ்கள், நவீன ஸ்கேனிங் வசதிகளுடன் கூடிய நடமாடும் மருத்துவமனைகள் என்று பஸ்கள் கரூரில் உருவாகின்றன. இதன் மூலம் ஆண்டிற்கு 350 கோடி ரூபாய் வருமானம் கரூருக்கு கிடைக்கிறது.விவசாயத்திலிருந்து ஜவுளி, நிதி, மோட்டார் வாகனத்தொழில் போன்றவற்றில் இறங்கி அதில் பெரும் வெற்றியை பெற்றுள்ள கரூர் தொழில்முனைவோர் நாட்டிற்கு முன்னுதாரணமாக திகழ்கின்றனர். வங்கித் தொழிலில் முன்னோடி நகரம் இரண்டு வரையறுக்கப்பட்ட வங்கிகள் ஆங்கிலேயேர் ஆட்சி காலத்திலேயே கரூரில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கரூர் வைஸ்யா வங்கி 1916 ம் ஆண்டு வெங்கட்ராம செட்டியார், ஆதிகிருஷ்ண செட்டியார் ஆகியேரால் ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டது. இன்று 285 கிளைகளுடன் 13 மாநிலங்களில் 2 ஆயிரத்து 300 கோடி ரூபாய்க்கு மேலான வர்த்தகத்துடன் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது. லட்சும விலாஸ் வங்கி 1926 ம் ஆண்டு ராமலிங்க செட்டியார் தலைமையில் 7 பேரைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இவ்வங்கி 246 கிளைகளுடன் 14 மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றது. இந்த வங்கிகள் கரூர் மட்டுமன்றி நாட்டின் பல பகுதிகளில் தொழில் வளர்ச்சிக்கு பங்காற்றியுள்ளன. * கரூரில் 2002 ம் ஆண்டு நடந்த ஆய்வு ஒன்றில் கரூரில் தொழில்துறையின் மொத்த தேவையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே வங்கிகள் மூலம் பெறப்பட்டுள்ளது தெரியவந்தது. அந்த காலக்கட்டத்தில் கரூரில் 50க்கும் மேற்பட்ட பல்வேறு வங்கிகளின் கிளைகள் செயல்பட்டு வந்தன. தொழில்துறைக்குத் தேவையான நிதியில் பெரும்பங்கை தனியார் நிதி அமைப்புகளால் கொடுக்கப்படுகிறது. இங்கு செயல்பட்டு வரும் நிதி நிறுவனங்கள் தொழில் ரீதியாக ஒன்றுக் கொன்று போட்டி போட்டு வளர்ந்தாலும் பல விதங்களில் தங்களுக்குள் ஒற்றுமையாக செயல்பட்டு வருகின்றன. ஒரு நிறுவனத்தில் கடன் வாங்கியவரின் நம்பகத்தன்மை சரியில்லை என்றால் மற்ற நிறுவனங்கள் அவரைப் பற்றிக் கேட்கும் போது அது குறித்து ரகசியமாக தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர். அதன்மூலம் பிற நிதி நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாவது தவிர்க்கப்பட்டது. *கரூரில் அரசு நிறுவனமான தமிழ்நாடு பேப்பர் மில்ஸ் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய காகித உற்பத்தி ஆலையாக விளங்குகிறது.

No comments: