சூரத்!
நாட்டின் மிகப்பெரிய தொழில் நகரங்களில் ஒன்று என்பது தெரியும். ஆனால் சூரத்திற்கு தொழில் நகரம் என்ற அந்தஸ்த்தை அளித்தவர்கள் அந்நகரைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏழை விவசாயிகள் என்பதும், அவர்கள் தொழிலை கற்க நகரத்திற்கு வரும் போது இன்று வரை பிளாட்பாரங்களில் தான் தங்குகிறார்கள் என்பதும் வியப்பான செய்தி.சூரத் நகரம் ஜவுளி, வைரம் என்று இரு முக்கிய தொழில் மையமாக திகழ்கிறது. குஜராத்தின் மொத்த ஜவுளி விற்பனையில் 80 சதவீதம் சூரத்தில் நடக்கிறது. இங்கு 30 ஆயிரம் கடைகள் கொண்ட உலகின் மிகப்பெரிய ஜவுளி சந்தை உள்ளது. குஜராத் மாநிலத்தின் தொழில்துறையில் வளர்ச்சி ஏற்பட முக்கிய காரணமாக இருந்து வரும் படேல் சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஜவுளி தொழிலிலும் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். ஜவுளித்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களில் 60 சதவீதம் பேர் இவர்கள் தான். இங்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. நூல் உற்பத்தி, விவிங், பிராசசிங் மற்றும் எம்ப்ராய்டரிங், செயற்கை இழை நூல் தயாரிப்பு என்று ஜவுளித் தொடர்பான அனைத்து தொழில்களும் ஒருங்கே அமைந்துள்ள சூரத்தில் நாளொன்றிற்கு 6 கோடி மீட்டர் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. குஜராத் மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் ஜவுளித்துறையின் பங்கு 25 சதவீதம் ஆகும். அதற்கு சூரத் நகர் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோர் சாதிக்க வேண்டும் என்ற துடிப்போடு செயல்படுவதால் இங்கு மட்டும் 400 சொந்த பிராண்டு ஜவுளி ரகங்களை உருவாக்கியுள்ளனர். ஜவுளி தொழிலில் மட்டும் ஆண்டிற்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலியஸ்டர் நூல் உற்பத்தியில் 90 சதவீதம் இந்நகரில் தான் உற்பத்தியாகிறது. ஜவுளி தொழிலில் பல லட்சம்பேர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.வைரம் பட்டை தீட்டும் தொழில் சூரத் நகரில் வைரம் பட்டைத்தீட்டும் தொழில் 1909 ல் துவங்கியது. குஜராத் மாநிலத்திலிருந்து பிழைப்பு தேடி ஆப்ரிக்க நாடுகளுக்குச் சென்ற சிலர் அங்கு வைரம் பட்டை தீட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் 1909ல் நாடு திரும்பினர். சூரத் நகருக்கு வந்த அவர்கள் வைரம் பட்டை தீட்டும் தொழிலை சிறிய அளவில் துவங்கி நடத்த ஆரம்பித்தனர். ஏற்கனவே நகை தொழில் உட்பட வியாபாரத் தொழிலில் சிறந்து விளங்கி வந்த பாலன்பூரி ஜெயின் சமூகத்தினர் இந்த தொழிலில் இறங்கியதும், வைரம் பட்டைத் தீட்டும் தொழிலின் வளர்ச்சி அதிகரித்தது. சூரத் நகரில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த இத்தொழில் மிக வேகமாக வளர்ந்தது விவசாயிகளாக இருந்த படேல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இத்தொழிலில் இறங்கிய பின்னர் தான். குஜராத் மாநிலத்தின் சவுராஷ்ட்ர பகுதியில் மானாவரி விவசாயமே அதிகம். இதில் விவசாயிகள் ஆண்டில் 6 மாதம் மட்டுமே விவசாயத்தில் ஈடுபட முடியும். அதிலும் போதிய வருமானம் இருக்காது. இதனால் பலர் விவசாய வேலை இல்லாத சமயங்களில் வேறு தொழில் செய்து வருமானம் பார்ப்பதும், மழை பெய்ததும் விவசாயத்திற்கு திரும்புவதும் வாடிக்கையான ஒன்று. இப்படி பல தொழில்களில் இறங்கிய விவசாயிகள், விவசாயத்தைவிட தொழிலில் லாபம் அடையும் போது விவசாயத்தில் காட்டிய ஈடுபாட்டையும், உழைப்பையும் புதிய தொழிலில் காட்டியதால் பெரும் வளர்ச்சிப் பெற்றனர். சூரத் நகரில் வைரம் பட்டை தீட்டும் தொழிலும் இப்படித் தான் வளர்ந்தது. சவுராஷ்ட்ரா பகுதிகளில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் வேலையில்லாத ஆறு மாதங்கள் சூரத் நகருக்கு வந்து வைரம் பட்டைத்தீட்டும் பட்டறைகளில் வேலைக்கு சேருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். வேலை பழகும் வரை தொழிலதிபர்கள் குறைந்த சம்பளம் கொடுப்பது குறித்து இவர்கள் கவலைக் கொள்வதில்லை. காலையிலிருந்து மாலை வரை பட்டறைகளில் வேலை செய்யும் இவர்கள், வேலை முடிந்தவுடன் ரோட்டோரங்களில் உள்ள தள்ளுவண்டி கடைகளில் சாப்பிட்டுவிட்டு பிளாட்பாரங்களிலேயே தூங்குகின்றனர். விவசாய வேலை இல்லாத சமயங்களில் மட்டும் சூரத் வரும் இவர்கள் இரண்டு, மூன்று ஆண்டுகளில் தொழிலை கற்றுக் கொண்டுவிடுகின்றனர். பின்னர் தாங்களே சொந்தமாக சிறிய பட்டறையை ஆரம்பித்து சூரத்திலேயே தங்கிவிடுகின்றனர். இதற்கு தேவையான மூதலீட்டை அவர்களது கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அளிக்கின்றனர். தொழிலில் லாபம் கிடைத்ததும் அவற்றை திருப்பி செலுத்தும் இந்த தொழில் முனைவோர், தங்களது கிராமங்களுக்கு தேவையான ரோடு போடுதல், பள்ளிக்கூடம் கட்டி கொடுத்தல், கோயில்களை புணரமைத்தல் போன்ற பணிகளையும் செய்கின்றனர். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த நடைமுறை இன்றும் தொடருகின்றது. இதனால் நாட்டிலேயே வேறு எங்கும் இல்லாத அளவிற்கு ஆண்டிற்கு ஒரு லட்சம் புதிய தொழில் முனைவோர் வைரம் பட்டை தீட்டும் தொழிலை துவங்குகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தொழிலை கற்கும் வரை பிளாட்பாரவாசிகளாக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.சாதாரண ஏழை மக்களால் வைரம் பட்டை தீட்டும் தொழில் சூரத்தில் பெரும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உலகில் வெட்டி எடுக்கப்படும் வைரங்களில் 80 சதவீதம் சூரத்தில் பட்டை தீட்டப்பட்டுகிறது.10 லட்சம் பேர் இந்த தொழிலில் இங்கு ஈடுபட்டுள்ளனர். இதில் 20 சதவீதம் பேரின் மொத்த முதலீடே 20 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் தான். சில தொழிலதிபர்கள் சீனாவில் தங்களது கிளை நிறுவனங்களை ஆரம்பித்து நடத்தி வருகின்றனர். அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் நாடுகளில் கிளை நிறுவனங்கள் அமைத்து நேரடி ஏற்றுமதி வர்த்தகம் நடக்கின்றது. வைரத் தொழிலில் மட்டும் ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் சூரத்தில் நடக்கின்றது.பெல்ஜியம் நாட்டில் உள்ள உலகின் வைரச்சந்தையான ஆன்ட்வர்ப் நகரத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மூன்றில் இரண்டு பங்கு வர்த்தகம் சூரத் வர்த்தகர்களால் நடத்தப்படுகிறது. இதனால் அந்த வைரச்சந்தையில் சூரத் வியபாரிகளின் ஆதிக்கம் கொடிக்கட்டி பறக்கின்றது.
1.விலை மதிப்பு மிக்க வைரங்களை கையாளும் வைரம் பட்டை தீட்டும் தொழிலில் சிறு முறைகேடு நடந்தாலும் தொழில்முனைவோர் பெருத்த நஷ்டம் அடைய நேரிடும். சூரத்தில் வைரம் பட்டை தீட்டும் தொழில் சிறப்பாக நடக்க இந்த தொழிலில் இறங்கியுள்ள பாலன்பூரி ஜெயின்களும், படேல் சமூகத்தினருக்கும் உள்ள அதீத கடவுள் நம்பிக்கையும் மதத்தலைவர்கள் மீதான மதிப்பும் தான் காரணம். பாலன்பூரி ஜெயின்களின் மத குருமார்கள் வியாபாரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள், வைக்க வேண்டிய லாபம் போன்ற விதிமுறைகளை வகுத்துள்ளனர். அந்த விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி வருவதால் நிறைந்த தரமும், சரியான விலையும் அவர்களால் நிர்ணயிக்க முடிகிறது. அதன்காரணமாகவே சர்வதேச அளவில் வைர வியாபார போட்டியில் வெற்றியை அள்ளியிருக்கிறார்கள். இவர்களைப்போலவே படேல் சமூகத்தினரின் தொழில் நேர்மை அவர்களை வெற்றிக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.
2: சூரத் வைரத் தொழில் வெற்றிக்கு பட்டை தீட்டுவதில் உள்ள தரம் மற்றொரு காரணமாக உள்ளது.
3: சூரத் பிளாட்பாரங்களில் ஆறுமாதங்கள் முகாமிடும் தொழிலாளர்களால் நகரின் அழகு கெடுகிறது என்ற புகார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எழுந்தது. அவர்களை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முனைந்தனர். அப்போது வைரம் பட்டைத் தீட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோர் சந்தித்து, நாங்களும் ஒரு காலத்தில் பிளாட்பாரவாசிகளாக இருந்தோம், தற்போது தொழில் துவங்கி வரி செலுத்தி வருகிறோம். சூரத் மாநகராட்சி நிர்வாகம் இதை வைத்தே நடக்கிறது என்று எதிர்ப்பு தெரிவிக்கவே, வருங்கால தொழிலதிபர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை அதிகாரிகள் கைவிட்டனர்.
4: சூரத் வைர ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளவர்களில் 26 சதவீதம் பேர் கல்வியறிவு இல்லாதவர்கள். மீதமுள்ளவர்கள் பள்ளிக்கூட படிப்பு மட்டுமே படித்தவர்கள். தங்கள் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு உதவ ஆங்கில மொழி தெரிந்த பட்டதாரிகளை வேலைக்கு வைத்துக் கொள்கின்றனர். அவர்களை "ஆடிட்டர்' என்று அழைக்கின்றனர். ஆங்கில மொழி தெரியாத வெளிநாட்டு அதிபர்கள் வரும் போது மொழிபெயர்ப்பாளர்கள் உடன் வருவது போல, சூரத் தொழிலதிபர்கள் ஏற்றுமதி தொடர்பாக வெளிநாடுகளுக்கு செல்லும் போது இந்த "ஆடிட்டர்களை' உடனழைத்து செல்கின்றனர்.
புள்ளி விபரங்கள்:
சூரத் வைர தொழிலதிபர்களில்....
* உறவினரை பின்பற்றி தொழிலுக்கு வந்தவர்கள் 51 சதவீதம்* உறவினர் மூலம் முதலீடுக்கான தொகை பெற்றவர்கள் 90 சதவீதம்* தொழிலின் நடைமுறை மூலதனத்திற்கு சக தொழில்முனைவோரை சார்ந்திருப்பவர்கள்(கைமாற்றுதல் முறை): 60 சதவீதம், வங்கிகளை சார்ந்திருப்பவர்கள் 9 சதவீதம்* சூரத் நகரில் வசிக்கும் தொழில் முனைவோரின் சராசரி ஆண்டு வருமானம் 4.6 லட்சம் ரூபாய்* ஆண்டு மொத்த வர்த்தகம்: 50,000 கோடி ரூபாய்
* சூரத்தின் வளர்ச்சி விகிதம் 11.6 சதவீதம். இது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை காட்டிலும் அதிகம். இந்தியாவின் மிக வளர்ச்சி விகிதம் பெற்ற நகரங்களில் சூரத்தும் ஒன்று.
2 comments:
wonderful store. i am waiting for your other surat store
e-mail: somu_40222@yahoo.co.in
Thank you.
Post a Comment